Kathir News
Begin typing your search above and press return to search.

நன்மைகள் தரும் நவராத்திரி வழிபாடு

பெண்ணின் பெருமை போற்றும் பண்டிகளில் ஒன்றான நவராத்திரி வழிபாட்டால் ஏற்படக்கூடிய நன்மைகளும் கொலு அமைப்பும் சிறப்புகளும் பற்றிய தகவல்

நன்மைகள் தரும் நவராத்திரி வழிபாடு
X

KarthigaBy : Karthiga

  |  26 Sep 2022 8:00 AM GMT

பெண் தெய்வ வழிபாட்டில் முக்கியமானது நவராத்திரி திருவிழா. உலகில் தீமைகளை அழித்து நன்மைகளை விளைவிப்பதற்காக பெண்ணின் ஆக்கல், காத்தல் மற்றும் அழித்தல் என்னும் மூன்று சக்திகளும் இணைந்து செயல்படுவதை குறிப்பிடுவது இதன் நோக்கமாகும். பெண்ணின் பெருமை போற்றும் பண்டிகளில் இதுவும் ஒன்று. நவராத்திரி என்பது 9 இரவுகளை குறிக்கும். இந்தியா முழுவதும் இந்த ஒன்பது இரவுகளும் சக்தி வழிபாடு விமரிசையாக நடக்கும் .முதல் மூன்று நாட்களில் துர்க்கையையும் அடுத்த மூன்று நாட்களில் லட்சுமியையும் கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதியையும் வழிபடுவார்கள் பத்தாம் நாள் வழிபாடு 'தசரா அல்லது விஜயதசமி' என்று கொண்டாடப்படுகிறது.


தமிழகத்தில் நவராத்திரி பண்டிகையை பலரும் வீடுகளில் கொலு வைத்து கொண்டாடுகின்றனர். கொலுப்படிகள் அமைத்து அதில் தெய்வங்கள், சான்றோர்கள், தலைவர்கள், பறவைகள் விலங்குகளின் சிலைகளையும் பொம்மைகளையும் காட்சிப்படுத்தி பூஜை செய்து வழிபடுகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சுண்டல் மற்றும் இடனிப்பு செய்து நெய்வேத்தியமாக படைத்து அனைவருக்கும் கொடுப்பது இந்த பண்டிகையின் சிறப்பு. இவ்வாறு வைக்கப்படும் கொலுவில் சிறுவர் முதல் பெரியவர் வரை உற்சாகமாக பங்கு பெறுவார்கள் .தெய்வ சிலைகள் மட்டும் இல்லாமல் தங்கள் விருப்பம் மற்றும் ஆர்வத்துக்கு ஏற்ற வகையில் பலவிதமான பொம்மைகளும் காட்சியமைப்புகளும் இதில் இடம்பெறும். பல பகுதிகளில் வித்தியாசமான சிறப்பான கொலு அமைப்பதற்கான போட்டிகள் நடத்தி பரிசுகள் தருவதும் உண்டு.வழக்கமாக கொலுவில் பூங்கா, மிருக காட்சி சாலை ,செயற்கை நீரூற்று, குளம் போன்றவை இடம்பெறும் .இவற்றைத் தவிர 'தீம்' அடிப்படையில் கொலு வைப்பவர்களும் உண்டு.


சில வீடுகளில் பெரியவர்களுக்கு இணையாக சிறுவர்கள் ஒன்று சேர்ந்து குழு அமைத்து தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு கொலு வைப்பார்கள் .அதில் அவர்களுடைய கற்பனை திறனும் கலைத்திறனும் வெளிப்படும். சாலை விதிகளை பின்பற்றுதல், பூமி வெப்பமயமாதல் ,மரங்களின் முக்கியத்துவம் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கொலு அமைப்புகளை பல இடங்களில் பார்க்க முடியும் . முழுவதும் பார்பி பொம்மைகளைக் கொண்டு அலங்கரித்து வைக்கப்படும் கொலு காட்சிகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவை .தெய்வ வழிபாடு என்பதையும் தாண்டி மகிழ்ச்சி, சமூக ஒன்றிணைப்பு, விழிப்புணர்வு, திறன்களை வெளிப்படுத்துதல் போன்ற நோக்கத்தை நிறைவேற்றுவதாகவும் கொலு வைத்தல் அமைகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கவும், செல்வ வளம் பெருகவும் நவராத்திரி வழிபாடு செய்யப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News