பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் அதிகாரிகள் அடித்த கூத்து! ஏழைகள் வயிற்றில் அடித்த அவலம் - மொத்தமா சிக்கப்போகும் பெருச்சாளிகள்.....
By : Mohan Raj
பிரதமர் வீடு கட்டும் திட்டம்.. சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்... சிக்கப்போவது யார் தெரியுமா?
பிரதமர் வீடு கட்டும் திட்டமான பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவில் தமிழகத்தில் பல பயனாளிகள் பயனடைந்துள்ளனர், குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும், எளியவர்களுக்கும் அவர்கள் வாழும் கூரை வீட்டில் இருந்து கான்கிரீட் வீட்டு அமைக்க பிரதமர் மோடி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்கின்ற பெயரில் திட்டம் ஒன்றை வடிவமைத்து செயல்படுத்தி வந்தார்.
பிரதமர் மோடியின் கனவு திட்டமான இந்த திட்டத்தில் இதுவரை பல லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன, ஆனால் தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கும் தொகையினை முறையாக பயனாளர்களுக்கு ஒதுக்காமலும், அப்படி தொகை ஒதுக்கப்பட்டால் அவர்களிடம் லஞ்சப் பணம் கேட்டும், போலி ஆவணங்களை சமர்ப்பித்தும் பல முறைகேடுகள் நடந்தது குறித்து அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் முறைகேடு அதிகரித்திருப்பது குறித்து பல விசாரணைகள் நடத்தப்பட்டாலும், முன்னேற்றம் எதுவும் பெரிதாக தென்படவில்லை. இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த உதயகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார், அந்த மனுவில் 'திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் மருதூர் கிராமத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டமான ஆவாஸ் யோஜனா திட்டத்தில் விதிகள் மீறப்பட்டுள்ளது. அந்த மருதூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நீலகண்டன் தங்கப்பொண்ணு ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன, இதில் நீலகண்டன் வீட்டின் புகைப்படத்தை தங்கப்பொண்ணு மற்றும் வேறு சிலர் பயன்படுத்தியுள்ளார்கள்.
இதில் தங்கப்பொண்ணு என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபரில் மரணம் அடைந்து விட்டார். ஆனால் தங்கப் பொண்ணு உயிரோடு இருப்பது போல் போலி அடையாள அட்டை தயாரித்து முறைகேடு செய்திருக்கிறார்கள். இதுபோல் தமிழகத்தில் இறந்தவர் பெயரில் வீடு மற்றும் மற்றொருவர் பெயரில் உள்ள வீட்டை தான் வீடு என்பது போல் காட்டுவது என பல முறைகேடுகள் நடந்துள்ளன.
இப்படித்தான் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடக்கின்றன, தமிழகத்தில் இது பற்றி விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணை நடத்தி வருகிறது, கடந்த முறை விசாரணைக்கு வந்த போது பிரதமர் வீடு கட்டம் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இருந்தாலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது, இந்த நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது, இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எல்.விக்டோரியா கௌரி அமர்வில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் 'பிரதமர் வீடு கட்டும் திட்டம் ஏழைகளுக்கு பயன் அளிக்கும் திட்டம், இந்த திட்டத்தின் நோக்கமே முற்றிலும் சிதைக்கப்பட்டு இருக்கிறது. மக்களுக்காக பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதை அனுமதிக்க மாட்டோம். ஹை கோர்ட் உத்தரவிட்டும் மாவட்ட கலெக்டர் அறிக்கை அளித்த பிறகும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்.
இந்த திட்டத்தை முறையாக கவனிக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர் தனது பணியை சரியாக மேற்கொள்ளவில்லை, கடைநிலை ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இது போன்ற முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும், திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி அவர்களை இந்த வழக்கில் மனுதாரராக சேர்க்கிறோம்.. பிரதமரின் வீடு கட்டும் திட்டம் முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும், இந்த முறைகேடு வழக்கு கடைநிலை ஊழியர்களுடன் ஒடுக்க முயற்சிப்பது கண்டனத்திற்குரியது' என கூறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், தவறினால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் எனவும் இந்த வழக்கு நவம்பர் 28ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது எனவும் நீதிபதி தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்தது குறித்து நீதிமன்றமே இறங்கி வந்து சாட்டையை எடுத்தது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தமிழகத்தில் பல அதிகாரிகள் வசமாக சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.