Kathir News
Begin typing your search above and press return to search.

"கார்கில் வெற்றி தினம்" - எதிரிகளை விரட்டியடித்து வெற்றிக்கொடி நாட்டிய நாள்! #KargilVijayDiwas

கார்கில் வெற்றி தினம் - எதிரிகளை விரட்டியடித்து வெற்றிக்கொடி நாட்டிய நாள்! #KargilVijayDiwas

Saffron MomBy : Saffron Mom

  |  26 July 2021 3:11 AM GMT

"நான் வெற்றிகரமாக இந்தியக் கொடியை உயர்த்திய பின் திரும்பி வருவேன் அல்லது அதில் நான் மூடப்பட்டு திரும்பி வருவேன். ஆனால் நான் உறுதியாக வருவேன்."

கேப்டன் விக்ரம் பத்ரா கடைசியாகத் தன் வீட்டிற்கு ஹோலி விடுமுறைக்கு வந்த போது கூறிய வார்த்தைகள் இவை. Yeh Dil Maange More என ஆர்ப்பரித்த அந்த இளம் வீரன், அடுத்த முறை வீட்டிற்கு வந்த போது, தான் கூறியது தேசியக் கொடி தன் உடல் மீது போர்த்தி தான் வந்தார். எதிரியை சின்னாபின்னாமாக்கி, அதே கொடியை வெற்றிகரமாக ஏற்றிய பிறகு.


இது போல எண்ணற்ற தியாகங்களும், வீரமும் நிறைந்த இந்திய ராணுவத்தின் உயரிய மரபைத் தான் விக்ரம் பத்ரா பின் தொடர்ந்தார். தன் மகன்களுக்கு பதிலாக தேசியக் கோடியை பெறும் பெற்றோர்களின் மனதிடம் தான் நாம் பாதுகாப்பாக தூங்க காரணமாய் இருக்கிறது. 1999-ம் ஆண்டின் கோடை காலத்தில் ,தாய் மண்ணை எதிரிகளிடமிருந்து மீட்க , கேட்டாலே புல்லரிக்க வைக்கும் சாகசக் கதைகளில் சிந்திய ரத்தங்களையும், தயங்காமல் செய்த தியாகங்களையும் தன்னுள்ளே அடக்கியது தான் 'ஆபரேஷன் விஜய்'. அது நிறைவடைந்து, நாம் எதிரிகளை துரத்தியடித்து வெற்றிக்கொடி ஏற்றிய நாளே, கார்கில் விஜய் திவாஸ். என்ன நடந்தது, எப்படி நடந்தது என நினைவு கூர்வோம்.

கார்கில் போர் நிறைவடைந்து இன்றுடன் 21 வருடங்கள் ஆகிறது. இந்தியா-பாகிஸ்தான், இரு நாடுகளும் அணு ஆயுத நாடுகள் என்று ஆன பிறகு (1998-க்கு பிறகு) நேரடிப் போர், பேரபாயத்தை ஏற்படுத்தும் என்ற சூழலில், இரு நாடுகளும் அமைதி சூழலை ஏற்படுத்த முழு முயற்சியில் ஈடுபடும் என நம்பப்பட்டது. அதில் ஒரு பாதி நிறைவேறியது. இந்தியா, அமைதிக்காக என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்தது. நம் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், லாகூர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட, பிப்ரவரி 21,1999 அன்று முதல் முறையாக இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே அறிமுகமான பேருந்தில் சென்றார். அணு ஆயுத சூழல், அமைதிக்காக போடப்பட்ட இந்த ஒப்பந்தம் மிகவும் பிரபலமானது. அப்பபோதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இதில் கையெழுத்திட்டார்.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி பார்வேஸ் முஷாரப்க்கு இதில் உடன்பாடில்லை எனக் கூறப்பட்டது. .அதை நிரூபிக்கும் விதமாக, ஒப்பந்தம் போடப்பட்டு மூன்று மாதங்களுக்குள், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், காஷ்மீர் தீவிரவாதிகளைப் போல் வேடமிட்டு இந்திய எல்லைக்குள் ஊடுருவினர்.மூலோபாய ஆய்வாளர் லெப்டினென்ட் கர்னல் சி ஆர் சுந்தர் (ஓய்வு) கூறுகையில், கார்கில் போர் முஷாரப்பின் தனிப்பட்ட லட்சியத்தால் ஏற்பட்டது என்றும் 1984-ல் சியாச்சர் பனி சிகரத்தை இந்தியாவிடம் இழந்த படையில் இருந்த முஷாரப்பிற்கு,கார்கிலை கைப்பற்ற வேண்டும் என்பது பல்லாண்டு ஆசை எனவும், இதற்கான திட்டம் 1998-ல் அவர் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டவுடன் செயல்படுத்தப்பட ஆரம்பித்தது என்றும் கூறுகிறார்.

