காங்கிரஸ் அலட்சியத்தால் கச்சத்தீவு கை மாறியதா? வரலாறும், தொடரும் சர்ச்சையும்..
By : Bharathi Latha
கச்சத்தீவு அமைப்பு:
1480 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்பட்டு வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டானதாக சொல்லப்படுகிறது. அப்படி உருவான தீவுகளில் ஒன்று தான் கச்சத்தீவு. கச்சத்தீவு தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து வடமேற்கே 55 கி.மீ தொலைவில் உள்ள ராமநாதபுரத்தில் அமைந்திருந்த ராமநாடு ஜமீன்தாரி, 17ஆம் நூற்றாண்டில் தீவைக் கைப்பற்றியது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது இது மெட்ராஸ் பிரசிடென்சியின் ஒரு பகுதியாக கச்சத்தீவு மாறியது. கச்சத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்கள் 20 சென்ட் ஆகும்.
இதிகாசங்களில் இடம்பெற்ற தீவு:
இந்து மதத்தின் முக்கிய இதிகாசமான ராமாயணத்தில் ஸ்ரீராமரும், வாலியும் போரிட்ட தீவு தான் கச்சத்தீவு. அதாவது முன்னர் காலத்தில் அது வாலி தீவு என்றும் அழைக்கப்பட்டது. இதன் காரணமாக தான் 1974-ல் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில், குவாலியரின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் கச்சத்தீவை, 'வாலி தீவு' என்றே குறிப்பிட்டு பேசி இருப்பார் என்பதும் கூடுதல் தகவல்.
கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதன் பின்னணி:
1920 ஆம் ஆண்டில் கச்சத் தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது. இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. இது கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது. 1973-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். பிறகு 1974-ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராகாந்தியும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது.
கச்சத்தீவு உரிமையை தாரை வார்த்த காங்கிரஸ்:
1974, ஜூன் 28 ஆம் தேதி கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனாலும், "தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது" என்றெல்லாம் விளக்கமளித்து, அப்போது தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய காங்கிரஸ் அரசு.
மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில், 1976 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் "கச்சத் தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லவும் கூடாது. மீன் பிடிக்கவும் கூடாது. கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவிற்கு மக்கள் செல்லகூடாது" என்று இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்தே விட்டது இலங்கை. பிறகு இலங்கை கச்சத்தீவை முழுமையாக தனக்கு சொந்தமாக்கி விட்டது.
அப்போதைய தமிழக அரசின் அலட்சியம்:
1972, ஜுலை மாதம் 15 ஆம் தேதி தமிழக அரசு ஆவணக் காப்பகத்தின் மூலம் இராமநாதபுரம் மாவட்ட அரசு இதழின் திருத்திய புதுப்பதிப்பு வெளியிடப்பட்டது. அந்நூலின் தொடக்கத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் வரைபடம் அச்சாகியுள்ளது. ஆனால் அந்த வரைபடத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகக் கச்சத்தீவு காட்டப்படவில்லை. அன்றைய தேதியில் இந்தியப் பகுதியான கச்சத்தீவை விட்டுவிட்டு எப்படி வரைபடம் வரைந்தார்களோ? என்பது தெரியவில்லை. அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் முன்னுரையையும் பெற்றுள்ளனர். கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது மாநில அரசிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று தற்போது வரை திமுக கூறுவதை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்று எதிர்க்கட்சிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
எது எப்படியோ இந்தியா - இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தம் இரண்டே ஆண்டுகளில் இந்திய மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்பட்டன. இந்த ஒப்பந்தம் போடப்பட்டதன் விளைவு, கடந்த 20 ஆண்டுகளில் 6,184 இந்திய மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 1,175 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கையர்களால் இந்த 20 ஆண்டுகளில் கைப்பற்றப்பட்டுள்ளது.
RTI தகவல் என்ன சொல்கிறது?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், கச்சத்தீவு விவகாரம் தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களை சென்ற 2024, மார்ச் 31-ஆம் தேதி வெளியிட்டார். அதில், "1974 ல் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ், ஆட்சியில் இருந்த போது, கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது எனவும், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சம்மதத்துடன் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது" என RTI தகவல்களை தெரிவிக்கின்றன.
Input & Image courtesy:News