Kathir News
Begin typing your search above and press return to search.

சர்வதேச யோகா தினம்: ஈஷா சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இலவச யோக வகுப்புகள்!

சர்வதேச யோகா தினம்: ஈஷா சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இலவச யோக வகுப்புகள்!

SushmithaBy : Sushmitha

  |  21 Jun 2024 4:45 PM GMT

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 21) ஈஷா சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இலவச யோக வகுப்புகள் நடைப்பெற்றது. கோவை வேளாண் பல்கலைகழக வளாகத்தில் நடைப்பெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். தமிழ்நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களும், பொதுமக்களும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு யோகப் பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்.


நம் பாரத தேசத்தின் பெருமையான அம்சங்களில் ஒன்றாக விளங்கும் யோக அறிவியலை சாதி, மத, இன பேதம் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில், தளராமல் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈஷா யோகா மையம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் மிகப்பெரிய அளவில் இலவச யோக வகுப்புகளை ஈஷா யோகா மையம் நடத்தி வருகிறது.


அந்த வகையில் இந்தாண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இலவச யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் நடத்தியது. இதில் கோவையில் ஆதியோகி முன்பு நடைப்பெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் கலந்து கொண்டு யோகப் பயிற்சிகளை கற்றுக் கொண்டனர். மேலும் TNAU வளாகத்தில் நடைப்பெற்ற விழாவில தமிழக ஆளுநர் திரு. R.N. ரவி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


ஈஷா சார்பில் சென்னையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன. நுங்கம்பாக்கம் ரயில்வே ஆபிசர்ஸ் கிளப்பில் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் சென்னையில் ஆவடி விமானப்படை நிலையம், ஐஐடி மெட்ராஸ், அப்பலோ மருத்துவமனை, எஸ்.ஆர்.எம் மருந்தியல் கல்லூரி, வேல்ஸ் வித்யாஸ்ரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன.


திருச்சி BHEL மற்றும் மதுரை யாதவா கல்லூரியிலும் இவ்வகுப்புகள் நடைப்பெற்றது. மேலும் கடலூர், புதுச்சேரி, வேலூர், சேலம், விழுப்புரம், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய பல்வேறு இடங்களில் ஈஷா சார்பில் சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு இலவச யோக வகுப்புகள் நடைப்பெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் பங்கேற்று யோகப் பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்.


மேலும் ஈஷாவுடன் இணைந்து PVR சினிமாஸ் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் தனது 25 திரைகளில் ஆன்லைன் மூலம் இலவச யோக வகுப்புகளை வழங்கியது. இந்த இலவச யோக வகுப்புகளில் எளிமையான அதே நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த உப-யோக பயிற்சிகளான யோக நமஸ்காரம், நாடி சுத்தி, சாம்பவி முத்ரா போன்ற பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News