தமிழகத்தில் மனித மலத்தை கொண்டு நடக்கும் அட்டூழியம் - அழியாத சுவடு பதித்த சம்பவங்கள்: ஓர் அலசல்!
By : Kathir Webdesk
ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது காட்டும் எதிர்ப்பை மலத்தின் மூலம் வெளிப்படுத்தும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமத்துவம், சமூக நீதி பேசும் திமுக ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் எல்லை தாண்டி செல்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவத்தில் தொடங்கி, இப்போது வரை மலத்தை குடிநீரில் கலக்குவது, பொது வெளியில் வீசுவது என அத்துமீறல்கள் எல்லை கடந்து போகிறது. அவற்றின் தொகுப்பை பார்க்கலாம்.
வேங்கைவயல் சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலான அளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களுக்கும் அருகில் உள்ள ஆதிக்க சமூகத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இவர்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது. வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் விரைவில் கண்டறியப்படுவார்கள் என காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.
சாப்பாட்டில் மலம் வீசினார்கள்
சேலம் மாவட்டம், தேவண்ணக் கவுண்டனூர் கிராமத்தில் பெயின்டர் கமலஹாசன் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதால் பட்டா, பத்திரம் என எதுவும் இல்லை என கூறி, வீட்டை காலி செய்ய சொல்லி ஒரு தரப்பினர் குழந்தைகள் சாப்பாட்டில் மலத்தை வீசினார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மலம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு ஏற்ப பள்ளி கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் குறுகலான இடத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்நிலையில், பள்ளி வகுப்பறைகளுக்கு இரும்பு கேட் பூட்டப்பட்டிருந்த நிலையில் மர்ம நபர்கள், வகுப்பறைகளின் பூட்டுக்களில் மலம் பூசியும், குடிநீர் தொட்டியை உடைத்தும் சென்றிருக்கின்றனர். பள்ளிக்கு போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பள்ளி மாணவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாகவும், அடிக்கடி மர்மநபர்கள் பள்ளியில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்பாக பலமுறை புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டினர்.
ஆட்டோ மீது மனித மலம்
நெல்லை டவுண் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி இவர் இந்து முண்ணனி நகர துணை தலைவராக இருப்பதுடன் இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். நேற்றைய தினம் இரவு வழக்கமாக ஆட்டோவை நிறுத்தும் இடமான டவுண் காட்சி மண்டபத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் இன்று காலை தொழிலுக்கு செல்வதற்காக ஆட்டோவை எடுக்க சென்றபோது ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி, ஆட்டோ ஓட்டுனர் இருக்கை உள்ளிட்ட இடங்களில் மர்ம நபர் மனித மலத்தை பூசி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் கொடுத்தார்.
தினமலர் அலுவலகத்தில் மலம்
தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை விமர்சித்து பிரபல நாளிதழான தினமலர் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிட கழகம் கட்சியினர் தினமலர் நாளிதழின் அலுவலகத்தின் மீது மலம் வீசி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தருமபுரி அரசு பள்ளியில் மலம்?
பென்னாகரம் அருகே உள்ள அரசு பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில், பள்ளி குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் கூறியுள்ளனர். அதன்பேரில், ஆசிரியர்கள் குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்தத் தொட்டியில் மலம் கலந்து உள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அந்தத் தொட்டி சுத்தப்படுத்தப்பட்டது. மனித மலம் கலக்கப்பட்டதா? அல்லது குரங்கு உள்ளிட்ட வேறு ஏதேனும் விலங்குகளின் மலம் கலக்கப்பட்டதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்து துர்நாற்றம் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.