மகாராஷ்டிராவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.. தமிழகத்தில் எப்போது? தி.மு.க வாக்குறுதி என்ன ஆனது?
By : Bharathi Latha
இந்தியாவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் தினமும் மளிகைக்கடைக்கு செல்லும்போது எடுத்துச்செல்லும் பணத்தை காட்டிலும், பெட்ரோல் நிலையங்களுக்கு அதிக பணத்தை எடுத்துச்செல்ல வேண்டிய அளவுக்கு அவற்றின் விலை மிகுதியாக உள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றப்படுகின்றன. பெட்ரோல் விலை தினமும் நிர்ணயிக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்பட்டால், அது அதிகப்படியாக இருக்கும். இது மக்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். இந்த அதிக விலை குறிப்பாக வாகன ஓட்டிகளுக்கு மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது.
பெட்ரோல், டீசலின் விலை எப்போது குறையும்?
இந்தியாவில் உள்ள அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் கவலையளிக்கக் கூடிய விஷயமாக பெட்ரோல், டீசல் விலை உள்ளது. மேலும், பெட்ரோல், டீசலின் விலை எப்போது குறையும்? என்பது பல நடுத்தர வர்க்கத்தினரின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் விதமாக அதற்கு விதிக்கப்படும் வரியை குறைத்து மஹாராஷ்டிரா மாநில அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்து இருக்கின்றது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை குறைத்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மஹாராஷ்டிரா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் பெட்ரோல் லிட்டருக்கு 65 காசுகள் வரையிலும், டீசல் லிட்டருக்கு 2.60 ரூபாய்களும் குறைய இருக்கின்றது. மேலும் 2024 ஜூலை 1 முதலே மஹாராஷ்டிரா அரசின் வாட் வரி குறைப்பு அமலுக்கு வர உள்ளது கூடுதல் தகவல். மேலும் தமிழகத்திலும் இது போன்று பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாய்ப்பு இருக்கிறதா? என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஏனென்றால் திமுக தங்களுடைய தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமா? என்ற கருத்தும் தற்போது தமிழகத்தில் எழுந்து இருக்கிறது.
தி.மு.கவின் தேர்தல் அறிக்கை:
2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் திமுகவின் முக்கிய வாக்குறுதி பெட்ரோல், டீசல் விலை குறைப்பு ஆகும். குறிப்பாக அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4ம் குறைக்கப்படும் என்று கூறினார்கள். பிறகு மீண்டும் 2024 மக்களவைத் தேர்தலையொட்டி, திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் வெளியிட்டார். இதில் பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. திமுக வாக்குறுதி அளித்தபடி, எப்போது பெட்ரோல், டீசல் விலை குறையும்? என்ற கேள்வி பல காலங்களாகவே எதிர்க்கட்சியினரால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
எதற்கு எடுத்தாலும் தமிழகத்தை, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் வழக்கத்தை தமிழகத்தில் இருக்கும் சில கட்சிகள்(திமுக) கொண்டு இருக்கிறது. எனவே அவர்களுடைய வழக்கத்தை போல், தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையையும் அப்படி ஒப்பிட்டு பார்க்கும் பொழுது, இன்றைய நிலவரப்படி(29.6.24) குஜராத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.65க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.90.32க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.69க்கும் மற்றும் ஒரு லிட்டர் டீசல் ரூ. 87.8க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இன்றைய நிலவரப்படி(29.6.24) தமிழகத்தில் பெட்ரோல் லிட்டர் ஒன்று ரூ.100.86-க்கும், டீசல் லிட்டர் ஒன்றிற்கு ரூ.92.44-க்கும் அதிகமான விலையிலும் விற்கப்படுகின்றது. ஆகவே எப்பொழுது திமுக தான் கொடுத்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பை அறிவிக்கப் போகிறது? தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட, திமுக கூட்டணி 40க்கு 40 நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்று கூறி வரும் சூழ்நிலையில், மக்களுக்கும் நல்ல அறிவிப்பை கொடுக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்பொழுது? என்ற ஏக்கத்தில் தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டுமா?
இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலை சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான ஆட்சியில் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களுக்கு கோரிக்கையை விடுத்து இருக்கிறார்கள். இப்போது பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டுவர மத்திய அரசு பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. இது நடந்தால் பொது மக்கள் பெரிதும் பயனடைவார்கள். பெட்ரோல் - டீசல் விலை 25 முதல் 30 சதவிகிதம் வரை குறையலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வந்தால் என்ன ஆகும்?
ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் மீது வாட் வரி விதிக்கப்படுகிறது. இதில் எவ்வளவு வசூலிக்கப்படும்? என்பதை மாநில அரசுகள் முடிவு செய்கின்றன. பெட்ரோல், டீசல் மீது வாட் வரி விதிப்பதன் மூலமே அந்த மாநில அரசுகள் வருமானம் ஈட்டுகின்றன. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை மாறுபடுவதற்கு இதுவே காரணம் ஆகும். ஒருவேளை பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டால் மாநில அரசுகளின் வருவாய் குறையும். இதனால் தான் நீண்ட காலமாகவே இந்த விஷயம் இழுபறியாகவே இருந்து வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை ஜி.எஸ்.டியில் கொண்டு வரக்கூடாது என பெரும்பாலான மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் எரிபொருட்களை ஜி.எஸ்.டி வரிவிதிப்பு வளையத்திற்குள் கொண்டு வரலாம் என்கிற திட்டம் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது.
தமிழகத்தில் இதை எதிர்ப்பது ஏன்?
தமிழகத்தில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், டாஸ்மாக் உள்ளிட்ட ஜி.எஸ்.டி வரிக்கு உட்படாத விற்பனைகளின் மூலமே மாநில அரசின் வருவாயில் 60% கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டிக்கு கீழ் கொண்டு வந்தால், தமிழகத்திற்கு ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என பல்வேறு காரணங்களால் தமிழக அரசு இதை மறுத்து வருகிறது. ஆளும் தமிழக அரசிற்கு பெட்ரோல், டீசல் விலை குறைந்தால் தமிழக மக்களின் நிதி சுமை குறையும் என்பது இரண்டாம் பட்சம் தான், ஆனால் தன்னுடைய வருவாயை அதிகரிப்பதை முதற்பட்சமாக கொண்டு இருக்கிறது. இதன் காரணமாகவே தமிழக அரசு பெட்ரோல் டீசல் பொருள்களை ஜி.எஸ்.டி வளையத்திற்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்துள்ளது.