Kathir News
Begin typing your search above and press return to search.

சிறப்பு கட்டுரை: ஓயாமல் தொடரும் மலேசிய இந்திய இந்துக்கள் மீதான சமூக அடக்குமுறை!

சிறப்பு கட்டுரை: ஓயாமல் தொடரும் மலேசிய இந்திய இந்துக்கள் மீதான சமூக அடக்குமுறை!

இந்துக்களின் பெண் தெய்வம் மகா மாரியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நூற்றாண்டு கண்ட இந்துக்கோயில், 2007-ல் மலேசியாவில் உள்ள பாடங்களில் இருந்து தகர்த்துத் தூளாக்கப்பட்டது. இதற்கு முந்தைய ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடந்த வன்முறைக் கலவரத்திற்குப்பின் பல கோவில்கள் இடிக்கப்பட்டுக் கற்கூளங்களாயின. 2009-ஆம் ஆண்டு, இந்துக்களின் உணர்வினை மிதித்துத் துவைக்கும் வண்ணம் அவர்கள் புனிதமாகவும் தாய்க்கிணையாகவும் கருதும் பசுமாட்டுத் தலையோடு கீழ்த்தரமான முறையில் வெளிக்காட்டி, புதிய இடத்தில் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பினை தெரிவித்தனர்.

பத்தாண்டுகள் கழிந்தாலும் நிலைமைகள் இன்னும் மோசமாகிக் கொண்டுதான் செல்கின்றன. மலேசியாவில் சிறுபான்மையினரான இந்துக்களின் இந்த நிலையை மேலோட்டமாகப் பார்க்கும் பொழுதே இவையெல்லாம் ஏதோ பத்திருபது ஆண்டுகளாக நடப்பவை அல்ல, மாறாக ஒரு நூற்றாண்டுக்கு முன்னரேயே நடுநிலை பிறழ்ந்து இஸ்லாமியர்க்கு அன்பாதரவு காட்டுவதற்காக இந்துக்களுக்கு எதிராக விதைக்கப்பட்டது என்றும், விதிக்கட்டிலா கொடுங்கோல் சட்டங்கள் என்னும் வேலியானால் பாதுகாக்கப்பட்டு வளர்ந்த வெறுப்பு விதைகளின் விளைச்சலே என்பது தெளிவாகப் புலனாகும். இவையெல்லாம் இந்துக்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதைக் காட்சிப்படுத்துகின்றன.

"மலேசியா – உண்மையில் ஆசியா" என்கின்ற மலேசியச் சுற்றுலாத்துறையின் கொள்கை வாசகம் மலேசிய முகம்மதியர்- சீனத்தவர் – இந்திய இந்துக்கள் எனும் மூன்று தனித்துவம் வாய்ந்த இனத்தவர் ஒன்றிணைந்து வாழும் பண்பாட்டுக் கலயமே மலேசியா என்பதாக அறிவிக்கின்றது. ஆனால் பெரும்பான்மை இனத்தவரான மலேசியா முகம்மதியர், எண்ணிக்கையிலும் பொருளாதாரத்திலும் அரசியலிலும் மெலிவுற்றவரான இந்துக்களின் மீது தொடர்ந்து நடத்தும் தாக்குதல்கள் சுற்றுலாத்துறையினரின் இந்த வாசகத்தை ஐயுறவைக்கின்றது. தனது மக்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் மலேசிய அரசு கடைப்பிடிக்கும் மெத்தனப் போக்கு இந்த அடக்குமுறைகள் எல்லாம் அரசின் ஊக்க ஆதரவோடு தான் நடக்கின்றனவோ என்கின்ற ஐய வினாவையும் எழுப்புகின்றது.

ஒரு காலத்தில் இந்தியப் பண்பாட்டையே வேராகக் கொண்டு வளர்ந்த மலேசியத் தீபகற்பம் இன்று இந்துக்களின் மீது அடக்குமுறைகளுக்குக் கட்டவிழ்த்து விடுவது நகை முரணே. புகழ் பெற்ற இந்திய மரபுகளையும் பண்பாட்டையும் உள்வாங்கித்தான் மலேசிய நாடு இந்திய வாழ்க்கை முறையையும், புத்த மதத்தையும் ஏற்று ஒழுகியது. 14-ஆம் நூற்றண்டின் நடுப்பகுதியில் அரசன் பரமேஸ்வரன் இஸ்லாத்தைத் தழுவியதன் விளைவாக இஸ்லாமியம் பற்றிப் படர்ந்து பரவும் வரையிலும் இந்து மதமும் புத்த மதமுமே முதன்மையான மதங்களாகத் திகழ்ந்தன.

ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட பொழுது ரப்பர்த் தோட்டங்களில் பணிபுரிய ஒப்பந்தக் கூலிகளாக ஆங்கிலேயரால் எடுத்துச் செல்லப்பட்ட இந்தியர்களின் நான்காம், ஐந்தாம் தலைமுறையினர்தான் இன்றைய மலேசிய இந்தியர்கள்.

ஆப்பிரிக்க அடிமை வணிக முறை ஒழிந்த பிறகு ஆங்கிலேயே அரசு மலிவுக் கூலிகளைக் கொள்ளும் முறையைத் தொடங்கியது. 1829 தொடங்கி இரண்டாம் உலகப் போர் வரை ஏறத்தாழ 35 இலட்சம் இந்தியர்கள் ஆங்கில ஐரோப்பியக் குடியேற்ற நாட்டுத் தோட்ட வேலைக்கான ஒப்பந்தக் கூலிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். இது போலவே மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும் சென்றவர்களுள் மிகப்பெரும்பாலோனர் தமிழும், மீதமுள்ள சிறு எண்ணிக்கையிலானோர் தெலுங்கும் மலையாளமும் பேசும் தென்னிந்தியர்களே.

இந்த இந்தியக் கூலிகளே எங்கெங்கும் சிதறிப் பரவினர். ஒப்பந்த சட்டப்படி கூலி வேலைக்காலம் முடிவுற்ற பின்னர் குடியேற்ற நாடுகளிலேயே தங்களின் வாழ்வினை அமைத்துக் கொண்டனர். ஆயினும் மொழி, மரபு, மதத்துடனான தொப்புள் கொடி உறவினைப் போற்றிப் பாதுகாத்தனர். உலகெங்கும் பரவிய 3 கோடியே 10 லட்சம் இந்தியர்களும் கல்வி மாட்சியில், சட்ட மாண்புகளை மதிப்பதில் இன்னும் ஏனையவற்றிலெல்லாம் இந்திய தர்மங்களை முத்திரையிட்டனர். உண்மையைச் சொல்லப்போனால் முன்னாள் ஃபிஜித் தீவுகள் தலைமை அமைச்சர் திரு.மகேந்திர செளத்ரி தற்போதைய சுரிநாமேயின் குடியரசுத் தலைவர் திரு.சந்திரிகா பிரசாத் ஆகியோர் உயர் பதவிகளுக்கு அணி செய்தனர்.

இன்றைய மலேசியாவில் உள்ள 21 இலட்சம் இந்தியர்கள் மொத்த மக்கள் தொகையில் 7% ஆவர். அதில் 86% இந்துக்கள்; ஒரு லட்சம் பேர் சீக்கியர்கள்; கணிசமானவர் ஏனைய மதத்தினர். சீக்கியர்கள் தொடக்கத்தில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் அரசியல் கைதிகளாகவும் பின்னர் 1865-ல் ஆங்கிலப் பேரரசின் படைத்துறைப் பணியாளர்களாகவும் அனுப்பப்பட்டவர்களாவர்.

உலகின் மற்றையை புலம் பெயர்ந்த இந்தியரோடு ஒப்பிடுகையில் மலேசிய இந்தியர் சமூக, பொருளாதார அளவீடுகளில் பின்தங்கியே உள்ளனர். பிற இனத்தவரைக் காட்டிலும் எல்லாவற்றிலும் கடைமட்டமாகவே உள்ளனர். மக்கட் தொகையிலே 7% என்றாலும் அவசரச் சட்டத்தின் கீழ் வன்முறைக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டோர் 63% ஆவர். பிச்சைக்காரர்களுள் 41 சதவீதமும் தவறாகப் பயன்படுத்தப்படும் குழந்தைகளுள் 20 சதவீதமும் இந்தியர்களே. இந்தியர்கள் தொடக்கக் கல்வித் தேர்வுகளில் தரவரிசையில் கடைசியில்தான் உள்ளனர். 12-க்கு ஒரு இந்தியக் குழந்தை தொடக்கக் கல்வியே பெறுவதில்லை. இவையெல்லாம் அரசின் அக்கறையின்மையின் விளைவே. இந்தியராயிருப்பவர் முகம்மதியரெனின் நன்றாய்க் காலங்கழிப்பது அவர் அரசு மதத்தைப் பின்பற்றுவர் என்கின்ற காரணத்தினாலேயே.

