அமெரிக்காவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் புலம்பெயர் இந்தியர்கள்..!
By : Sushmitha
இந்திய வம்சாவளி அமெரிக்கர்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 50 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. மேலும் அமெரிக்காவில் மிகவும் செல்வாக்கு மிக்க புலம்பெயர்ந்த குழுக்களில் ஒன்றாகவும் இந்திய வம்சாவளிகள் மாறி உள்ளதாக "அமெரிக்காவில் இந்திய வம்சாவளிகளின் தாக்கம் சிறிய சமூகம், பெரிய பங்களிப்புகள்" என்ற ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இதனை இண்டி யாஸ்போரா என்ற குழுமம் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில் பொது சேவை, வணிகம், கலாச்சார மற்றும் அரசியல் என அனைத்திலும் சிறப்பு கவனம் செலுத்தி அமெரிக்காவில் புலம்பெயர்ந்த இந்தியர்களின் தாக்கத்தை ஆராய்ந்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
டாப் 16 நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இந்தியர்கள்:
அந்த ஆய்வறிக்கையின் படி, இந்திய வம்சாவளியினரின் பொருளாதாரம் அமெரிக்காவில் ஈர்க்கும் வகையில் உள்ளதாகவும், பெரிய நிறுவனங்களை நிறுவியதிலிருந்து தங்களது வரிதளத்தை கணிசமாக உயர்த்துவது வரை புதிய நாட்டுக்கு, இந்திய வம்சாவளிகள் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதாக கூறப்படுகிறது. மேலும் உலகின் முதல் 500 சிறந்த நிறுவனங்களில் இந்திய வம்சாவளியினர் 16 நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் உள்ளனர். அதுமட்டுமின்றி இவர்கள் மொத்தம் 27 லட்சம் அமெரிக்கர்களை பணியமர்த்தி கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் டாலர் வருவாயை ஈட்டுகின்றனர்.
நிறுவனங்களில் நிறுவி தலைமை பொறுப்பில் இருப்பது மட்டுமின்றி இந்திய வம்சாவளியினரின் தொழில் முனைவோர் மனப்பான்மை சிறு சிறு வணிகங்களிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா முழுவதும் உள்ள உணவகங்களின் 60 சதவீதத்திற்கு மேற்பட்ட உணவகங்களை இந்திய அமெரிக்கர்கள் வைத்துள்ளனர். வரி செலுத்துவதிலும் அனைத்து வருமான வரிகளிலும் சுமார் ஐந்து முதல் ஆறு சதவீதத்தை இந்திய அமெரிக்கர்கள் மட்டுமே செலுத்தி வருகின்றனர்.
கல்வித்துறையிலும் கலக்கும் இந்திய வம்சாவளிகள்:
அதே சமயத்தில் அமெரிக்காவில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் கல்வித்துறையிலும் இந்திய வம்சாவளிகளின் பங்களிப்பு செழித்து காணப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானிகள் 13 சதவீத அறிவியல் வெளியீடுகளை பங்களித்தனர். மேலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 22,000 ஆசிரியர்கள் அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவற்றில் பொது சேவை, சமையல், சுகாதாரம், யோகா மற்றும் ஆயுர்வேதா ஆகிய துறைகளிலும் இந்தியர்களின் தாக்கமே மேலோங்கி உள்ளது.
அரசியலிலும் இந்திய வம்சாவளிகள்:
இதனால் இந்தியர்களின் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, ஹோலி பண்டிகைகளும் அமெரிக்காவில் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இப்படி இந்திய வம்சாவளிகளின் பங்கு அமெரிக்காவில் பரந்து காணப்படுகிறது. மேலும் மேலே குறிப்பிட்ட துறைகளைத் தவிர அரசியலிலும் இந்திய வம்சாவளிகளின் பங்கானது அமெரிக்காவில் ஓங்கியே காணப்படுகிறது. செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் மேயர்களாக அமெரிக்க ஜனநாயக அமைப்பிலும் இந்திய வம்சாவளிகளின் பங்கு அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டில், 150 க்கும் அதிகமான பதவிகளை வகித்து வந்துள்ளனர். அதில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் முக்கிய பதவி வகிக்கும் முதல் இந்திய வம்சாவளி பெண்மணி என்ற வரலாற்றைப் படைத்தவர்.
அமெரிக்க பொருளாதாரத்தின் வளர்ச்சி:
இதனை அடுத்து அறிக்கையை வெளியிட்ட இண்டி யாஸ்போரா அமைப்பின் நிறுவனர் எம் ஆர் ரங்கசாமி கூறும் பொழுது, அமெரிக்க மக்கள் தொகையில் இந்திய வம்சாவளியினர் 1.5% மட்டுமே உள்ளனர். இருப்பினும் பல அம்சங்களில் அமெரிக்க சமூகத்தில் நேர்மையான தாக்கத்தை அவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் இந்திய அமெரிக்கர்களின் பங்களிப்பு அமெரிக்காவின் அடுத்த கட்ட பொருளாதர வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளத்தை அமைக்கிறது என்று கூறியுள்ளார்.