Kathir News
Begin typing your search above and press return to search.

உட்புற காற்று மாசுபாடு - திடுக்கிடும் தகவல்கள்!

உட்புற காற்று மாசுபாடு - திடுக்கிடும் தகவல்கள்!

Saffron MomBy : Saffron Mom

  |  19 March 2021 3:21 AM GMT

காற்று, வெளிப்புறத்தை விட உட்புறத்தில் அதிக அளவில் மாசடையும் என்று வளர்ந்து வரும் அறிவியல் ஆராய்ச்சி அமைப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. அதாவது சாலையில் உள்ள காற்று மாசுபாட்டை விட வீட்டிற்குள் காற்று மாசுபாட்டின் அளவு அதிகமாக உள்ளது. ஆனால் வெளிப்புறத்தில் உள்ள காற்றை மாசுபடாமல் பாதுகாக்க பல அமைப்புகள் உள்ளன அதில் அனைவரும் கவனம் செலுத்துகிறார்கள் ஆனால் உண்மையில் அதிக அளவில் ஆபத்தை விளைவிக்கும் உட்புற காற்று மாசுபாட்டின் மீது யாரும் சிறிதளவு கூட கவனம் செலுத்தவில்லை.

ஒரு ஆண்டிற்கு 8 மில்லியன் மரணங்கள் உட்புறம் மற்றும் வெளிப்புற காற்று மாசுபாட்டால் ஏற்படுகின்றது. உலக மொத்த மக்கள் தொகையில் 96 சதவீத மக்கள் உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதலை மீறி அதிக அளவில் காற்றை மாசுபடுத்துவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த காற்று மாசுபாடு தொழில் மயமாக்கப்பட்ட நாடுகளிலும் வளர்ந்துவரும் நாடுகளிலும் வாழும் மக்களின் அதிக அளவில் பாதிக்கிறது. ஆனால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் இதன் தாக்கம் விகித சாரமாக உள்ளது. காற்று மாசுபாட்டினால் ஏற்படும் இழப்புகளில் கிட்டத்தட்ட பாதி உட்புற மாசுபாட்டால் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடித்து உள்ளார்கள். நிமோனியா, பக்கவாதம், புற்றுநோய், சில இதய நோய்கள் போன்ற பயங்கரமான நோய்கள் உட்புற மாசுபாட்டினாலே வருகிறது.

வெளியில் உள்ள காற்று மாசுபாட்டை விட உட்புறத்தில் உள்ள காற்று மாசுபாடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று வளர்ந்துவரும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மக்கள் சராசரியாக 65 சதவீத நேரத்தை தங்கள் வீட்டிற்குள்ளேயே செலவிடுகிறார்கள். அமெரிக்காவில் சாலைகளில் உள்ள காற்று மாசுபாட்டை விட வீடுகளின் உள் இருக்கும் காற்று மாசுபாடு இரண்டு முதல் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் கண்டறிந்துள்ளது. ஒரு நேர உணவை சமைப்பதன் மூலம் உட்புற கால்சியத்தின் தரம் ஒரு கன மீட்டருக்கு 285 மைக்ரோ கிராமமை எட்டியதை கண்டுபிடித்துள்ளனர். மிக அதிக அளவில் காற்று மாசடைந்து காணப்படும் காலத்தில் டெல்லியில் வெளிப்புற காற்று மாசுபாட்டின் தரம் 225 மைக்ரோகிராம் ஆக இருக்கும்.

வீட்டில் பயன்படுத்தப்படும் பொதுவான பல பொருட்கள் வாயு அல்லது துகளை வெளியிடுகிறது. வீட்டின் உட்புறத்தில் இடைவெளி குறைவாக இருப்பதனால், வாயு மற்றும் துகளினால் ஏற்படும் காற்று மாசுபாடு மிகவும் மோசமான விளைவை விளைவிக்கிறது. இவ்வாறு வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களினால் மாசடையும் காற்றின் தரத்தை கட்டுப்படுத்துவது முடியாத ஒன்றாக உள்ளது மற்றும் இதனால் உடல்நிலையில் ஏற்படும் பாதிப்புகள் நீண்ட நாட்கள் வரையும் கூட விளைவை ஏற்படுத்துகிறன.

உட்புற காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் காரணங்களை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர். அவை,

1) வெளிப்புற காற்று தரம் மற்றும் மாசுபாடு.

2) வீட்டிற்குளே மனித செயல்பாடுகள்.

எடுத்துக்காட்டாக: இயற்கை எரிவாயு கொண்டு சமைத்தல், இல்லையென்றால் கார்பன் மோனாக்சைடு வெளியிடும் எரிவாயுவை கொண்டு சமைத்தல், ஃபார்மால்டிஹைடு போன்ற நச்சு வாயுவை வெளியிடும் அழகு சாதன பொருட்களை உபயோகித்தல், வீட்டினுள்புகை பிடித்தல், வீட்டை சுத்தம் செய்வதற்கு நச்சு வாயுவை வெளியிடும் ரசாயனங்கள் கொண்ட பொருட்களை உபயோகித்தல் போன்றவை.

3) நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள்.

வெளிப்புறத்தில் தொழிற்சாலைகளால் மற்றும் போக்குவரத்தினால் மாசுபடும் காற்று உட்புறத்திலும் பரவுவதால் உட்புற காற்று மாசுபாட்டின் அளவு அதிகரிக்கிறது. உட்புற காற்று மாசுபாட்டின் அளவு அதிகரிப்பதற்கு ரேடானும் ஒரு முக்கிய காரணம். இந்த ரேடான் இயற்கையாகவே சில கதிரியக்க பொருட்களில் இருந்து வெளியே வரும் வாயு, இது எளிதில் நிலத்தின் மூலமாகவோ அல்லது கட்டிடங்களில் உள்ள சிறு விரிசல்கள் வழியாகவோ வீட்டினுள் நுழைய கூடியது ஆகும். அமெரிக்காவில் புகை பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணம் இந்த ரேடானே ஆகும்.

