வெளிநாட்டை போன்ற பிரம்மாண்டம்: அசர வைக்கும் மூணாறு - போடிமெட்டு ரோடு! மத்திய அரசுக்கு மணிமகுடம்!
By : Kathir Webdesk
கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறு முதல் தேனி மாவட்டம் போடிமெட்டு வரையில் உள்ள கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மிக குறுகிய சாலையாக இருந்தது. இந்த சாலையை நல்ல அகலமான மழைநீர் வடிகாலுடன் கூடிய இரண்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. 2017ல் இதற்கானபணிகள் தொடங்கியது.
மூணாறு-போடிமெட்டு இடையே சுமார் 42 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சாலையை விரிவாக்கம் செய்யும் பணிக்கு 381 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. லாக்காடு என்ற இடத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சாலை விரிவாக்க பணிகள் 2020க்குள் முடிந்திருக்க வேண்டிய நிலையில், லாக்காடு, கேப்ரோடு பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலை விரிவாக்க பணியை மேற்கொள்வது பெரும் சவாலாக இருந்தது. குறிப்பாக 2018ம் ஆண்டு பெய்த பேய்மழை மூணாறு பகுதியை மொத்த புரட்டி போட்டது. கடும் சவால்களுக்கு நடுவில் இருவழிப்பாதையாக போடி மெட்டு மூணாறு பாதை மாறி உள்ளது.
தேயிலை தோட்டங்கள், மலைத் தொடர்கள் நடுவில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. பசுமை பள்ளத்தாக்கும், மூடுபனியும் நிறைந்த இப்பகுதியை வாகனங்களில் கடந்து செல்வது, வெளிநாட்டில் பயணிப்பது போன்ற உணர்வை தருகிறது. பல ஆண்டுகளாக இச்சாலை சீரமைப்புப் பணிக்காக போடிமெட்டு வழியே வரும் வாகனங்கள் பூப்பாறை, ராஜகுமாரி வழியே மூணாறுக்கு சுற்றி போகின்றன. இப்போது போடப்பட்டுள்ள சாலை மூலம் மூணாறுக்கு விரைவாகவும், தேயிலை தோட்டங்கள் வழியே இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல முடியும். மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் 910 கோடி ரூபாய் செலவில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு-கொச்சி இடையே 124 கி.மீ தூரத்துக்கு சாலை சீரமைக்கப்படுகிறது.