Kathir News
Begin typing your search above and press return to search.

பலமுறை விழுந்தும் சிரித்துக் கொண்டே மீண்டும் எழுந்து, தன் கனவு மாளிகையை கைப்பற்றிய ஜோ பைடன்!

பலமுறை விழுந்தும் சிரித்துக் கொண்டே மீண்டும் எழுந்து, தன் கனவு மாளிகையை கைப்பற்றிய ஜோ பைடன்!

பலமுறை விழுந்தும் சிரித்துக் கொண்டே மீண்டும் எழுந்து, தன் கனவு மாளிகையை கைப்பற்றிய ஜோ பைடன்!

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  9 Nov 2020 9:12 AM GMT

அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நீண்ட இழுபறிக்குப் பின் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் 1900ம் ஆண்டுக்குப் பின் அதிக சதவீத வாக்காளர்கள் இந்த முறைதான் வாக்களித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதுவரை பைடன் 74 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளார். இது வரலாற்றில் இதுவரை எந்த அதிபர் தேர்தல் வேட்பாளரும் பெற்றிராத வாக்குகள் என கூறப்படுகிறது.

தற்போது 77 வயதாகும் ஜோ பைடன்தான் அமெரிக்க வரலாற்றிலேயே அதிக வயதில் அதிபராகப் பதவியேற்கும் முதல் நபர் ஆவார். அதிபர் பதவி இவருடைய நீண்ட காலக் கனவு என கூறப்படுகிறது. ஆனாலும் இவருடைய தளராத முயற்சியால் இப்போதுதான் அதிபராக முடிந்தது எனக் கூறபபடுகிறது. கிட்டத்தட்ட 50 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் இருந்து வரும் ஜோ பைடனின் வாழ்வில் சோகமும், வலியும் மிகவும் அதிகம் என கூறபபடுகிறது.

1942ஆம் ஆண்டு வடகிழக்கு பென்சில்வேனியாவின் ஸ்க்ரேன்டன் நகரில் ஒரு எளிய குடும்பத்தில் ஜோ பைடன் மூத்த மகனாகப் பிறந்தார். அவரது தந்தை ஜோசஃப் ராபினெட் பிடன் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் ஒரு வியாபாரி ஆவார். ஆரம்பத்தில் நல்ல வசதியோடு இருந்த அந்தக் குடும்பம், ஜோ பைடனின் பிறப்பின்போது மோசமான வறுமைக்குத் தள்ளப்பட்டது. பைடனுக்கு ஒரு தங்கை, இரு தம்பிகள் என்று உடன் பிறந்தவர்கள் மூவர்.

பள்ளிப் பருவத்தில் கால்பந்து மற்றும் பேஸ்பால் உள்ளிட்ட விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார் பைடன். மிகவும் துணிச்சல் உள்ளவராக இருந்தார் எனவும் கூறபபடுகிறது. இளம் வயதிலிருந்தே அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

1972ஆம் ஆண்டு நாற்பதெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க செனட் சபை உறுப்பினர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான கேலப் பாக்ஸ் என்பவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டார் ஜோ பைடன். கையில் பணமே இல்லாமல் தனது குடும்பத்தினர், நண்பர்கள் உதவியுடன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு டெலவர் மாகாணத்தின் பெரும்புள்ளியாகத் திகழ்ந்த கேலப் பாக்ஸை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார் ஜோ பைடன். அப்போது அவருக்கு வயது 29. அமெரிக்க வரலாற்றிலேயே மிக இளம் வயதிலேயே செனட் சபை உறுப்பினரான ஐந்து நபர்களுள் ஐவரும் ஒருவர்.

அதன்பின் அரசியலில் படிப்படியாக மேலும் உயர்ந்த ஜோ பைடன் சிறந்த சீனியர் செனட்டராக இருந்த போதும் அமெரிக்க அதிபராக வேண்டும் என்ற அவருடைய கனவு பல முறை தோல்வியில் முடிந்தே உள்ளது. 1987ஆம் ஆண்டில் ஒரு முறையும், 2008ஆம் ஆண்டில் இரண்டாவது முறையும் அதிபராகும் போட்டியில் இருந்த அவரால், தனது 77ஆவது வயதில்தான் அப்பதவிக்கான போட்டியில் முதலிடத்துக்கு முன்னேற முடிந்திருக்கிறது.

