Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளாவில் மாறும் வரலாறு! படுதோல்வியடையப் போகிறதா காங்கிரஸ்?

கேரளாவில் மாறும் வரலாறு! படுதோல்வியடையப் போகிறதா காங்கிரஸ்?

Saffron MomBy : Saffron Mom

  |  17 March 2021 4:29 AM GMT

காங்கிரஸ் கட்சி தன்னுடைய கடைசிக் கோட்டைகளில் ஒன்றான கேரளாவில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. 2019 லோக்சபா தேர்தல்களில் பெரும் வெற்றி அடைந்திருந்தாலும், காங்கிரஸின் தலைமையில் இருக்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF), வரும் தேர்தல்களில் மோசமான தோல்வியை எதிர்நோக்கி காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கேரள அரசியல் இரண்டு முன்னணிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. இடதுசாரிகள் வழிநடத்தும் இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் வழிநடத்தும் ஐக்கிய ஜனநாயக முன்னணி. நாற்பது வருடங்களுக்கும் மேலாக இந்த கூட்டணிகள் நீடிக்கின்றன. இந்த இரண்டு முன்னணிகளும் 1982 இல் இருந்து மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன.

2021 தேர்தல் வரவிருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெறும் என்றும் ஆட்சியிலிருக்கும் பினராய் விஜயன் அரசாங்கம் தோல்வி அடையும் என்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பார்ப்புகள் பலமாகவே உள்ளன. ஆனால் யாரும் பேசாத ஒரு அமைதியும் நிலவுகின்றது.

ஐக்கிய ஜனநாயக முன்னணி(UDF) இருக்கும் பெரிய இரண்டு கட்சிகளான முஸ்லிம் லீக் மற்றும் கேரள காங்கிரசின் ஜோசப் பிரிவுக்கும் பிரச்சினைகள் உள்ளன. ஆனால் இந்த பிரச்சினையில் முக்கியமான விஷயம், காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிதான்.

உட்கட்சி மோதல்கள், கட்சியில் உள்ள குறைபாடுகள், குறைந்து வரும் வாக்காளர் தளம், தெளிவான தலைமை இல்லாதது, காங்கிரசுக்கு எதிராக வழிநடத்தப்படும் அரசியல் விவாதங்கள் ஆகியவை காங்கிரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன. இரண்டு வருடங்களுக்கு முன்தான் 2019ல் 20ல் 19 இடங்களில் வெற்றி பெற்று ஐக்கிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி அடைந்தது இப்பொழுது கற்பனை செய்ய முடியாததாக இருக்கலாம்.

ஆனால் அப்போது ஏற்பட்ட வெற்றிக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று சபரிமலை விவகாரத்தில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்பு, மற்றும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஹிந்துத்துவாவிற்கு எதிராக சிறுபான்மையினரால் ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு. மேலும் வயநாடு தேர்தலில் ராகுல் காந்தி நின்றது ஒரு பெரும் ஊக்கத்தை அளித்தது.

காங்கிரஸ் கூட்டணி முன் எப்போதுமில்லாத வகையில் 47.24 சதவீத ஓட்டுக்களை பெற்றது, இடதுசாரி கூட்டணி 35.11 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 15.5 % வாக்குகளை பெற்றது. இந்த முடிவுகள் இடதுசாரி கூட்டணிக்கு பெரும் அடியைக் கொடுத்தது. இதை சட்டசபை தொகுதிகள் வாரியாக பார்த்தால் இடதுசாரி கூட்டணி மொத்தத்தில் 16 தொகுதிகளில் மட்டுமே முன்னணியில் இருந்தது.

ஆனால் 2020 இல் நடந்த உள்ளாட்சித் தேர்தல்கள் மறுபடியும் முடிவுகளை திருப்பிப்போட்டது. இடதுசாரிக் கூட்டணி பெரும்பாலான கிராம, தொகுதி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து களையும் நகராட்சிகளையும் கைப்பற்றியது. இதன்படி நாம் தொகுதி வாரியாகப் பார்த்தால் இடதுசாரி கூட்டணி தான் 101 இடத்திலும், காங்கிரஸ் கூட்டணி 38 இடத்திலும் வெற்றி பெற்றிருக்கிறது.

2019ல் இடதுசாரி கூட்டணிக்கு கிடைத்த தோல்வி ஒரு தற்காலிகமான ஒன்று தான், மேலும் ஆளுங்கட்சி கூட்டணி ஊழல் மற்றும் தங்க கடத்தல் விவகாரங்களில் அதன் மீதான பழிகளை ஓரளவு மீறிக் கொண்டு வெளியே வந்து விட்டது எனத் தெரிகிறது. இரண்டு முடிவுகளுக்கும் இடையில் ஏன் இவ்வளவு வேறுபாடு என்பதற்கு பல விளக்கங்கள் இருந்தாலும், இப்பொழுது கவனம் காங்கிரஸ் மீது மட்டுமே உள்ளது.