எளிதாகப் புரிந்து கொள்வதற்காக நாம், கார்கில் போரை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிலாம். காஷ்மீரி தீவிரவாதிகளைப் போல் வேடமிட்டு, கார்கிலை ஒட்டிய இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் நுழைந்து குறிப்பிடத்தக்க அளவு பகுதிகளையும்,முகடுகளையும் ஆக்கிரமித்தது.

இந்தியா இதைக் கண்டறிந்து, இழந்த பகுதிகளை மீட்க படைகள் திரட்டி தாக்குதலை ஆரம்பித்தது. இந்தியப் படையினருக்கும், பாகிஸ்தான் படையினருக்கும் இடையே நடந்த பெரிய அளவிலான போர் மற்றும் எதிரிப் படைகளை நம் இடத்தில் இருந்து துரத்தியடித்து நிலைமையை முன்பிருந்தது போல் மாற்றிய இந்தியாவின் வெற்றி. கார்கில் நகரம் ஸ்ரீநகரிலிருந்து 205 கி.மீ (127 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. கார்கில் குறி வைக்கப்பட்டதற்கு காரணம் அதன் நிலப்பரப்பு பல இராணுவ நிலைகளை முன்கூட்டியே கைப்பற்றுவதற்கு ஏற்றதாக இருந்தது. அந்த மலை முகடுகளை கைப்பற்றிய பிறகு தற்காத்துக் கொள்வது மிக சுலபம்.

மலை சூழல் யுத்தத்தில் ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றுவதற்கான எந்தவொரு தாக்குதலுக்கும் பாதுகாவலர்களுக்கு தாக்குதல் நடத்துபவர்களின் விகிதம் மிக அதிகமாக தேவைப்படுகிறது, மேலும் உயரம் மற்றும் உறைபனி வெப்பநிலையால் சிரமங்கள் அதிகரிக்கும். மே மாத ஆரம்பத்தில், பாகிஸ்தான் படையினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ ஆரம்பித்தது உள்ளூர் ஆடுமேய்ப்பர்களால், இந்திய ராணுவத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. இதைக் கண்காணிக்க ரோந்துப் பணியில் சென்ற 5 இந்திய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். மே 15, 1999 அன்று, 4 வது ஜாட் ரெஜிமென்ட்டின் வீரர்களான காலியா, அர்ஜுன் ராம், பன்வர் லால் பகாரியா, பிகா ராம், மூலா ராம் மற்றும் நரேஷ் சிங் ஆகியோர், லடாக் மலைகலில் இருந்த காக்ஸர் செக்டர் பஜ்ரங் போஸ்டில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் படைகளுடன் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. வெடிமருந்து தீர்ந்த நிலையில், பாகிஸ்தான் ரேஞ்சர்களின் படைப்பிரிவால் சூழப்பட்டு, இந்திய வலுவூட்டல்கள் அவர்களை அடைவதற்குள் அவர்கள் கைப்பற்றப்பட்டனர் . அவர்கள் பலவிதமான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டது இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் இதை முழுவதுமாக மறுத்தது.

இதுவரை, வழக்கமான காஷ்மீர் தீவிரவாதிகளின் கைவரிசை என நம்பி வந்த இந்தியா, ஆக்கிரமிப்பின் தீவிரத்தை உணர்ந்து பதில் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது. போரின் சுருக்கமான காலக்கோடு பின்வருமாறு.