எளிய தேர்தல் பிரச்சாரம், மக்களை கவர்ந்திழுக்கும் வசீகர வார்த்தைகள், தாழ்மையுடன் நடந்து கொள்ளும் அவரது உயர் பண்பு, அனுதாப பார்வையுடன் அடித்தட்டு மக்களை அணுகும் போக்கு பைடனுக்கு அமெரிக்க வாழ் மற்ற நாட்டு வம்சாவளியினர் இடையே ஆதரவை பெருக்கியுள்ளது என கூறப்படுகிறது.

தன்னை விட வயதில் மிகவும் இளையவரும், கட்சியில் ஜூனியராகவும் இருந்தவர் பராக் ஒபாமா, கட்சி ஒபாமாவுக்காக இவரை விட்டுக் கொடுக்க சொன்னது. எதிர்ப்பில்லாமல் விட்டுக் கொடுத்தார் ஜோ பைடன். அது மட்டுமல்ல 8 ஆண்டு காலம் அதிபர் பராக் ஒபாமாவின் துணை அதிபராக அவருக்கு கீழ் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் பணியாற்றினார்.

சென்ற 2015ல் அவரது மகன் பியூ மூளை புற்று நோயால் தமது 46வது வயதில் இறந்தார். 2016ல் அதிபர் பதவிக்கான போட்டியில் தான் ஈடுபடாததற்கு இது ஒரு காரணம் என்று பைடன் ஏற்கனவே கூறியுள்ளார். இந்நிலையில் அவர் இன்று மகத்தான வெற்றி பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல் ஜோ பைடன், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் துணை அதிபரையும் தம்முடன் வெற்றிப்பாதையில் அழைத்து வந்திருக்கிறார், அவர்தான் கமலா ஹாரிஸ் எனப்படும் நம் இந்திய வம்சா வழியினர்.

அதிபராக வேண்டும் என்ற தனது நாற்பது ஆண்டுகள் இலட்சியத்தை ஜோ பைடன் தனது மிகவும் வயதான கால கட்டத்தில், பல துன்பங்கள், இடைஞ்சல்கள் இடையே இன்று அடைந்துள்ளார். தனது முயற்சியில் தளராத மனம் உடைய அவர் சொந்த வாழ்க்கை பல சோகங்கள் நிரம்பியது. இளமையில் அனுபவித்த வறுமை ஒரு புறம், இன்னொரு புறம் தனது 29 ஆம் வயதில் 1972ல் நடந்த ஒரு கார் விபத்தில் அவர் தமது முதல் மனைவி நெய்லியா மற்றும் பெண் குழந்தை நவோமி ஆகியோரை இழந்தார்.

இந்த துன்பத்தில் இருந்து அவர் வெளிவர வெகு காலம் ஆனது. ஜோ பைடன் தனது முதல் மனைவி விபத்தில் இறந்த பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து ஜில் பைடன் என்ற பள்ளி ஆசிரியையை திருமணம் செய்துகொண்டார். ஜோ பைடன் குறித்து அமெரிக்காவில் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க வாழ் இந்தியரான தமிழ் எம்.பி ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில் "ஜோ பைடன் நேர்மையான அரசியல்வாதி என்றார். மேலும் ஜோ பைடனும் அதிபர் டிரம்ப் போல இந்தியாவுக்கு நெருங்கிய நண்பர்தான்.

அவர் செனட் உறுப்பினராக இருக்கும்போதுதான் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவுக்காக பரிந்து பேசியவர் அவர், துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ள கமலா ஹாரீஸ் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். இவரும் இந்தியாவுடன் நெருங்கிய நட்பில் உள்ளார். இருவராலும் இந்தியாவுடனான அமெரிக்க நட்பு மிகவும் நெருக்கமாகவே இருக்கும்" என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News