Kathir News
Begin typing your search above and press return to search.

வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கு! இந்திய-இலங்கை உறவுகள் நிலை!

வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கு! இந்திய-இலங்கை உறவுகள் நிலை!

Saffron MomBy : Saffron Mom

  |  4 March 2021 1:30 AM GMT

இந்தியா தனது அண்டை நாடுகளுடன் சிறப்பான நல்லுறவை மேம்படுத்த பலவிதமான நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், அதற்கு சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவது வழக்கமான ஒன்றாகி வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான், சீனாவின் அடிமை போல் செயல்பட்டு கொண்டிருக்கிறது. நேபாள அரசியலில் சீனா நுழைந்து குட்டையை குழப்பி, இப்பொழுது அந்த நாடு அரசியலமைப்பு நெருக்கடியில் தவித்து வருகிறது.

தற்பொழுது இலங்கையில் முதலீடுகள் செய்து அதன் மூலம் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்த சீனா முயன்று வருகிறது. இது இலங்கையின் பாதுகாப்பு, அமைதி மற்றும் பொருளாதாரத்திற்கும் சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய இலங்கை அரசாங்கம் அதற்கு அடிபணிந்து வருவது போல் தெரிகிறது. இதுகுறித்து இலங்கையைச் சேர்ந்த சர்வதேச பாதுகாப்பு மற்றும் புவி சார் அரசியல் (geopolitics) ஆய்வாளர் அசங்கா அபேயாகுணசேகரா ORF ல் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதன் தமிழ் சாராம்சம் பின்வருமாறு.

இலங்கையின் கிழக்கு கொள்கலன் முனையம் (ECT) இந்தியாவிற்கு குத்தகைக்கு விடுவதாக ஒப்பந்தம் இருந்தது. இதனை கோத்தபாய ராஜபக்க்ஷேவின் அரசாங்கம் ரத்து செய்தது. உள்நாட்டு தொழிற்சங்கங்கள் அரசியல் மயமாகி இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசியல் ரீதியாக செல்வாக்குப் பெற்ற தொழிற்சங்கத்தின் வெற்றிகள், தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் இருந்து விலகி அரசாங்கத்த்தை மோசமான பாதைக்கு அழைத்து செல்கிறது.


ECT Port


வெளிநாட்டு சக்திகள் இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை கைப்பற்றும் என்று இலங்கையில் பீதி கிளப்பப்பட்டது. ஆனால் இதே அரசாங்கம் ஹம்பந்தோட்டா துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கிய போது இந்த அச்சமில்லை. இது நோய்வாய்ப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கீழே இழுத்துச் செல்லும்.


Hambandhota PORT


இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் இலங்கைக்கு வெற்றிகரமான தனது வருகையை சமீபத்தில் முடித்துக்கொண்டார். இலங்கையின் பிரபல செய்தித்தாள் தி சண்டே டைம்ஸ் இந்த ECT துறைமுகத்தின் ஒப்பந்தத்தை குறிப்பிட்டுப் பேசுகையில், சீனா மட்டுமே இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல தடையாக இருப்பதாக தெரிவித்திருந்தனர்.

சீனாவின் புவிசார் அரசியலும், அழுத்தங்களும் இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கும் திறனை பாதிக்கிறது. சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்து வருகிறது. ECT ஒப்பந்தம் இந்திய நிறுவனமான அதானி குரூப்பிற்கு மறுக்கப்பட்ட அதேவேளையில், இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய மற்றொரு கூட்டு ஒப்பந்த திட்டத்தை சீனாவிற்கு வழங்கியது. இது இந்தியப் பாதுகாப்புக்கும் ஒரு அச்சுறுத்தலாகும்.