மே 3-ம் தேதி, கார்கிலில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடுருவல் உள்ளூர் மேய்ப்பர்களால் இந்திய ராணுவத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. மே ஐந்தில் இதைக் கண்காணிக்க ராணுவ ரோந்து அனுப்பப்பட்டது; 6 இந்திய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். மே 9-ல் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய கடும் ஷெல் தாக்குதலில் கார்கிலில் வெடிமருந்து dump சேதமடைந்துள்ளன. மே 10-ல் ஊடுருவல்கள் முதலில் டிராஸ், கக்சர் மற்றும் முஷ்கோ செக்டார்களில் கவனிக்கப்பட்டன.

மே மாத மத்தியில் இந்திய ராணுவம் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து கார்கில் செக்டருக்கு அதிகமான ராணுவத்தை நகர்த்தியது. மே 26-ல் IAF, ஊடுருவல்களுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை தொடன்கியது. மே 27-ல் இரண்டு பாகிஸ்தான் இராணுவ வான் பாதுகாப்பு படையாழ் நமது விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு, லெப்டினென்ட் கம்பம்பதி நாச்சிகேதா போர்க்கைதியாக சிறை பிடிக்கப்பட்டார். மே 28-ல், IAF MI-17 பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டு அதில் இருந்த நான்கு பேர் இறந்தனர். ஜூன் 6ல் இந்திய இராணுவம் கார்கிலில் பெரும் தாக்குதலைத் தொடங்கியது. ஜூன் 9ல், இந்திய இராணுவம் படாலிக் துறையில் இரண்டு முக்கிய இடங்களை மீண்டும் கைப்பற்றுகிறது. கார்கில் போரில், பாகிஸ்தான் இராணுவத்தின் தலையீட்டிற்கு சான்றாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் மற்றும் ராவல்பிண்டியில் ஜெனரல் ஸ்டாஃப் தலைமை லெப்டினன்ட் ஜெனரல் அஜீஸ் கான் ஆகியோருக்கு இடையிலான உரையாடலை ஜூன் 11 இந்தியா வெளியிடுகிறது.

ஜூன் 15-ல் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன், ஒரு தொலைபேசி உரையாடலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கார்கிலிலிருந்து பின்வாங்கும் படி கட்டாயப்படுத்தினார். ஜூன் 29ல் பாகிஸ்தான் இராணுவத்தின் உணவு மற்றும் ஆயுத விநியோக பாதை அவர்களின் சொந்த பிரதமரால் நிறுத்தப்பட்டது எனவே அவர்கள் பின்வாங்கும் நிலை ஏற்பட்டது. இந்திய இராணுவம் புலி மலையை நோக்கி அனுப்பப்பட்டது. ஜூலை 2ல் இந்திய இராணுவம் கார்கிலில் முப்பரிமாண தாக்குதலை நடத்துகிறது. ஜூலை 4-ல் இந்திய இராணுவம் 11 மணி நேர போருக்குப் பிறகு புலி மலையை மீண்டும் கைப்பற்றுகிறது. பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், கிளிண்டனுடனான சந்திப்பைத் தொடர்ந்து கார்கிலிலிருந்து பாகிஸ்தான் ராணுவம் விலகியதாக அறிவித்தார். ஜூலை 11-ல் பாகிஸ்தான் பின்வாங்க தொடங்குகிறது; படாலிக் நகரில் முக்கிய சிகரங்களை இந்தியா கைப்பற்றுகிறது. ஜூலை 14ல் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆபரேஷன் விஜயை வெற்றி என அறிவிக்கிறார்.

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்கு, இந்திய அரசு நிபந்தனை விதிக்கிறது. ஜூலை 26ல் கார்கில் மோதல் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்து, ஊடுருவல்களை முழுமையாக துர த்தியடித்ததாக இந்திய ராணுவம் அறிவித்தது. இந்தியத் தரப்பில் 527 பேர் வீர மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தாய் நாட்டைக் காக்கும் முயற்சியில், வீர மரணமடைந்த, காயமுற்ற, பங்கெடுத்த அனைத்து ராணுவ வீரர்களுமே ஹீரோக்கள் தான். ராணுவத்தின் உயர் விருதான பரம் வீர் சக்ரா நான்கு பேருக்கு வழங்கப்பட்டது.

