ஓயாத இரண்டாவது கொரானா அலை- என்ன தான் நடக்கிறது கேரளாவில்?
கேரள மாதிரியின் 'வெற்றி கதை' உண்மையா?
By : Saffron Mom
இந்தியாவில் இரண்டாவது அலை மே மாச கடைசியில் உச்சத்திற்கு வந்தது. பிறகு படிப்படியாக குறைந்து, ஊரடங்கு தளர்த்தப்பட்டது. தற்பொழுது மூன்றாவது அலைக்குரிய தடுப்பு நடவடிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் மக்கள் மனதில் மேலோங்கி வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் முரண்பாடாக கேரளாவில் இன்னும் இரண்டாவது அலையே ஓய்ந்தபாடில்லை. நாட்டில் புதிதாக கண்டறியப்படும் கொரானா தொற்றுகளில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேலான தொற்றுகள் கேரளாவில் இருந்து தான் வருகிறது.
ஜனவரி 2020ல் கேரளாவில் தான் இந்தியாவின் முதல் கொரானா தொற்று கண்டறியப்பட்டது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து திரும்பி வந்த ஒரு மருத்துவ மாணவரிடம் இந்நோய் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து தொற்றுகள் படிப்படியாக அதிகரித்து ஒரு ஹாட் ஸ்பாட்டாக (hot spot) கேரளா மாறியது. ஆனால் மார்ச் 2020 ற்குள் படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் தொற்றுகள் கண்டறியப்பட்டது. தொற்று இருக்கலாம் என சந்தேகத்திற்கிடமானவர்களை பரிசோதனை செய்வது. அவருடன் தொடர்புடைவர்களாக இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவது என ஆரம்ப காலகட்டங்களில் எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளினால் தொற்று பரவும் அபாயமும், எண்ணிக்கையும் பெருமளவு குறைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 'கேரளா மாதிரி' (kerala model), 'கேரளா கொரானாவை வென்றது' என்ற ரீதியிலான செய்திகளும், பாராட்டும் தேசிய அளவிலும் ,சர்வதேச அளவிலும் மீடியாக்களாலும் பல பத்திரிக்கையாளர்களும் பரப்பப்பட்டது. முதல் அலை ஓரளவிற்கு நீண்டதாக இருந்தாலும், கேரளா ஒருவழியாக கட்டுப்படுத்தி விட்டது போல் தெரிந்தது. இறப்பு எண்ணிக்கை விகிதமும் குறைவாகவே இருந்தது.
இந்த வருட கோடை காலத்தில் மறுபடியும் ஆரம்பித்த இரண்டாவது அலையில் தொற்றுகள் மறுபடியும் நாடு முழுவதும் அதிகரித்தது. அதேபோல் கேரளாவிலும் அதிகரித்தது. ஆனால் மற்ற மாநிலங்களில் அலையின் தீவிரமும், எண்ணிக்கையும் குறைந்து வரும் வேளையிலும் கேரளாவில் அது குறையும் என்பதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை.
இந்தியாவின் மக்கள் தொகையில் மூன்று சதவீதம் இருக்கும் கேரளாவில் நாட்டின் புதிய தொற்றுகளில் பாதிக்கும் மேல் உள்ளது. இப்படி தொடர்ச்சியாக தொற்றுகள் அதிகரித்து வருவதனால் ஊரடங்குகள் மறுபடியும் அமல்படுத்தப்பட்டு, மற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய அவசியத்திற்கு கேரளா உள்ளாகிறது. அண்டை மாநிலங்களும் கேரளாவில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள்.
கடந்த ஒரு மாதமாக பரிசோதனை பாசிட்டிவ் சதவிகிதம் கிட்டத்தட்ட 10 சதவிகிதத்திற்கும் மேல் இருக்கிறது. இதுவரைக்கும் 3.4 மில்லியன் தொற்றுகள் மற்றும் 16,857 கொரானா இறப்புகள் கேரளாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கேரளாவின் ஆதரவாளர்கள் இது குறித்து, கேரளா அதிகப்படியான மக்களை பரிசோதனை செய்வதாகவும் அதனாலேயே தொற்றுக்கள் கண்டறியப்படுவதாகவும் கூறுகிறார்கள். ஆனால் பரிசோதனை செய்பவர்களில் இரண்டில் ஒருவருக்கு தொற்று கேரளாவில் கண்டறியப்படுகிறது. மற்ற மாநிலங்களில் 30ல் ஒருவருக்கு தொற்று கண்டறியப்படுகிறது.