அதன் நிறுவன தோல்விகளும் உள்ளாட்சித் தேர்தல்களில், வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சினைகளும் தான் இதற்கு காரணம். ஆனாலும் இத்தனை மாற்றங்களுக்கு முக்கியமான காரணம் காங்கிரஸை கைவிட்ட கிறிஸ்தவ சமூகம் தான். கூட்டணியில் முஸ்லிம்லீக் மிகவும் அதிகப்படியான செல்வாக்கு மற்றும் ஆதிக்கம் செலுத்துவதாகவும், பொருளாதார ரீதியில் பலவீனமான பிரிவினருக்கு ஒதுக்கீடு கொடுப்பதை முஸ்லிம்கள் எதிர்ப்பதாலும், கட்டாய மதமாற்றங்கள் என்ற லவ் ஜிகாத் விவகாரங்களும் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் கூட்டணி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் மேல்தட்டு சமூகம் தங்களுடைய வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட ஒரு கூட்டணியாக இருந்தது. இது கம்யூனிஸ்டுகளின் புரட்சிகர சிந்தனைகளுக்கு எதிர்வினையாக உருவானது. 2011 முதல் இக்கூட்டணியில் ஏற்பட்டு வரும் பிளவுகள் பெரிதாகி, வரும் சட்டமன்றத் தேர்தலுடன் முழுவதுமாக உடைந்து விடும் என்று எதிர்பார்க்கலாம்.

காங்கிரஸிற்கு ஓட்டுப்போடும் நாயர் வாக்காளர் தளம் குறிப்பாக திருவிதாங்கூர் மற்றும் கொச்சி பகுதிகளில் காங்கிரசை விட்டு விலகி பா.ஜ.கவில் இணைந்து வருகின்றனர். பா.ஜ.கவின் தற்போதைய பெருமளவு வளர்ச்சி பெரும்பாலும் காங்கிரஸ் ஓட்டு தளங்களில் இருந்துதான் வந்திருக்கிறது, கம்யூனிஸ்ட் கட்சியை அது குறைவாகவே பாதிக்கிறது.

மலபார் பகுதியிலும் கூட கட்சி தொண்டர்களும் உள்ளூர் தலைமையும் காங்கிரஸிலிருந்து பா.ஜ.கவிற்கு சென்று சேர்ந்துள்ளனர். இத்தகைய விவகாரங்களும் மற்ற பல விஷயங்களுடன் சேர்த்து 2016ல் காங்கிரஸ் தோல்வி அடைய காரணமாயிருந்தது. திருவனந்தபுரம் நகராட்சியில் தற்போதைய பெரும்பாலான போட்டிகள் பா.ஜ.க விற்கும் கம்யூனிஸ்ட்க்கும் இடையில் தான் நிகழ்கிறது.

பா.ஜ.கவிற்கு எங்கெல்லாம் ஓட்டு பங்கு அதிகரித்து இருக்கிறதோ அங்கெல்லாம் காங்கிரசிற்கு குறைந்திருக்கிறது. மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இடதுசாரிகளை பாதித்திருக்கிறது. கிறிஸ்தவ பிரிவுகளின் நிலைமைகளில் மாறுதல்களை அடைந்தது. காங்கிரஸ்ஸின் வாக்காளர் தளம் சுருங்கிக் கொண்டு வருகிறது.

முஸ்லிம்களின் வளர்ந்துவரும் செல்வாக்கு மற்றும் ஆதிக்கம் காரணமாக இரண்டு சிறுபான்மை சமூகத்தினர் இடையே பெரிய பிளவுகள் ஏற்பட்டு வருகிறது. லவ் ஜிகாத் என்பது ஊடகங்கள் முக்கியத்துவமாக காட்டும் விஷயமாக இருந்தாலும், சிறுபான்மையினருக்கு ஒதுக்கும் ஸ்காலர்ஷிப் கல்வி உதவித் தொகையில் முஸ்லிம்கள் 80% பெறுவது, பொருளாதார ரீதியாக பலவீனமான வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பது, ஆகியவை தான் பிளவுக்கு முக்கிய காரணமாகும்.

