அழிந்து வரும் தொழிலுக்கு உயிர் கொடுக்கும் பிரதமரின் திட்டம்: விஸ்வகர்மா யோஜனா ஓர் பார்வை!

2023சுதந்திர தின உரையின் போது பிரதமர் மோடி அறிவித்த விஸ்வகர்மா யோஜனா திட்டம் செப்டம்பர் 17ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கைவினை கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் 2023-2024 முதல் 2027-2028 வரை 5 ஆண்டுகள் அமலில் இருக்கும்.
என்ன பலன் கிடைக்கும்?
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை கிடைக்கும். மேலும், முதல் தவணையாக ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். பிறகு 2-ம் தவணையாக ரூ. 2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும். முதல் தவணை கடனை 18 மாதங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும். அதன் பிறகு மேலும் ரூ. 2 லட்சம் கடன் கிடைக்கும். அதை 30 மாதங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்தக் கடன்களுக்கு வட்டி மானியம் உண்டு. பயனாளிகள் 5 சதவீத வட்டி மட்டுமே செலுத்துகின்றனர். மீதமுள்ள 8 சதவீத வட்டியை மத்திய அரசு ஏற்கிறது.
யாரெல்லாம் தகுதி உடையவர்கள்?
இந்தியா முழுவதும் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் உள்ள கைவினைக் கலைஞர்கள், கைவினைத் தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் அடைவார்கள். தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி தொழிலாளா், காலணி செய்பவர், கொத்தனார், கயிறு செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர் உள்ளிட்ட 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் இந்த திட்டத்தில் நிதி பெற தகுதி உடையவர்கள் ஆவர்.
தகுதி
விண்ணப்பதாரர் இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் கைவினைக் கலைஞர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் வயது 18 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் PMEGP, PM SVANidhi அல்லது முத்ரா கடனின் பலன்களைப் பெறக்கூடாது.
தேவையான ஆவணங்கள்
PM விஸ்வகர்மா யோஜனாவிற்கு விண்ணப்பிக்கும் போது பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது:-
ஆதார் அட்டை.
வாக்காளர் அடையாள அட்டை.
தொழில் சான்று.
கைபேசி எண்.
வங்கி கணக்கு விவரங்கள்.
வருமானச் சான்றிதழ்.
சாதிச் சான்றிதழ். (தேவை இருந்தால்- கட்டாயம் இல்லை )
எப்படி விண்ணப்பிப்பது?
கலைஞர் மற்றும் கைவினைஞர்களும் தங்கள் அருகிலுள்ள CSC மையத்திற்குச் சென்று PM விஸ்வகர்மா யோஜனாவிற்குப் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனாவின் கீழ் பதிவு செய்வதற்கு பிஎம் விஸ்வகர்மா யோஜனா மொபைல் செயலியை உருவாக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
திட்டத்தின் நோக்கம்
கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரம், அளவு மற்றும் அதிக அளவில் பொருட்கள் வாடிக்கையாளர்களை சென்றடைவதை மேம்படுத்துவது மற்றும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய மதிப்பு சங்கிலியுடன் கைவினைக் கலைஞர்களை ஒருங்கிணைப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.