கேப்டன் விக்ரம் பாத்ரா ஜம்மு-காஷ்மீர் ரைஃபிள்ஸின் அதிகாரியாக இருந்தார். ஆபரேஷன் விஜய்யின் ஒரு பகுதியாக, கேப்டன் பாத்ரா ஐந்து எதிரி வீரர்களை தனது கைகளால் கொன்றார். அவரது குறியீடு பெயர் ஷெர் ஷா. அவரது வீர மரணத்திற்குப் பிறகு மதிப்புமிக்க பரம் வீர் சக்ரா விருதைப் பெற்றார். லெப்டினன்ட் மனோஜ் குமார் பாண்டே, கோர்கா ரைஃபிள்ஸின் ஒரு பகுதியாக ஆபரேஷன் விஜய்யின் போது தொடர்ச்சியான தாக்குதல்களில் ஊடுருவியவர்களை பெரும் இழப்புகளுடன் பின்னுக்குத் தள்ளினார். அவரும் தன் வீரமரணத்திற்கு பிறகு பரம் வீர் சக்ரா விருதை பெற்றார். ஜம்மு-காஷ்மீர் ரைபிள்சை சேர்ந்த ரைபிள்மேன் சஞ்சய் குமார், முஷ்கோ பள்ளத்தாக்கில் ஒரு புள்ளியைக் கைப்பற்றுவதற்கான ஒரு நடவடிக்கையின் போது,எதிரிகளுடன் நேருக்கு நேராக போரிட்டு அவர்களை துரத்தினார், அவர்களுடைய இயந்திரத் துப்பாக்கியையே பயன்படுத்தி, அவர்கள் தப்பி ஓடியபோதும் அவர்களில் பலரைக் கொன்றார். அவர் பரம் வீர் சக்ர விருதை உயிருடன் பெற்றார். 18 கிரெனேடியர்களைச் சேர்ந்த கிரெனேடியர் யாதவுக்கும் பரம் வீர் சக்ரா வழங்கப்பட்டது. அவர் டைகர் ஹில் கைப்பற்றிய கதக் படைப்பிரிவின் முன்னணி அணியின் ஒரு பகுதியாக இருந்தார். கடுமையான துப்பாக்கிச் சூட்டுக்கு இடையில், அவர் பல காயங்களைத் தாங்கி, எதிரி நிலைக்கு தவழ்ந்து சென்றார்.

பாக்கிஸ்தான் தரப்பில் பலரும், பல விதமான எண்களைக் கூறி வந்தனர். போரில் ராணுவ வீரர்களின் பங்களிப்பையே முழுவதுமாக ஆரம்பத்தில் மறுத்த பாக்கிஸ்த்தான் அரசு, இறந்த வீரர்களின் உடல்களைக் கூட வாங்க மறுத்தது. இது பாகிஸ்தானில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. இப்போது, போருக்கு யார் காரணம் என்பதற்கு முஷாரப்பும், நவாஸ் ஷெரிப்பும் மாறி மாறி குற்றம் சுமத்திக் கொள்கிறார்கள்.

அணு ஆயுத போர் மூளலாம் என்ற அச்சத்தினாலேயே பாகிஸ்தான் பின் வாங்கியிருக்கலாம். ஆனால் உலக மேடையில் பாகிஸ்தான் கடும் கண்டனங்களுக்கு ஆளானதும், அவமானப்பட்டதும் உண்மை. 90ஸ் கிட்ஸ் என்று அழைக்கப்படும் நம் தலைமுறைக்கு 'கார்கில் போர்' மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும். நம் நாட்டில், போர் என்பதை பாடங்களிலும், திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்து வந்தவர்கள், செய்தித்தாளில் படிக்கும் நிலை வந்தது. ஹீரோக்கள் நம்மிடையே வாழ்ந்து தான் வந்திருக்கிறார்கள்..நாம் தான் அவர்களை வேறு எங்கெங்கோ தேடியிருக்கிறோம் என்பதை உணர்த்தியது.

புல்லரிக்க வைக்கும் வீரக் கதைகளும், ஒவ்வொரு வருடமும் வீட்டு வாசலில் 'கார்கில் விஜய் திவாஸ்க்கு' விளக்கேற்றும் போது சிந்தும் கண்ணீர்த் துளிகளும் கார்கில் ஹீரோக்களின் நினைவை எப்போதும் எதிரொலிக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News