Kathir News
Begin typing your search above and press return to search.

இவர் இருந்த வரையில் திராவிட இயக்கம் இருந்த இடம் தெரியல: வரலாறு பேசும் தேவரின் பின்னணி!

இவர் இருந்த வரையில் திராவிட இயக்கம் இருந்த இடம் தெரியல: வரலாறு பேசும் தேவரின் பின்னணி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 Oct 2023 1:09 AM GMT

முத்துராமலிங்கத் தேவர் ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் ஆங்கில அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். இவர் இருந்த காலம் வரையில் திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வளரவில்லை. தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர் என்பதை முழக்கமாக கொண்டு செயல்பட்டவர்.

ஆரம்ப வாழ்க்கை

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற ஊரில் வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பப்பள்ளி படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார். அரசியலில் தேவர் கையில் எடுத்த இந்தக் குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920ல் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராகத் தேவர் அவர்கள் முதன்முதலாகப் போராடினார். தேவர் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்குப் பின்புதான் இந்தப் போராட்டம் உச்சகட்டம் எட்டியது.

அரசியல் பிரவேசம்

1936ல் வாரிய தேர்தலில் தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் நீதிக்கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். இதுவே தேவரின் முதல் தேர்தல் வெற்றியாகும். இந்த வெற்றிக்குப் பின்னர் தேவர் மாவட்ட வாரிய தலைவரானார். 1937ல் இராமநாதபுரம் தொகுதியில் தேவர் போட்டியிட்டார். இவரது அரசியல் வளர்ச்சியைக் கண்டு பயந்துபோன ஆங்கிலேய நீதி கட்சியரசு, பலம் வாய்ந்த எதிர் வேட்பாளராக இராமநாதபுர மன்னர் அவர்களை நிறுத்தியது. ஆனாலும் முத்துராமலிங்க தேவர், அந்தத் தேர்தலில் மன்னரை எதிர்த்து மாபெரும் வெற்றிபெற்றார்.

1952, 1957 பொது தேர்தல்

1952ல் இந்தியா சுதந்திரம் பெற்றதுக்கு பிறகு முதல் பொது தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் அல்லாத ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்புடன், தேவரின் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. லோக் சபா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடந்தன. இதில் தேவர், அருப்புகோட்டை லோக்சபா தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றியும் பெற்றார். இதில் தேவர் அவர்கள் லோக்சபா பதவியைத் துறந்து, சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார். இந்தத் தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் மதராஸ் சட்ட மன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்தது. மீண்டும் 1957ல் பொது தேர்தல் நடந்தது. தேவர் அருப்புகோட்டை தொகுதியில் லோக்சபா உறுப்பினருக்கும், முதுகுளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கும் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் வென்றார். இந்த முறை தேவர், சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார்.

இறுதி நாட்கள்

1959ல் மதுரை நகராட்சி தேர்தலில் கம்யூனிஸ்டுகள், இந்திய தேசிய குடியரசு காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேவரின் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. இந்தத் தேர்தலின் பொழுதுதான் திராவிட முன்னேற்ற கழகமும் உருவானது. இதில் தேவரின் கூட்டு கட்சிகள் வெற்றி வாகை சூடின. இதுவே தமிழகத்தில் காங்கிரசின் முதல் வீழ்ச்சியாகும்.

பின்னர் 1962ல் மீண்டு லோக் சபா தேர்தலுக்கு இவர் முன்னிறுத்தப்பட்டார். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு உடல்நலக்குறைவின் காரணமாக அப்போது நடைபெற்ற கூட்ட தொடரில் பங்கேற்க டெல்லி செல்ல முடியவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1963 அக்டோபர் 29 அதிகாலை 5 மணியளவில் மரணமடைந்தார். அவரது உடல் அக்டோபர் 30 பசும்பொன்னில் வள்ளலாரின் முறைப்படி பூஜை நடத்தி அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

கொள்கை பிடிப்போடு வாழ்ந்தவர்

ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை , ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன. ஒரு தேசியவாதியாக திராவிடர் கழகம் மற்றும் அதன் வழி கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஆகியனவற்றை எதிர்த்தார். அவற்றின் பிரிவினை வாதம் மற்றும் குறுகிய நோக்கு போன்ற கொள்கையை வெறுத்தார். கடவுள் மறுப்புக் கருத்துக்களை அடித்து நொறுக்கும் கேள்விகளை முன் வைத்தார். அவரது கேள்விகளுக்கு கடவுள் மறுப்பு பேசியோரால் பதில் சொல்ல இயலவில்லை. வர் ஒவ்வோர் ஆண்டும் வடலூர் தைப்பூச திருவிழாவில் கலந்துகொண்டு, வள்ளலாரின் ஆன்மீக கருத்துகளை விவரித்துப் பேசி வந்தார். அவரது பேச்சை ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு கேட்டு ரசித்தனர். ஆன்மீகத்தில் தேவர் கொண்டிருந்த ஞானமும் ஆன்மீக சொற்பொழிவுகளும் இவருக்கு தெய்வத்திருமகன் என்ற பெயரைப் பெற்றுத்தந்தன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News