உட்புற மற்றும் வெளிப்புற காற்று மாசடைவதால் புற்றுநோய், மாரடைப்பு, ஆஸ்துமா, சீரற்ற இதயத்துடிப்பு, நுரையீரல் செயல்பாடு திறன் குறைதல் முதலிய பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. வீட்டினுள் மெழுகுவர்த்தி ஏற்றுதல், செல்லப்பிராணிகளை வைத்திருத்தல், புகை பிடித்தல், சமைத்தல், நச்சுக் காற்றை வெளியீடும் பொருட்களால் வீட்டை சுத்தம் செய்தல் போன்ற மனித செயல்களினால் உட்புற காற்று மாசுபாட்டின் அளவு அதிகமாகிறது.

உலகளவில் 3 பில்லியன் மக்கள் இயற்கை எரிவாயு வான மரம், பயிர், சாணம், செடி கொடிகள் போன்றவற்றை கொண்டு சமைக்கிறார்கள்.இயற்கை எரிவாயுவை பயன்படுத்தாமல் புரோபேன் பயன்படுத்தும் மேம்பட்ட சமையல் அடுப்புகள் கூட கார்பன் மோனாக்சைடு, ஃபார்மால்டிஹைட், சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவற்றை வெளியிடுகிறது. இதனால் ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சனைகள் ஏற்படுகிறது.

வீடுகளில் நாம் அலங்காரத்திற்காக வைத்திருக்கும் பொருள்களில் பெரும்பாலானவை தூசி மற்றும் நச்சு வாயுவை வெளியிடுகிறது. பெரும்பாலும் காற்றை மாசுபடுத்தும் பொருட்களில் நிச்சயமாக ஈயம் மற்றும் ஆஸ்பெட்டாஸ் கலந்திருக்கும். நாம் வீட்டில் உபயோகிக்கும் மின்சார பொருட்களிலிருந்து நச்சு ரசாயனங்கள் ஆவியாகும் கரிம பொருட்கள் (VOC) வடிவில் வெளிவருகிறது. இரசாயன வாயுக்கள் அதிக அளவில் புற்றுநோய், கண், மூக்கு மற்றும் தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்தும் என்றும் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் பாதிப்பை உண்டாக்கும் என்றும் கண்டு அறியப்பட்டுள்ளது.

பொதுவாக நாம் வீட்டில் பயன்படுத்தும் மெத்தைகள், தரை விரிப்புகள், அழகு சாதன பொருட்கள் முதலியவற்றிலிருந்து தான் இந்த ரசாயனங்கள் வெளிப்படுகின்றன. இங்கிலாந்தில் 47 வீடுகளில் மேற்கொண்ட ஆய்வில் 45 சதவீத வீடுகளில் கட்டுப்பாட்டிற்கு அதிகமான அளவில் இரசாயன வாயுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ரசாயனம் ஆய்வுகளின் முக்கியமாக ஃபார்மால்டிஹைடு காணப்படுகிறது. இந்த பார்மால்டிஹைடு பொதுவான வீட்டு பொருட்கள் இருந்து வெளிப்படும் ஒரு வாயு, இது புற்றுநோய் மற்றும் பிற சுவாச பிரச்சனைகளை விளைவிக்கும்.

வீட்டினுள் சிறு பூச்சிகள், பாக்டீரியா மற்றும் பில நுண்ணுயிர்கள் இருக்கும், இவை காய்ச்சல், சுவாச தொற்று, ஒவ்வாமை செரிமான பிரச்சினைகள் போன்றவற்றை விளைவிக்கின்றன.

உட்புற காற்று மாசுபாடு வீடுகளுக்கு மட்டும் இல்லை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் பிற பொது கட்டிடங்கள் போன்ற அனைத்து உட்புற சூழல்களை கொண்ட கட்டிடங்கள் அனைத்திற்கும் ஒரு சவாலே. குழந்தைகள், முதியோர்கள், குறைந்த வருமானம் பெறுபவர்கள், சிறுபான்மையோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரே உட்புற காற்று மாசுபாட்டால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். உட்புற காற்று மாசுபாடு என்பது ஒரு பரவலான பிரச்சனை, இது மோசமான விளைவுகளை விளைவிக்கின்றது மற்றும் இது பல்வேறு சுகாதார பிரச்சினைகளுடன் இணைந்துள்ளது.

காற்று மாசுபாட்டின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் நம் ஆரோக்கியத்தை நம்மால் மேம்படுத்த முடியும். எனவே, உட்புற காற்று மாசுபாட்டின் அளவை குறைக்க வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது கட்டிடங்களில் ஒருங்கிணைந்து செயல்திட்டங்களை பின்பற்ற வேண்டும். தற்போது, உட்புற காற்று மாசுபாட்டை பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.‌‌ இறுதியாக, உட்புற காற்று மாசுபாட்டின் அளவை குறைக்க நாம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். ஏனென்றால், வெளிப்புறத்தில் உள்ள காற்று மாசுபாட்டை குறைக்க பலரும் முயற்சிக்கிறார்கள், நாம் உட்புற காற்றின் தரத்தை மேம்படுத்த முயற்சிப்போம்.

Reference : ORF

Next Story
கதிர் தொகுப்பு
Trending News