Kathir News
Begin typing your search above and press return to search.

'அமெரிக்காவிற்கு புது அதிபர்' : இந்திய - அமெரிக்க உறவு எப்படி இருக்கும்?

'அமெரிக்காவிற்கு புது அதிபர்' : இந்திய - அமெரிக்க உறவு எப்படி இருக்கும்?

அமெரிக்காவிற்கு புது அதிபர் : இந்திய - அமெரிக்க உறவு எப்படி இருக்கும்?

Saffron MomBy : Saffron Mom

  |  9 Nov 2020 10:30 AM GMT

அமெரிக்காவின் தேர்தல்கள் முடிந்து ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் வெற்றி பெற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் புதிய அதிபராக வரப்போகிறார். ஜனநாயக கட்சியின் இதற்கு முந்தைய அதிபரான பராக் ஒபாமா 2008 - 2016 அமெரிக்க அதிபராக இருந்த பொழுது, ஜோ பிடன் துணை அதிபராக இருந்தார். தற்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் அப்போது அமெரிக்காவிற்கான இந்திய தூதராக இருந்தார்.

ஜோ பிடனின் நெருங்கிய ஆலோசகர்களுடன் இவர் இன்னும் தொடர்பில் இருக்கிறார். இது அமெரிக்காவின் இரு கட்சிகளும் இந்தியாவிற்கான ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளது என உறுதி செய்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியை பொறுத்தவரையில் அவர் இந்திய நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியுறவுக் கொள்கைகளை நடத்திவருகிறார். இருதரப்பு உறவுகளில் பாசாங்கு செய்யும் நாடுகளிடம் மட்டுமே உறவுகளை நிலைநாட்டுவதை கை விட்டு விடுகிறார். இந்த வரிசையில் எந்தெந்த நாடுகள் உள்ளன என்பதை நாம் எளிதில் யூகிக்கலாம்.

வரவிருக்கும் பிடென் நிர்வாகத்திடம் அணுகுமுறையை இந்தியா மாற்ற வேண்டியிருக்கும் என்பது உண்மையே. ஆனால் இந்தியாவிற்கு ஜோ பிடனை நன்றாக தெரியும். அவர் துணை அதிபராக இருந்த காலகட்டத்தில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியினருக்கும் எளிதில் அணுகக் கூடியவராக இருந்திருக்கிறார். தன் வாழ்நாளில் பாதிக்கும் மேல் வாஷிங்டனில் செலவழித்த அனுபவம் மிகுந்த அரசியல்வாதி.

தன்னுடைய திட்டங்களை முரட்டுத்தனமான பாணியின் பின்னால் மறைத்த ட்ரம்பை போலில்லாமல் ஜோ பிடனின் திட்டங்களும், உலகத்தை கையாளு விதமும் எளிதில் கணிக்க கூடியதாக இருக்கும். சீனாவிடம் மோதல் போக்கை கடைப் பிடிக்கவில்லை என்றாலும் கடுமையுடன் பிடென் நடந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவுடன் ஏற்பட்ட இடைவெளிகளை சரி செய்வதுடன் ரஷ்யாவிடம் இன்னும் சற்று கடுமையாக நடந்து கொள்ளலாம்.

சீன வல்லுநர்கள் ட்ரம்பின் தோல்வி குறித்து மகிழ்ச்சி அடைந்தாலும், அமெரிக்க நிர்வாகம் சீனா எதிரி மட்டுமல்ல வருங்காலத்தில் ஒரு அச்சுறுத்தல் என உறுதியாக நம்புகிறது. பிடேன் காலத்தில் சீனாவுக்கு எதிராக தாம் தூம் என எதிர்ப்பு அறிக்கைகள் இல்லாவிட்டாலும் சீனாவை பொறுத்தவரை அமெரிக்க கொள்கைகள் தலைகீழாக மாறி விட்டன.

சீனாவின் கூட்டாளியான பாகிஸ்தானும் அதிபர் ட்ரெம்ப் வெளியேறியதால் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. ஆனால் பிரான்சில் நடந்த இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு பிடென் நிர்வாகமும் தீவிரவாதம் மீது கடுமையாக இருக்கும் என இந்தியா நம்புகிறது. ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானின் இரட்டை வேஷம் அதன் நண்பர்களான UAE, சவுதி அரேபியாவிற்கு ஆதாரத்துடன் தெரிந்துவிட்டது.பாகிஸ்தானின் புது கூட்டாளியான துருக்கி மீது, ஜோ பிடென் மோசமான கருத்து வைத்திருப்பது பாகிஸ்தானுக்கு இன்னும் பிரச்சனைகளை அதிகப்படுத்தும்.

காஷ்மீர் விவகாரத்தில் துணை ஜனாதிபதியாக வரவிருக்கும் கமலா ஹாரிஸின் பேச்சுக்களும் பல ஜனநாயகக் கட்சியினரின் நடத்தைகளும் இந்தியருக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தின. ஆனால் இவையெல்லாம் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வெறும் கடுமையான அறிக்கைகள் உடன் நின்று விடுகிறதா அல்லது நடவடிக்கையில் காட்டப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகத்திடம் இருந்து இந்தியா அதிகபட்ச ஆதரவைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. துணை ஜனாதிபதியாக இருக்கும் பொழுது இந்தியாவுடனான உறவை மேம்படுத்த பல திட்டங்களை ஜோ பிடென் முன்னெடுத்தார் என்பது ஆறுதலான விஷயம்.

கடந்த 20 வருடங்களில் பல அமெரிக்க அதிபர்கள் (பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், ஒபாமா,டிரம்ப்) என பலருக்கும் பலவிதங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்தி வருகின்றனர். இதேபோல் பிடென் நிர்வாகமும் நடந்து கொள்ளாது என நினைக்க எக்காரணமும் இல்லை. ஜனவரி 2021 க்கு பிறகு தான் முறையான தொடர்பு புது அதிபருடன் வைத்துக்கொள்ள முடியும் என்றாலும் அது நல்லுறவாக அமையும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News