Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் அடுத்த மாஸ்டர் ஸ்ட்ரோக்: முன்னேறும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்!

மத்திய அரசின் அடுத்த மாஸ்டர் ஸ்ட்ரோக்: முன்னேறும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Oct 2023 2:39 AM GMT

நாடு முழுவதும் அனைவருக்குமான உயா் தரமான கல்வியை வழங்க பி.எம் ஸ்ரீ பள்ளிகள் எனப்படும் முன்னேறும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள் திட்டம் ரூ27,360 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய திட்டம் தற்போது மத்திய, மாநில அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில், தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளை வலுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் 14500க்கும் அதிகமான பள்ளிகள் பிஎம் ஸ்ரீ பள்ளிகளாக மேம்படுத்தப்படும். பிஎம் ஸ்ரீ பள்ளிகள், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அனைத்து அம்சங்களையும் கொண்டதாகவும் மற்ற பள்ளிகளுக்கு முன்மாதிரியாகவும் விளங்கும். இந்தப் பள்ளிகள் தரமான பயிற்றுவித்தல் மூலம் மாணவர்களை மேம்படுத்துவதோடு, 21-ம் நூற்றாண்டுக்கான திறன்களுடன் ஒவ்வொரு மாணவரையும் முழுமையான அனைத்து திறன் கொண்டவராக உருவாக்கப் பாடுபடும்.

குஜராத்தில் உள்ள காந்திநகரில் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்த ஒரு மாநாட்டின் போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்களுடன் இந்த திட்டம் முதலில் விவாதிக்கப்பட்டது. மாநிலங்களுடன் கலந்தாலோசித்து இம்முயற்சி முன்னெடுக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அப்போது தெரிவித்திருந்தார். நவோதயா வித்யாலயா பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் போன்ற முன்மாதிரியான பள்ளிகள் இருக்கும்போது, ​​பி.எம். ஸ்ரீ தேசிய கல்விக் கொள்கை ஆய்வகங்களாக செயல்படும் என்று அவர் கூறினார்.

பி.எம். ஸ்ரீ பள்ளிகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலிருந்து எவ்வாறு வேறுபடும்?

கேந்திரிய வித்யாலயாக்கள் அல்லது ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் முற்றிலும் மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் வருகின்றன. மத்தியத் துறைத் திட்டங்களின் கீழ் அவை மத்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்படுகின்றன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பணியமர்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி கற்பித்தலை கேந்திரிய வித்யாலயாக்கள் பெரிதும் பூர்த்தி செய்யும். அதே வேளையில், நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள திறமையான மாணவர்களை வளர்ப்பதற்காக ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் அமைக்கப்பட்டன. இதற்கு மாறாக, பி.எம் ஸ்ரீ பள்ளிகள், தற்போதுள்ள மத்திய, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளை மேம்படுத்தும். இதன் அடிப்படையில் பி.எம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள், மாநில அரசு பள்ளிகள் அல்லது முனிசிபல் கார்ப்பரேஷன்களால் நடத்தப்படும் பள்ளிகளாக இருக்கலாம்.

பி.எம் ஸ்ரீ (PM SHRI) பள்ளிகள் சிறப்பம்சம்

பள்ளியில் ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு உபகரணங்கள், கலை அறை போன்ற நவீன உள்கட்டமைப்புகளுடன் இருக்கும். நீர் பாதுகாப்பு, கழிவு மறுசுழற்சி, மின்சார உள்கட்டமைப்பு மற்றும் இயற்கை வாழ்க்கை முறையை பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கும் பசுமை பள்ளிகளாகவும் உருவாக்கப்படும். சூரிய மின்சக்தி தகடுகள், எல்இடி விளக்குகள் இயற்கை வேளாண்மையுடன் ஊட்டச்சத்து தோட்டங்கள், கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் நீக்கம், மழைநீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைக் கல்வி, பருவநிலை மாற்றம் தொடர்பான ஹேக்கத்தான், நீடிக்கவல்ல வாழ்க்கை முறைக்கான விழிப்புணர்வு போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களைக் கொண்டு இந்தப் பள்ளிகள் பசுமைப்பள்ளிகளாக மேம்படுத்தப்படும்.

இந்தப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படும் கற்பித்தல் முறை மிகுந்த அனுபவம் வாய்ந்ததாகவும், முழுமையானதாகவும், ஒருங்கிணைந்ததாகவும், விளையாட்டு அடிப்படையிலும், கேள்வி கேட்கும் முறை சார்ந்தும், கண்டுபிடிப்பு சார்ந்தும், விவாத அடிப்படையிலும், நெகிழ்ச்சியானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் அமையும். ஒவ்வொரு படிவத்திலும், ஒவ்வொரு குழந்தையின் கற்றல் திறனில் கவனம் செலுத்தப்படும். அனைத்து நிலைகளிலும் மதிப்பீடு என்பது கருத்து அறிதல், வாழ்க்கை நிலைகளுக்கு அறிவை பயன்படுத்துதல் மற்றும் போட்டித்தன்மை அடிப்படையில் அமையும். வேலைவாய்ப்பை விரிவுபடுத்தவும், சிறந்த வேலைவாய்ப்பு கிடைப்பதைக் கண்டறியவும், துறைவாரியான திறன் அமைப்புகள் மற்றும் உள்ளூர் தொழிற்சாலைகளுடன் இணைப்பு ஏற்படுத்தப்படும்.

நடக்க போகும் மாற்றம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா வித்யாலயா பள்ளிகள், சமக்ரா சிக்ஷா ஆகியவற்றுக்கு தற்போதுள்ள நிர்வாக கட்டமைப்பின் மூலம் பிஎம் ஸ்ரீபள்ளிகள் திட்டம் அமல்படுத்தப்படும். தேவைப்பட்டால் குறிப்பிட்ட திட்ட அடிப்படையில் மற்ற தன்னாட்சி அமைப்புகள் ஈடுபடுத்தப்படும். தேசிய கல்விக் கொள்கை 2020 அமலாக்கத்தில் எதிர்கொள்ளப்படும் சவால்களை புரிந்து கொள்ளவும், முன்னேற்றத்தை மதிப்பிடவும் இந்தப் பள்ளிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நேரடியாக பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News