Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு சாம்ராஜ்ஜியத்தையே சரித்த தி.மு.க: தென்னை நார் தொழில் முடங்கிப்போனதன் பின்னணி - ஓர் அலசல்!

ஒரு சாம்ராஜ்ஜியத்தையே சரித்த தி.மு.க: தென்னை நார் தொழில் முடங்கிப்போனதன் பின்னணி - ஓர் அலசல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Sep 2023 2:35 PM GMT

தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிக பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. உலக தென்னை நார் உற்பத்தியில், 60 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில், 23 ஆயிரம் தென்னை நார் சார்ந்த தொழிற்சாலைகள் உள்ளன. தமிழகத்தில் 1960ம் ஆண்டுகளில் நார் தொழிற்சாலைகள் துவங்கப்பட்டு, தற்போது, 7,500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. தமிழகத்தில், 27 மாவட்டங்களில் இந்த தொழில் நடக்கிறது.

14 ஆயிரம் கோடி ரூபாய் வணிகம்

தென்னையில் இருந்து, 5,000 விதமான பொருட்கள் உற்பத்தி செய்யலாம். இந்தியாவில் இருந்து, 4,500 கோடி ரூபாய்க்கு தென்னை நார் பொருட்கள் 125 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் தொழிலாக உள்ளது.உள்நாட்டு தேவைக்காக ஆண்டுக்கு, 14 ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் செய்யப்படுகிறது.இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும், 14 மாநிலங்களில் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.முக்கியமாக கிராமப்புற பெண்கள் வேலைவாய்ப்பு பெற வாய்ப்பாக உள்ளது.

மண்ணில்லா விவசாயத்துக்கு மூலதனம்

கோகோபித் எனப்படும் தென்னைநார் துகள் இந்தியாவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு, ஒன்பது லட்சம் மெட்ரிக் டன் தென்னை நாரும், 14 லட்சம் மெட்ரிக் டன் கோகோபித்தும் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மண்ணில்லா விவசாயத்துக்கு, கோகோபித் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் கோகோபித் மண்ணில்லா விவசாயத்துக்கு கைகொடுக்கிறது. கோகோபித் நீரை தன்னுள் சேமித்து வைத்து, தாவரத்துக்கு வழங்குகிறது. இயற்கைக்கு பாதிப்பு இல்லாதது. இதனால், மாடி தோட்டம், வீட்டு தோட்டம் அமைப்பதற்கு, மண்ணுக்கு பதிலாக கோகோபித் உதவுகிறது. அரசும் இதை ஊக்குவிக்கிறது. முன்பெல்லாம் ரோட்டில் கொட்டப்பட்டு வந்த கழிவுகள் தற்போது, கோகோபித் ஆக மாற்றப்படும் தொழிலாக உருவெடுத்துள்ளது.

மத்திய அரசு மானியம்

தென்னை நாராக ஏற்றுமதி செய்யவும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கவும் மத்திய அரசு உதவிக்கரம் நீட்டுகிறது. கடந்த, ஒன்பது ஆண்டுகளில், இத்தொழிலை ஊக்குவித்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க, 36 கூட்டுக்குழுமங்கள் நாடு முழுவதும் துவங்கப்பட்டுள்ளன. மேலும், 75 கோடிக்கு மேல் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதை வெளிநாடுகளில் சந்தைப்படுத்தவும், வெளிநாடு சென்று வரவும், அரங்கம் அமைக்கவும் மத்திய அரசு மானியம் வழங்குகிறது. மத்திய அரசு ஊக்குவிப்பு நடவடிக்கையால், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இதன் வாயிலாக, இந்தியாவில் 25 சதவீதம் புதிய நிறுவனங்கள் கடந்த ஐந்தாண்டுகளில் வந்துள்ளது.

திமுக அரசு செய்துள்ள சதி

மத்திய அரசின் சிறு,குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை அமைச்சகத்தின் கீழ், தென்னை நார் தொழிலை மேம்படுத்த, தேசிய கயிறு வாரியம் இயங்கி வருகின்றது. இதன் மூலம் 74500 கோடி வரை அன்னிய செலாவணியும், உள்நாட்டு உற்பத்தி மற்றும் சந்தை மூலம் வருவாய் வாய்ப்பையும் உருவாக்குகிறது. தமிழகத்தில் சுமார் 8000 மேற்பட்ட தென்னைநார் தொழிற்சாலைகள் உள்ளன.

மத்திய அரசின் மாசுக் கட்டுபாட்டு வாரியம், பல்வேறு தொழில்துறை நிறுவனங்களை வெள்ளை, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைபடுத்தி வைத்திருக்கின்றது. 2016 ஆம் ஆண்டு, தென்னை நார் சார்ந்த தொழிலானது "வெள்ளை" பிரிவில் (White Category) மத்திய அரசின் சுற்றுச் சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சான்று அளிக்கப்பட்டு இயங்கி வந்தது.

ஆனால் தமிழக அரசு தென்னை நார் தொழிலை, ஆரஞ்சு வகை (Orange Category) என அரசு ஆணை பிறப்பித்து, தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழிலை வெள்ளை வகை பிரிவிலிருந்து ஆரஞ்சு வகை பிரிவிற்கு மாற்றி உத்தரவிட்டது. திமுக அரசின் இந்த நிலைப்பாட்டால், அன்னிய செலாவணி மற்றும் உள்நாட்டு உற்பத்தி, வேலை வாய்ப்பு மற்றும் தென்னை நார் பொருட்கள் உற்பத்தி பெரிதளவில் பாதிக்கப்பட்டன. மேலும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழிலினை ஆரஞ்சு வகை ( Orange Category) என உத்தரவு பிறப்பித்ததால், மின்கட்டண மானியம் கிடைக்காமலும், அதிகப்படியான மின் கட்டண உயர்வாலும், தென்னை நார் தொழிற்சாலைகள் இயக்கம் பெரிதளவில் பாதிக்கப்பட்டது.

ஒரு தொழிலையே சீர்குலைத்து, உற்பத்தியாளர்கள் மற்றும், தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குரியதாக்கிய திமுக, இன்று தென்னை நார் தொழிலை மீண்டும் வெள்ளை வகை தொழிலாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது.வெள்ளை வகையில் இருந்த தென்னை நார் தொழிலை ஆரஞ்சு வகைக்கு மாற்றி, ஒட்டு மொத்த தென்னை நார் தொழிலையே முடக்கிய திமுக, இன்று மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது பழி போட்டு, தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News