இதனுடன் பல்லாண்டு காங்கிரஸ் தலைவர் கே.எம் மணியின் மகன் ஜோசப் மணி இடதுசாரி கூட்டணியில் சேர்வது ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கிறிஸ்தவ சமூகத்தின் ஒரு குறிப்பிடத்தகுந்த பிரிவு இடதுசாரி கூட்டணிக்கு ஓட்டளிப்பது போல் தெரிகிறது. மிகவும் அதிகமாக இருக்காது, ஆனால் குறைந்த அளவு மாறுதல்கள் கூட தேர்தல் முடிவுகளை கம்ம்யூனிஸ்ட் கட்சிக்கு சார்பாக மாற்றலாம்.

கிறிஸ்தவ சமூகம் பல வழிகளில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விரோதமானது, ஆனால் தற்போது நிலவரம் மாறிவிட்டது. கள நிலவரத்தை புரிந்து கொண்டு, முஸ்லிம் லீகை ஒரு மதவாத கட்சி என்றும் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகனின் சர்ச்சைப் பற்றி கூறிய அநாகரிகமான கருத்துக்களையும் அடிக்கோடிட்டு காட்டி, ஒரு மிகப்பெரிய சமூக கூட்டணியை உருவாக்க முன்னெடுத்து வருகிறது கம்யூனிஸ்ட் கட்சி.

பி.சி.சாக்கோ காங்கிரஸின் ஒரு மூத்த தலைவர். சமீபத்தில் மாநில தலைமையினால் புறக்கணிக்கப்படுவதாக கூறி ராஜினாமா செய்தார். சாக்கோவின் செல்வாக்கு கிட்டத்தட்ட முடிந்து போய்விட்டு இருந்தாலும், அவர் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறினார். கேரளாவில் காங்கிரஸ் என்று ஒன்று இல்லை, இரண்டு உள்ளன. காங்கிரஸ் A மற்றும் காங்கிரஸ் I, இந்த இரண்டு பிரிவுகளும் 30 வருடங்களாக ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன.

முன்னர், ஏகே ஆண்டனி மற்றும் கருணாகரன் தலைமையில் இருந்த இந்த இரண்டு பிரிவுகளும் தற்பொழுது உம்மன் சாண்டிமற்றும் ரமேஷ் சென்னிதாலாவின் தலைமையில் சண்டையில் தொடர்கின்றன. லோக்சபா சீட்டுகள், நிறுவன பதவிகளில் இருந்து உள்ளூர் கவுன்சிலர் பதவிகளிலிருந்து எல்லாமே இந்த இரண்டு பிரிவுகளின் அடிப்படையில்தான் காங்கிரசுக்குள் ஒதுக்கப்படுகிறது. சில சமயங்களில் ஒரு பிரிவு மற்றொரு பிரிவை முதுகில் குத்தி இடதுசாரிகளுக்கு வெற்றிவாய்ப்பை வழங்கியதும் உண்டு.

மார்ச் 14 அன்று சட்டசபை இட ஒதுக்கீடு குறித்து பல போராட்டங்கள் வெடித்தது. காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி பொது இடத்திலேயே தனது தலையில் மொட்டை போட்டுக்கொண்டு கட்சி தலைமையகம் முன்பு சென்று போராட்டத்தில் அமர்ந்தார். வெறும் 9 பெண்களுக்கு மட்டுமே இடம் வழங்கி இருப்பதாகவும் தனக்கு இடம் கொடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இருக்கூர் பகுதியில் A பிரிவினர் கடும் எதிர்ப்பு காண்பித்து வருகின்றன. இது கண்ணூர் மாவட்டத்தில் முழுவதுமே காங்கிரசை பாதிக்கலாம். காங்கிரஸ் ஒரு முப்பது வருடங்களுக்கும் மேலாக இருகூரில் வெற்றி பெற்று வருகின்றனர்.

இத்தகைய பிரச்சினைகள் காங்கிரஸில் எளிதாக முடித்து வைக்க முடியாது. எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தாலும் இந்த முறை அவர்கள் கீழே விழுவதற்கு தான் வாய்ப்பு அதிகம். காங்கிரஸ் இதுவரை பயன்படுத்தி வந்த சமூக கூட்டணி தோல்வியடையும் பட்சத்தில் ஒரு வெற்றிடம் உருவாகி அது வேறு ஒரு கட்சியால் நிரப்பப்படும். 2021 ஆம் வருடம் நடக்கும் இந்த சட்டசபை தேர்தல்கள் காங்கிரஸிற்கு சாவுமணி அடிக்கலாம். இரண்டு கட்சிகள் மட்டுமே கேரளாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் சுழற்சி இதனுடன் முடிவுக்கு வரலாம்.

References and Inputs From: Swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News