Kathir News
Begin typing your search above and press return to search.

மோசமான நிலையில் அரசு பேருந்துகள்.. கடும் நஷ்டத்தை சந்திக்கிறதா போக்குவரத்துக் கழகம்..

மோசமான நிலையில் அரசு பேருந்துகள்.. கடும் நஷ்டத்தை சந்திக்கிறதா போக்குவரத்துக் கழகம்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 May 2024 12:16 PM GMT

மிக மோசமான சூழலில் தள்ளாடும் அரசு போக்குவரத்துக் கழகங்கள்:

தமிழகத்தில் தற்போது சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி என 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, முதியவர்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் உள்ளிட்ட திட்டங்களை போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுத்தி வருகின்றன.பல்வேறு சிறப்பு திட்டங்களில் இலவமாக மக்கள் பயணிக்கும் நிலையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. தற்போது போக்குவரத்து கழகங்கள் மிக மோசமான சூழலில் தள்ளாடி கொண்டிருக்கிறது.


நீண்ட நாட்களாக இயக்கப்படும் பழைய பேருந்துகள்:

இதற்குக் காரணம் தற்போது பல்வேறு பழைய பேருந்துகளை பழுது பார்க்காமலும், புதிய பேருந்துகள் வாங்குவது தொடர்பான எந்த ஒரு நடவடிக்கை எடுக்காதது தான் காரணம் என்று பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. பயன்பாட்டில் உள்ள பல பேருந்துகளில் மேற்கூரை உடைந்து தொங்குவது, ஓட்டை விழுந்து மழைநீர் ஒழுகுவது மிகவும் வாடிக்கையாக உள்ளது. பேருந்துகளில் சீட் கிழிந்து பயணிகள் அமர்ந்து பயணிக்க முடியாத நிலை உள்ளது. பழுதான படிக்கட்டுகள் திடீரென்று கழன்று விழுகின்றன. பழைய பேருந்துகளே நீண்ட நாட்களாக இயக்கப் படுகின்றன. புதிய பேருந்து வாங்க போக்குவரத்து கழகங்களிடம் எவ்வித நிதி ஆதாரங்களும் இல்லாத நிலை உள்ளது.


அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு:

சமீபத்தில் கூட தி.மு.க அரசு புதிய பேருந்துகளை வாங்கவில்லை என்றும், பழைய பேருந்துகளை சரி செய்யவில்லை என்றும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டினார். 5,000-க்கும் மேற்பட்ட பேருந்துகளை வாங்குவதற்கான திட்டத்தை மட்டும் அறிவித்து இருந்தது தி.மு.க. சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யவே மக்கள் அஞ்சுகின்றனர். மேலும், டாஸ்மாக் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் திமுக அரசு அக்கறை கொண்டுள்ளது என்றும், தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்றும், அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் பழனிசாமி கூறினார்.


அறிவிப்பு இன்று வரை அறிவிப்பாகவே இருக்கிறது, செயலில் இல்லை:

தமிழக காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பு, கடந்த 13.9.2021 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு காவலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் இலவச பயணம் மேற்கொள்ள நவீன அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என்றும் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத சூழலில், அடிக்கடி இலவச பயணம் தொடர்பாக காவலர்களுக்கும், அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.


அரசுப் பேருந்து பயணத்தில் நடந்த அட்ராசிட்டிகள்:

திருச்சி நகரப் பேருந்து ஓடிக்கொண்டு இருக்கும்போது நடத்துனர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டு வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்ய வேண்டும் என்றும், அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் திமுக அரசை பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.


தமிழக அரசின் அறிவிப்பை பொறுத்திருந்துதான் செயலில் பார்க்க வேண்டும்:

இந்த நிலையில் தமிழக அரசு இது தொடர்பாக அறிக்கை ஒன்றை மட்டும் வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறும் பொழுது, "2024-2025 நிதியாண்டில் மேலும் 2666 பேருந்துகள் ஜெர்மனியைச் சேர்ந்த வங்கியின் நிதியுதவி மூலம் வாங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1000 மின்சாரப் பேருந்துகளுடன் உள்பட 7,000 புதிய பேருந்துகளை தமிழக அரசு கொள்முதல் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேருந்துகள் அனைத்தும் அடுத்த ஆண்டுக்குள் கொள்முதல் செய்யப்படும்" என்றும் சொல்லப்படுகிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News