புவிசார் அரசியல் இலங்கை- இந்திய உறவுகளில் முக்கியமான இடத்தை வகித்து வருவதோடு மட்டுமல்லாமல், சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் உறவுகளுக்கும் இது முக்கியமானது. இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகள் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் சமனாக செல்ல வேண்டும். சீனாவின் செல்வாக்கால் இந்திய-இலங்கை உறவுகளை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக புவிசார் அரசியலில் பலவீனமான நாடுகள் இரண்டு பெரிய நாடுகளுடனான உறவை சமன்படுத்தி செல்லாமல் ஒரு நாட்டுடன் அணிசேரும். இலங்கை தற்பொழுது பலவீனமாக உள்ளது, இதனால் சீனாவின் அணியில் சேர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே கண்களுக்கு தெரியாத சீனாவின் சங்கிலியால் கட்டப்பட்டு உள்ளார். இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு கடற்கரை பகுதிகளில் ஹம்பன்தோட்டா மற்றும் கொழும்பூர் துறைமுகம் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் ஒரு டெர்மினலை ஏற்கனவே சீனா முழுமையாக கட்டுப்படுத்துகிறது.

இந்த துறைமுகங்களின் முக்கியத்துவம் தான் இலங்கையின் புவிசார் அரசியலை உறுதி செய்கிறது. சீனா தன்னுடைய BRI திட்டத்தில் இலங்கையையும் இணைத்துள்ளது. நெடுங்கால திட்டத்தை கருத்தில் கொண்டு சீனா, இந்தியாவின் மற்றொரு முனையில் தன்னுடைய இருப்பை பதிவு செய்துள்ளது. மற்ற இரண்டு புள்ளிகள் சீனாவிற்கு பாகிஸ்தானிலும், மியான்மரில் உள்ளது. இந்த இரண்டு நாடுகளும் ஏற்கனவே சீனாவின் CPEC திட்டத்தில் ஒரு முக்கிய பகுதியாகும்.

எனவே வளர்ந்து வரும் சீனா, பாகிஸ்தான் மற்றும் சீனா மியான்மர் உறவுகளால், இந்தியா அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்க்க எடுத்துவரும் முயற்சிகள் தடைபடுகின்றன. புவிசார் அரசியலில் சில பல நகர்வுகளை சீனா ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவுடன் சமனான உறவுகளை வைத்துக் கொள்ளாமல் இலங்கை தன்னுடைய வாய்ப்புகளை பலமுறை எடைபோட்டு, பலமுறை மாற்றியுள்ளது.

ஒவ்வொரு ஆட்சி மாறும் போதும் இந்தத் திட்டங்கள் மாறி வந்தது அதனுடைய பலவீனத்தைக் காட்டுகிறது. 2015இல் சிறிசேனா விக்ரமசிங்கே அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பொழுது சீனாவின் அனைத்து திட்டங்களையும் ஆய்வு செய்து நிறுத்த முடிவு எடுக்கப்பட்டது. பல மாதங்களுக்குப் பிறகு அவர்கள் மறுபடியும் அதையே தொடங்கினர்.


ஆனால் இம்முறை அதிகப்படியான நிதி சுமை ஏற்பட்டது. கோத்தபய ராஜபக்சே 2019 இல் ஆட்சிக்கு வந்த பிறகு ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கு அளிக்கப்பட்ட 99 வருட குத்தகையை தான் மறுபடியும் சீராய்வேன் என்று வாக்களித்தார். ஆனால் சீனாவிடமிருந்து அதை மறுபடியும் பெறுவது கடினமானது.

அதற்கு சில நாட்கள் கழித்து ECT ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. சென்றஆட்சியில் பெறப்பட்ட The U.S. MCC grant, SOFA and Japanese LRT இந்த முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை ஆட்சி மாறும் பொழுதும் மாறும் ஒப்பந்தங்களும், திட்டங்களும் இலங்கையை பலவீனமாகியுள்ளன. பொருளாதார ரீதியில் பார்த்தால் இது மிகப்பெரிய இழப்பாகும். இது முதலீடு செய்பவர்களுக்கு தன்னம்பிக்கையை குறைக்கும். ஒரே அணியில் (சீனாவுடன்) சேராமல் உறவுகளை சமன் செய்து (இந்தியா,சீனா) நடப்பதே புத்திசாலித்தனமாக இருக்கும்.


(இந்நிலையில் நேற்று இலங்கை இன்னும் அதிக மதிப்புகளுடன் கூடிய மேற்கு கொள்கலன் முனையத்தை (WCT) இந்திய,ஜப்பான் முதலீடுகளுக்கு திறந்து விட்டுள்ளது. இது குறித்து இன்னும் அதிக தகவல்கள் வெளிவரவில்லை. பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல்.)


Reference: ORF

Next Story
கதிர் தொகுப்பு
Trending News