"இஸ்லாத் அரசின் மதம் என்றாலும் மற்ற மதங்கள் அமைதியாகவும் இணக்கமாகவும் பயிலப்படலாம்" என்று மலேசியாவின் அரசியல் சட்டம் கூறுகின்றது. ஆனால், உண்மைக்கும் இக்கூற்றுக்கும் இடையே உள்ளது எட்டாத் தொலைவே. மற்ற மதத்தினர், குறிப்பாக இந்துக்கள் குறிவைக்கப்பட்டு அடிமை நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர் அடிப்படை உரிமைகளும் கல்வி உரிமையும் வேலை வாய்ப்பும் மறுக்கப்படுகின்றனர். வழிபாட்டுத் தலங்களும் கலைச்சிற்பங்களும் சிதைக்கப்படுகின்றன. அற்ப காரணங்காட்டி குடியுரிமைகள் மறுக்கப்படுவதோடு அவர்கள் நாடற்றோர் எனவும் அறிவிக்கப்படுகின்றனர். ஏறத்தாழ 3 லட்சம் இந்துக்கள் நாடற்றோராக உள்ளனர். அவர்களுக்கு நீதியும் மறுக்கப்படுகின்றது.

இஸ்லாமியராக மாறுவதொன்றே இவ்வெல்லா இன்னல் நெருக்கடிகளைத் தீர்க்கும் அருமாமருந்து என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

பங்காரம்மா என்னும் சிறுமியின் கவலைக்கிடமான நிலைமை உலகின் கவனத்தையே ஈர்த்தாலும், அதனால் எந்தப் பயனும் கிட்டாமலேயே கழிந்து விட்டது. சிறுமி பங்காரம்மா சமயத் தலைமைக்கு எதிராகப் பேசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அரசினரின் சிறுமியர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கே அவர் அறியாமலே அவர் ஒரு முகம்மதியர் என ஆவணத்தில் பதியப்பட்டது. அவர் இந்துவாகவே வளர்ந்து இந்து முறைப்படியே திருமணமும் புரிந்துக் கொண்டார். ஆனால், அரசோ அவரது திருமண பதிவை செய்ய மறுத்ததோடு அவரது குழந்தைகளின் தகப்பன் அவரது கணவரே என்பதையும் ஒப்புக்கொள்ள மறுத்து விட்டது. மலேசிய முகம்மதிய தலைமை எதிர்ப்புச் சட்டப்படி அவர் கணவரின்றும் குழந்தைகளினின்றும் பிரிக்கப்பட்டார்.

ஆங்கிலேயர் ஆட்சி மரபின் வழி வந்த மதச்சார்பற்ற குடியுரிமை நீதிமன்ற நடைமுறைகளின் கீழ் சிறுபான்மையினர் வரும் போது, மலேசிய அரசோ பெரும்பான்மையிரான முகம்மதியரின் மத, குடும்ப விவகாரங்களான திருமணம், மணவிலக்கு, மதமாற்றம், இறப்பு போன்றவற்றிற்கு ஷரிய நீதிமன்ற நடைமுறைகளுக்குச் சாதகமாக ஒரு பக்கம் கோட்டமாகச் சாய்ந்து செயல்படுகின்றது. மோதல் வரும்போது குடியுரிமை நீதிமன்றத்திற்கு ஷரிய நீதிமன்றம் கீழமைவானது என்றாலும் நடுநிலை இகவு, நீதி வழுவல் காரணமாக முகம்மதியரல்லாதோர் தமக்கு நீதியின் சாயல் கூடக் கிடைக்காது என்னும் நம்பிக்கைக்கு வந்து விட்டனர். குடியுரிமை நீதிமன்றங்கள் முகம்மதியம் தொடர்பான பிரச்சினைகளில் பொறுப்பைத் துறந்து நிலைமையை இன்னும் மோசமாக்கி விட்டனர்.

தீபா சுப்ரமணியத்தின் வழக்கே உச்ச நீதிமன்றத்தில் நீதியின் தோல்வி என்பதற்கு எடுத்து காட்டாகத் திகழ்கின்றது. அவர், வீரன் நாகப்பன் என்னும் இரண்டு இந்துக்களும் 2003-ஆம் ஆண்டு இந்து முறைப்படி திருமணம் செய்து மூன்று மகவும் ஈன்றனர். பத்தாண்டு மணவாழ்வின் பின்னர் வீரனின் இஸ்லாம் மதத்திற்கு மாறும் முடிவைத் தீபா எதிர்க்க, வீரனோ 11 மாதப் பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய் ஒருதலையாக அதையும் முகம்மதியளாக மாற்றிவிட்டார்.

ஷரியா சட்டப்படி தற்போது அவர்களின் திருமணம் செல்லாததாகி விட்டது. அத்தோடு குழந்தையின் பாதுகாவலரும் தந்தையே என்பதை இஸ்லாம் உறுதியாக்கி விட்டது. தன்னந்தனியளான அத்தாயின் அவல அழுகுரல் ஒத்துத்தீர வேண்டும் என்ற இஸ்லாமிய சட்டத்தினால் அடங்கி விட்டது.

