நேபாளம்: அடுத்த பிரதமர் யார்? உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
By : Saffron Mom
நேபாள பிரதமர் கே பி ஓலி இரண்டாவது முறையாக அந்நாட்டு பாராளுமன்றத்தை சமீபத்தில் கலைத்தார். தேர்தல்கள் நவம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை இரண்டாவது முறையாக மீட்டெடுக்க நேபாள உச்ச நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டது.
ஓலிக்குப் பிறகு பிரதமராக, நேபாளி காங்கிரஸின் ஷெர் பகதூர் தியூபாவை நியமிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தியூபா கடந்த 20 ஆண்டுகளில் நேபாளத்தின் பிரதமராவது இது ஐந்தாவது முறை.
செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் தியூபாவை பிரதமராக நியமிக்கவும் ஒரு வாரத்திற்குள் நாடாளுமன்ற சபையை மறுசீரமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தங்கள் சொந்தக் கட்சிக்கு எதிரான மனுவில் கையொப்பமிட்ட 23 UML உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் அது தீர்ப்பளித்தது.
ஒரு மாதத்திற்குள் தியூபா தனது பெரும்பான்மையை சபையில் நிரூபிக்க வேண்டும். அவர் பெரும்பான்மையைப் பெறத் தவறினால், நவம்பரில் தேர்தல்கள் இருக்கும்.
பல நேபாள அரசியல் பார்வையாளர்களும், பிற தலைவர்களும், யார் பிரதமராக இருக்க வேண்டும் என்ற அரசியல் விஷயத்தில் தீர்ப்பளிப்பது உச்சநீதிமன்றத்தின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்று கருதுகின்றனர். அப்படியானால் உச்ச நீதிமன்றம் ஏன் இத்தகைய உத்தரவு பிறப்பித்தது?
பிரதமர் ஓலிக்கு எதிரான கட்சிகள், நாடாளுமன்றத்தை கலைத்ததற்கு எதிராகவும், தியூபாவை பிரதமராக நியமிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இது குறித்து, நீதியரசர் சோலேந்திர ஜே.பி. ராணா தலைமையிலான அரசியலமைப்பு அமர்வின் இத்தகைய சர்ச்சைக்குரிய தீர்ப்பு வந்துள்ளது.
தியூபா, தனது சொந்த கட்சியைச் சேர்ந்த 146 எம்.பி.க்களுடன், மாவோயிஸ்ட் மையத்தைச் சேர்ந்தவர்கள், JSP மற்றும் UML ஆகிய கட்சிகளின் அதிருப்தி உறுப்பினர்களும் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறினர். பிரதமர் ஓலியும் தனக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறியவுடன், ஜனாதிபதி பித்யா பண்டர் அனைவரின் கூற்றையும் நிராகரித்தார். இதன் பிறகு மே 24ல் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த இரண்டு கோரிக்கைகளுடன் மனுவை ஏற்றுக்கொண்ட பின்னர், ஒன்றை நிராகரித்து விட்டு மற்றொன்றை தர்க்கரீதியாக அமர்வு ஏற்றுக் கொள்ள முடியாது என்று சட்ட வல்லுநர்கள் நம்புகின்றனர். மேலும், பிப்ரவரியில் ஓலி முதன்முறையாக சபையை கலைத்தபோது இதே அரசியலமைப்பு அமர்வு இதேபோன்ற தீர்ப்பை வழங்கியது.
சபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஓட்டெடுப்பின் போது (floor test), உறுப்பினர்கள் கட்சியின் ஆணையை பின்பற்ற வேண்டுமா அல்லது தங்கள் இஷ்டப்படி வாக்களிக்கும் உரிமை உண்டா என்பது குறித்து மனுதாரர்கள் மற்றும் அரசாங்க வழக்கறிஞர்கள் இருவரின் வாதங்களையும் அரசியலமைப்பு அமர்வு கேட்டது. எம்.பி.க்கள் தங்கள் சொந்த விருப்பத்திற்கு வாக்களிக்க சுதந்திரம் இருப்பதாகவும், கட்சி உத்தரவுக்கு எப்போதும் கீழ்ப்படிய வேண்டிய அவசியமில்லை என்றும் அரசியலமைப்பு அமர்வு கருதுவதாகக் கூறப்படுகிறது.
தியூபா தலைமையிலான ஓலி எதிர்ப்பு பிரிவு கடந்த மாதம் நீதிமன்றத்தில் கூறுகையில், ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி, ஓலிக்கு உடந்தையாக இருந்து தங்களின் கோரிக்கைகளை அவமதிப்பதாகக் கூறியிருந்தனர். சபையை மீட்டெடுக்க வேண்டும், தியூபாவை பிரதமராக்க வேண்டும் என்ற அவர்களின் அழைப்பை ஜனாதிபதி மதிக்கவில்லை.
மே 21 அன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து சபையை கலைத்தார் ஓலி. ஆனால் இன்னும் அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவு இருப்பதாக ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் தியூபாவுடன் வாக்களித்த UML மற்றும் JSP உறுப்பினர்கள் பெயரும் இருந்தது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரசாங்கத்தை அமைக்கக் கோரிய தியூபாவின் கூற்றை ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி நிராகரித்தார். இதன் பிறகு ஐந்து கட்சி கூட்டணியில் இருந்து, 146 அரசியல்வாதிகள் மே 24 அன்று உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர்.