ஓசி பணம் வாங்க வர்ற உனக்கு இவ்ளோ திமிறா..? உரிமைத்தொகை கிடைக்காத பெண்களின் பரிதாப நிலை...!
By : Mohan Raj
ஓசி பணம் வாங்க வந்துட்டு உனக்கு இவ்ளோ திமிரா..? உரிமைத்தொகையால் அலைக்கழிக்கப்படும் பெண்கள்...!
தூத்துக்குடியில் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்துகொள்ள தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் குவிந்த பெண்களை ‛எருமை மாடுகளா.. அறிவு இல்லை.. ஓசி பணம் வாங்க வந்துட்டு நிற்க முடியாதா.. உங்களுக்கு உட்கார சேர் கேக்குதா?' என வசைபாடிய ஊழியர்..
தேர்தல் வாக்குறுதிகள் கூறியபடி முதல்வர் ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுகிறேன் எனக்கூறி கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி திமுகவின் முன்னாள் தலைவர் அண்ணாதுரை பிறந்த நாள் என்று துவங்கி வைத்தார் இதுவரை தமிழகத்தில் எத்தனை பெண்களுக்கு வந்திருக்கிறது என அரசு சார்பில் பட்டியல் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் தான் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பம் செய்தோரில் பல லட்சம் பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத்தொகை பெற அரசு நிர்ணயம் செய்த தகுதிகள் இல்லாததால் இந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இப்படி நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு எதன் காரணமாக நிராகரிக்கப்பட்டன என தகவல் தெரியாததால் 'எனக்கு பணம் வரவில்லை எனக்கு பணம் வரவில்லை' என தமிழகத்தில் பல பகுதிகளில் குடும்பத்தலைவிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும் நிராகரிக்கப்பட்டோரின் செல்போன்களுக்கு மெசேஜ் மூலம் அதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நேற்று முதல் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் தங்கள் ஆவணங்களை எடுத்துக்கொண்டு உரிமைத்தொகை ஏன் கிடைக்கவில்லை என ஈ-சேவை மையம் மற்றும் தாலுக்கா அலுவலகம் என நடக்கத் துவங்கிவிட்டனர்.
மேலும் அரசு சார்பில் மேல்முறையீடு மனு கொடுப்பதற்காக சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மேல்முறையீடு மனு கொடுப்பதற்கான முகாம் நடந்தது. இந்த முகாமில் மேல்முறையீடு செய்யவும், விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அங்கு அதிகளவில் பெண்கள் குவிந்தனர்.
அதற்கு ஏற்ப அங்கு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அங்கு பெண்கள் முண்டியடித்து கொண்டு இருக்கைகளில் அமர சென்றனர். அதோடு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வேளையில் அங்கு பணியாற்றிய ஊழியர் பெண்களை வசைபாட தொடங்கினர்.
அப்போது, ‛‛எருமை மாடுகளா... அறிவு இல்லையா... சோத்தை தானே திங்குறீங்க.. ஓசி பணம் வாங்க வந்துட்டு நிற்க முடியாதா.. உக்கார சேர் கேக்குதா?'' என கடும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினர். இதனை சில பெண்கள் எதிர்த்து கேள்வி கேட்ட நிலையில் சிலர் கண்கலங்கினர். இதற்கிடையே அங்கிருந்த சில அந்த ஊழியரை கண்டித்து அவரது பெயர் விபரங்களை கேட்டனர். ஆனால் அவர் எதையும் சொல்லாமல் நழுவினர்.
இந்த வீடியோ இணையங்களில் வைரலாகிறது, எங்களுக்கு பணம் இருக்கு, இல்லை என அரசு முறையான ஒரு பட்டியல் வெளியிட்டால் என்ன என்பது போன்ற ஆதங்கம் இன்று தமிழகத்தில் உரிமைத்தொகை கிடைக்காத பல பெண்களுக்கு இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..