இந்துக்களுக்கு அடக்குமுறைத் தாக்குதல்களே நீதியாக, நீதிமறுப்பே நெறிமுறையாக விளங்குகின்ற வழக்குகள் எண்ணற்றவை. மலேசியத் தொழில் நுட்பப் பல்கலைகழகத்தின் பாடம் ஒன்றில் இந்து, சீக்கியர்களைப் பற்றிய மோசமான ஒரு சித்தரிப்பு கடும் எதிர்ப்புக்கு பின்னரே நீக்கப்பட்டது. சீக்கியர்களும் இதற்கு விதிவிலக்கல்லர்.

இந்தப் பிரச்சனைகட்கெல்லாம் மூல காரணம் இஸ்லாமிய மேல்வல்லாண்மையும் மலேசியச் சட்ட மேல்வல்லாண்மையுமே. அதாவது, ஒருவன் மலேசியக் குடிமகன் என்றால் அவன் முகமதியராக இருக்க வேண்டும். மலேசியக்குடிமகன் என்பதற்கும் முகமதியன் என்பதற்கும் வேறுபாடு காண்பது இயலாததாகி விட்டது. அத்தோடு சமயத்தலைமைக்கெதிர்ப்பு, தெய்வ நிந்தனை போன்ற பல்வேறு சட்டங்களும் இஸ்லாம் அல்லாதவற்றை மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக அழித்தொழித்திடவே உள்ளன

இஸ்லாமிய இறைக் கொள்கை சமுதாயத்தின் உள்ளக் கிடக்கையில் ஆழப் புதைந்திருப்பதால் சிறிதளவாவது மற்றவை சேர்த்திடும் வண்ணம் சட்டத்திருத்தம் செய்யலாம் என்ற நினைப்பிற்கே வழியில்லாமல் போய்விட்டது.

சமாக மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தொலிகளுக்கெல்லாம் பிரிவினைவாதம் என்ற வாய்ப்பூட்டு போடப்படுகின்றது. உலக மனித உரிமைக் காவலர் எல்லாம் வெறும் வாயில்லா வேடிக்கை பார்ப்போராகவே உள்ளனர் எதிர்ப்புத் தெரிவித்தல் எனும் சடங்கினைத் தாண்டி அவர்களால் ஏதும் செய்ய முடிவதில்லை. சமுதாய சுதந்திரமும் சமுதாய உரிமைகளும் காப்புறுதி செய்யப் படுவதற்கு அழைத்துச் சென்ற ஆங்கிலேயரும் ஏதும் செய்யவில்லை தாய்நாடும் இவற்றைப் பற்றிக் கவலைப்படவில்லை.

1943-ல் சிங்கப்பூரிலே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் இந்திய விடுதலைக்கான இறுதிப் போக்காலத்தில் இந்திய தேசியப்படையில் சேர அழைத்தபோது அதற்கு இசைவு எதிரொலியை முழக்கியவர்கள் இப்பொழுது தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருப்பது நகைமுரணே. ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் முன்வந்தனர். அவர்களுள் ஏறத்தாழ 20,000 பேர் தாய்நாட்டுக்கே வந்திராத இரண்டாம் தலைமுறையினர்.

எந்த நாட்டிற்காகத் தங்களது முன்னோர்கள் உயிர்த்தியாகம் செய்தார்களோ அந்த நாடு தற்போது இவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் எனும் சிணுங்கலைத் தவிர வேறு ஏதும் செய்யவில்லை. "தமிழுக்காகவே" என்று தானாகவே முடி சூட்டிக் கொண்ட திராவிடக் கொள்கைப் பாரம்பரியத் தமிழக அரசியல் கட்சிகளும் இவர்களின் கடுந்துயர்களையக் கோரும் கூக்குரலுக்குச் செவி சாய்க்கவில்லை. அந்த தேசியப்படை வீரர்களின் வாழ்வினைப் போலவே இவர்களின் வாழ்வும் அழிந்து போனால், வியப்பதற்கு ஒன்றுமில்லை. இந்த உலகம் இவர்களை மலேசியாவின் தோட்டக்காடுகளிலே கதறிக் கரைந்து போகும் தலைவிதிக்கே தள்ளிவிடுதல் என்பது துரதிருஷ்டமே.

குறிப்பு : இந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரையே சாரும். கதிர் செய்திகள் இந்த கருத்துக்களுக்கு பொறுப்பாகாது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News