ஆனால் கேரளாவில் அதிகப்படியான பரிசோதனை செய்யப்படுவதாகவும், உண்மையான தொற்றுகளை கண்டறிவதற்காக முயற்சிகள் நிறைய எடுக்கப்படுவதாகவும் அதன் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக பலரும் கேரளா தற்பொழுதும் கொரானாவைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறந்த பணியை செய்வதாகக் கூறுகிறார்கள்.
மேலும், அதிகப்படியான தொற்றுக்கள் கண்டறியப்பட்டாலும் கேரளாவில் மருத்துவமனைகள் நிரம்பி வழியவில்லை. அந்த அளவிற்கு உயிர் இழப்புகள் இல்லை. கொரானாவினால் ஏற்படும் இழப்புகள் முழுவதுமாக அறிவிக்கப்படுகின்றன என்றும் பலரும் அதற்கு ஆதரவாக பேசுகிறார்கள். ஆனால் இவையெல்லாம் எந்த அளவிற்கு உண்மை? கேரள மாதிரியின் 'வெற்றி கதை' உண்மையா?
இத்தகைய வாதங்களும், கதைகளும் பல்வேறு ஆணித்தரமான உண்மைகளால் மறுக்கப்பட்டு வருகிறது.
கேரளா தற்போதைக்கு தன்னுடைய 20 சதவிகித மக்கள் தொகைக்கு முழுவதுமாக இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தியுள்ளனர். 45 வயதிற்கு மேல் ஆனவர்கள் 70% பேர் ஒரு டோஸ் தடுப்பூசியாவது பெற்றுள்ளனர். அதிகப்படியாக பரிசோதனைகள் செய்தாலும் தடுப்பூசிகள் போட்டாலும் இரண்டாவது அலை இன்னும் ஓயாமல் சென்றுகொண்டிருக்கிறது. மூன்றாவது அலையும் எப்போது தொடங்கும் இதேபோல் தீவிரமாக இருக்குமா என்ற கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
உயிர் இழப்புகளை தடுத்தாலும், அதிகப்படியான மக்கள் தொற்றுக்களை பெறுவதிலும் பெரிய ஆபத்து இருக்கிறது. கொரானாவிற்குப் பிறகு ஏற்படும் சுகாதார பாதிப்புகள், அதனால் ஏற்படும் புதிய பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மாநில அரசுகள் உள்ளாகும். அறிகுறிகளே இல்லாமல் இருக்கும் கொரானா நோயாளிகளுக்கும் பிற்காலத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் உயிரிழப்புகளை சமாளித்தாலும் தொற்றுகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் மாநில அரசுக்கு உள்ளது.
மருத்துவமனைகளில் தற்போது ஏற்படும் இழப்புகளும், தீவிர சிகிச்சைகளும் சில காலத்திற்கு முன்னால் தொற்று ஏற்பட்டவர்களுக்கு அளிக்கப்படுவதால், தற்போது தொற்று ஏற்பட்டு இருப்பவர்கள் வருங்காலத்தில் இந்த எண்ணிக்கையில் பங்களிப்பாளர்கள் என்பது கவலைக்குரிய விஷயம் என்று டாக்டர் பாரிக் தெரிவிக்கிறார்.
மேலும் தொடர்ச்சியாக இந்த தொற்றுநோய் முடியாமல் சென்று கொண்டே இருந்தால் வைரஸ்களில் புதிய திரிபுகள் உருவாகி, அது முன்பைவிட அளவுக்கு அதிகமாக பரவி தடுப்பூசி போடாதவர்களுக்கும், இதுவரைக்கும் கொரானா வராதவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கேரளா அமல்படுத்திய ஊரடங்குகளில், சில வாரங்களுக்கு முன்பு பக்ரீத்திற்கு அளிக்கப்பட்ட தளர்வுகளால் தொற்றுகள் அதிகரித்ததாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, தற்போது ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு பெருமளவு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த பாகுபாடும் பெருமளவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஒரு பெருந்தொற்றுக் காலத்தின் போது, அவசரப்பட்டு ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை அளவுக்கு அதிகமாக பாராட்டியவர்கள் தற்போது சங்கடத்தில் உழல்கிறார்கள்.
Cover Image Courtesy: Indian Express