Kathir News
Begin typing your search above and press return to search.

நீட் தேர்வில் தொடர்ந்து அசத்தும் தமிழக மாணவர்கள்..! அரசியலாக்கும் திமுக!!

நீட் தேர்வில் தொடர்ந்து அசத்தும் தமிழக மாணவர்கள்..! அரசியலாக்கும் திமுக!!

SushmithaBy : Sushmitha

  |  7 Jun 2024 2:27 AM GMT

நீட் தேர்வு:

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பை மேற்கொள்ள நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசியலில் நீட் எதிர்ப்பு என்பது இன்றளவும் தீயாகக் கொழுந்து விட்டு எரிகிறது!. ஆனால் ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வில் தமிழக மாணவ, மாணவிகள் சாதனை புரிந்து வருகின்றனர். அதாவது தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 11 ஆயிரம் அதிகரித்துள்ளது.

சாதிக்கும் தமிழக மாணவர்கள்:

முன்னதாக தமிழகத்தில் மக்களிடையேவும் நீட்டுக்கான எதிர்ப்பு பெருமளவில் இருந்தது. ஆனால் மருத்துவ படிப்பை தனது கனவாக கொண்ட பல மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்காக தன்னை தயார்படுத்தி, தற்போது பல சாதனைகளை புரிந்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்த ஆண்டு கடந்த மே ஐந்தாம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த நான்காம் தேதி வெளியானது. அதில் கடந்த ஆண்டில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றதை விட அதிகமானவர்கள், இந்த ஆண்டில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 720க்கு 720 மதிப்பெண்களை 67 பேர் பெற்றனர். அவர்களின் தமிழக மாணவர்கள் ஏழு பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டில் 78 ஆயிரத்து 693 பேர் தமிழகத்தில் தேர்ச்சி பெற்றனர். ஆனால் இந்த ஆண்டு 10 ஆயிரத்து 733 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்று, மொத்த தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 89,426 ஆக அதிகரித்துள்ளது.

அதிகமாகும் தேர்ச்சி விகிதம்:

கடந்த ஆண்டு தேசிய அளவில் 11.46 லட்சம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 13.16 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு விட 1.70 லட்சம் அதிகமாகும். மாணவிகள், மாணவர்கள், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினர் என ஒவ்வொரு தரப்பாக பார்த்தாலும், கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு மூன்று திருநங்கையர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 10 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு பக்கம் தமிழக அரசியலில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகளும் மற்றும் அது சார்ந்த போராட்டங்களும் எழுந்து வருகிறது. ஆனால் மறுபக்கம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் கலக்கி வருகின்றனர். அதோடு நீட் தேர்வை தமிழில் எழுதுவோரின் எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

திமுகவின் முரணான செயல்:

இப்படி தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது நீட் விலக்கு குறித்து திமுகவின் நிலைப்பாட்டிற்கு முரணானது. இருப்பினும், இந்த தேர்வு தமிழக மாணவர்களுக்கு பாதகமாக இருப்பதாக தொடர் வாதங்களை முன்வைத்து இத்தேர்வுக்கான எதிர்குரலை திமுக கொடுத்து வருகிறது. மேலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி திமுக தலைமையிலான தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் அதற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காததால் மறுபரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலே மாநில அரசு தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றியது. இது தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News