முதல்வர் மகன் முதல் முக்கிய அமைச்சர்கள் வரை இந்து மத வெறுப்பு பிரச்சாரத்தை முன்வைத்த உடன்பிறப்புகள்!
By : Sushmitha
தமிழகத்தின் முதல்வரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் பாஜக மதவெறி அரசியல் நடத்துவதாக விமர்சித்துள்ளார். ஆனால் இதுவரையில் இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை திமுகவின் முக்கிய அமைச்சர்களே பேசி வந்துள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின்:
கடந்த செப்டம்பர் மாதத்தில் சென்னை காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் திராவிடக் கழகத்தின் தலைவர் வீரமணி, அமைச்சர்களான உதயநிதி, பொன்முடி, சேகர்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி "மாநாட்டின் தலைப்பே என்னைக் கவர்ந்திருக்கிறது. சிலவற்றை மட்டும் தான் எதிர்க்க வேண்டும், சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும்.
அந்த வகையில் டெங்கு, மலேரியா மற்றும் கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது ஒழிக்க வேண்டும். அதேபோன்று சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியானது" என்று நேரடியாகவே சனாதனத்தையும் சனாதனத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள இந்து மக்களையும் சாடி சனாதனத்தை ஒழித்து தீர வேண்டும் என்று பேசினார்.
அமைதி காத்த சேகர்பாபு :
சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருந்த அதே சமயத்தில் அதே மேடையில் அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் சேகர் பாபு அமர்ந்திருந்ததோடு உதயநிதியின் கருத்திற்கு மறுப்பும், எதிர் கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்திருந்தார்! இதன் மூலம் உதயநிதியின் கருத்திற்கு அவரும் உடன்படுவது போன்ற நிலைப்பாட்டையே அவர் எடுத்ததாக பார்க்கப்படுகிறது.
இந்துக்கள் விபச்சாரியின் மகன் - ஆ.ராசா:
இவர்களைத் தொடர்ந்து, திமுக துணை பொதுச் செயலாளரான ஆ.ராசா பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியின் பொழுது, "உச்ச நீதிமன்றம் நீ கிறிஸ்தவனாக இல்லை என்றால், இஸ்லாமியனாக இல்லையென்றால் பார்சியனாக இல்லையென்றால், நீ இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன், சூத்திரனாக இருக்கிற வரை நீ விபச்சாரியின் மகன், இந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன், எத்தனை பேர் இப்படி விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்" என்று கொடுஞ்சொற்களால் இந்து மதத்தையும் அதனைப் பின்பற்றும் மக்களையும் சாடியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து "சனாதனம் என்பது எச்.ஐ.வி. வைரஸை போன்றது" என்று கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆ.ராசா, "நீங்கள் சொல்கிற கடவுள் இந்து கடவுள் என்றால், இதுதான் ஜெய் ஸ்ரீ ராம் என்றால், இதுதான் பாரத் மாதா கி ஜெ என்றால், அந்த ஜெய் ஸ்ரீராமரையும், பாரத மாதாவையும் நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம், தமிழ்நாடு ஏற்காது" என்று பேசியுள்ளார்.
கனிமொழி பேச்சு:
2018 இல் திருச்சியில் நடைபெற்ற உலக நாத்திகர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி, "கடவுளுக்கு எதிரே உள்ள பண வசூல் பெட்டியை துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியாளர்கள் ஏன் பாதுகாக்க வேண்டும்? கோயிலை நடத்துபவர்களுக்கே பண வசூல் பெட்டியை கடவுள் பாதுகாப்பார் என்பதில் நம்பிக்கை இல்லையெனில் நான் ஏன் கடவுளை நம்ப வேண்டும்?" என்று மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் பேசியிருந்தார்.
இப்படி முதல்வரின் மகனில் ஆரம்பித்து திமுகவின் முக்கிய அமைச்சர்கள் அனைவருமே இந்து மதத்தை எதிர்த்து, இந்து மக்களை புறந்தள்ளும் வகையில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் அவர்களை கண்டு கொள்ளாமல் கண்டிக்காமல் பாஜக மதவெறி அரசியல் செய்வதாக குற்றம் சாடி வருகிறார். இது மட்டும் இன்றி இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ விழாக்களின் பொழுது அதற்கு தலைமை ஏற்று முன் நின்று நடத்தி வைக்கும் முதல்வர் ஸ்டாலின் இதுவரை தீபாவளிக்கு மக்களுக்கு வாழ்த்து கூறாதது ஏன் என்ற கேள்வியும் இன்றளவும் உலா வந்து கொண்டு தான் உள்ளது!!