Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா-பாகிஸ்தான் இடையில் நிலையான அமைதி சாத்தியமா? ஓர் பார்வை.!

இந்தியா-பாகிஸ்தான் இடையில் நிலையான அமைதி சாத்தியமா? ஓர் பார்வை.!
X

Saffron MomBy : Saffron Mom

  |  10 March 2021 4:50 AM GMT

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பரவும் வதந்திகள் பெரும்பாலும் உண்மையாக இருப்பதில்லை. இந்திய- பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு அமைப்பின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் ஒரு ரகசிய சந்திப்பு நடந்தது நடந்ததாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வதந்திகள் பரவி வந்தது.

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இஸ்லாமாபாத் சென்றதாக கூட வதந்திகள் பரவியது. இதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. மற்றொன்று, இரு நாடுகளுக்கும் திரைக்குப் பின்னால் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறியது. ஆனால் இந்த முறை வதந்திகள் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்திய-பாகிஸ்தான் ராணுவம் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் (LoC) மற்றும் சர்வதேச எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தன. இது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர்கள் (DGMO) தொலைபேசி அழைப்பின் பின்னால் போர்நிறுத்தத்த ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

வன்முறைக்கு வழி வகுக்கும் மற்றும் அமைதியை குலைக்கும் விஷயங்களைக் குறித்த சர்ச்சைகள் மற்றும் கவலைகளை விவாதிக்க இருநாட்டு ராணுவத்தினர் ஒப்புக் கொண்டதாகவும் கூறினர்.

இத்தகைய கூட்டு அறிக்கைகள் வெளியான சில பல மணி நேரங்களுக்கு பின்னர், ஒரு இந்திய தேசிய பத்திரிகை, இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு துணை உதவியாளர் மொயீத் யூசப் இடையிலான திரைக்குப் பின் நடந்த பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்டது எனத் தெரிவித்தது.

இந்த அறிக்கை இந்த இரண்டு அதிகாரிகளும் ஒருமுறையாவது ஏதாவது ஒரு மூன்றாவது நாட்டில் சந்தித்ததாகவும் உறுதிசெய்தது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர இந்த அறிக்கைகளும், பாகிஸ்தான் ராணுவ தளபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமரின் அறிக்கைகளும் உறுதி செய்கின்றன.

2020 அக்டோபரில் இந்தியா பேச்சுவார்த்தைக்கு விரும்புவதாக ஒரு பேட்டியில் யூசப் மொயிது தெரிவித்திருந்தார். இதை இந்தியா நிராகரித்தது. பின்னர் இதே யுஸஃப் தனக்கும் அஜித் டோவலுக்கும் இடையில் எந்தவித பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என்று தெளிவுபடுத்தி இருந்தார்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசம் ஆக்கும் முடிவு இந்தியா-பாகிஸ்தான் இடையிலான விரோதத்தை மேலும் அதிகரித்தது. 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி கொண்டுவரப்பட்ட இத்தகைய மாற்றங்களுக்கு பின்னர் பாகிஸ்தான், இந்தியாவுடனான தனது உறவை குறைத்துவிட்டது.

இந்தியாவிற்கான பாகிஸ்தானின் ஹை கமிஷனரை திரும்ப அழைத்துக் கொண்டு இரு நாடுகளுக்கு இடையிலான வான்வெளியை ஓரளவு மூடி, வர்த்தகத்தை நிறுத்தி, இருதரப்பு ஒப்பந்தங்கள் மறு ஆய்வு செய்வதாக அறிவித்தது.

அதற்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தானின் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தான், பதற்றங்களை தணிக்க எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கையாகும். இதன் பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருநாடுகளும் ஹை கமிஷனர்களை மறுபடியும் அனுப்பலாம். பாகிஸ்தானில் சார்க் மாநாடு நடைபெற இந்தியா அனுமதி வழங்கலாம். இதனால் பிரதமர் மோடி இஸ்லாமாபாத் செல்லும் வாய்ப்பும் ஏற்படலாம்.

இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இரு நாட்டு ராணுவத்தினருக்கு மட்டும் நல்ல செய்தி அல்ல, ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கும் நல்ல செய்தியாகும்.

2020ல் மட்டும் 5500 போர் நிறுத்த மீறல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை 36 பேரின் உயிரை பலி வாங்கியது, இதில் 24 பாதுகாப்பு படை வீரர்களும் அடங்குவர். 130 பேர் காயமடைந்தனர். இந்த சமயத்தில் தான் இந்திய ராணுவம் கிழக்கு லடாக்கில் சீனாவை எதிர்த்து நின்றது. 2019 இல் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் 3289 போர்நிறுத்த மீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய ஒப்பந்தம் இந்த வன்முறையை சற்று குறைத்து உள்ளூர் மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தலாம். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ வாபஸ் பெற்ற பிறகு, இந்தியாவுடைய நோக்கம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் திரும்பப் பெறுவதற்கு திரும்பியது. காஷ்மீரை திரும்பப் பெறுவது தான் இந்தியாவிற்கு அடுத்த கட்டமாக இருக்கும் என்று கருதப்பட்டது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் புல்வாமா தாக்குதல்களுக்குப் பிறகு மிகுந்த கவனத்தைப் பெற்றது. பெரிய நாடுகள் எல்லாம் இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தை குறைக்குமாறு கேட்டுக் கொண்டன. போரின் விளிம்பில் நின்ற இரு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து உலகம் கவலை கொள்ள ஆரம்பித்தது.

இந்த கவனம் ஆகஸ்ட் 5, 2019ப்பிறகு மிகவும் அதிகரித்தது. இப்படிப்பட்ட சூழலில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களை தணிக்க ராஜதந்திர ரீதியில் அழுத்தங்கள் இருந்திருக்கலாம். இரு நாடுகளும் வேறுபாடுகளை தீர்க்க ஓரளவுக்கு முயற்சி செய்யும் என ஒரு நேர்மறையான செய்தியை உலகத்திற்கு அளிக்க விரும்பியிருக்கலாம்.

ஆனால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இத்தகைய அமைதி சாத்தியமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறிதான். இரு நாடுகளும் எல்லையில் அமைதியை நிலைப்படுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டது இது முதல்முறை அல்ல. 2003இல் மேற்கொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த 2018 இல் ஒப்புக் கொள்ளப்பட்டாலும், மற்றொரு மோசமான சம்பவம் நடைபெறும் வரையில் மட்டுமே அது நடைமுறையில் இருந்தது.

எனவே இதுவும் அதே வழியில் சென்று விடும் என்று சந்தேகிப்பதும் சரிதான். வரும் காலங்களில் எப்படி நிகழ்வுகள் நடக்கின்றன என்பதை பொறுத்து இது மாறுபடும். புல்வாமா தற்கொலை தாக்குதல் போன்ற ஒரே ஒரு தாக்குதல் கூட இரண்டு நாடுகளையும் போரின் விளிம்பில் கொண்டு வந்து சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News