Kathir News
Begin typing your search above and press return to search.

விஜய்யின் நீட் எதிர்ப்பு கருத்தை ஏற்காத பெற்றோர்கள்! அரசியல் ஆதாயமாக்கப்படுகிறதா நீட் எதிர்ப்பு?

விஜய்யின் நீட் எதிர்ப்பு கருத்தை ஏற்காத பெற்றோர்கள்! அரசியல் ஆதாயமாக்கப்படுகிறதா நீட் எதிர்ப்பு?
X

SushmithaBy : Sushmitha

  |  5 July 2024 8:51 AM GMT

நீட்டை எதிர்த்த விஜய்:

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்விற்கு எதிராக திமுக தனது தீர்மானங்களை நிறைவேற்றி வருகிற நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சமீபத்தில் கலந்து கொண்ட விருது வழங்கும் விழாவில், "நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும். தமிழக அரசு நீட் விலக்கு கோரி சட்டப்பேரவையில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்" என்று பேசினார். இதன் மூலம் விஜய் தனது முதல் கட்ட கல்வி விருது விழாவில் கூறியதற்கு மாறான கருத்தை இரண்டாம் கட்ட கல்வி விருது விழாவில் கூறியுள்ளார் என்றும், விஜய்யும் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த்தை போன்று அரசியலில் திமுகவின் ஒரு கருவியாக செயல்படுகிறார் என்ற விமர்சனங்களும் அரசியல் வட்டாரங்களில் உலா வந்தது.

விஜய்யின் கருத்தை எதிர்க்கும் பெற்றோர்கள்:

ஆனால் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்ததிலிருந்து பல மாணவர்கள் நீட் தேர்வை எழுத தொடங்கியுள்ளனர். மேலும் குறிப்பாக கிராமத்தில் வசித்து வரும் ஏழை மாணவர்களும், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும் அதிகமாகவே நீட் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்று வருகின்றனர். அதே சமயத்தில் கடந்த சில வருடத்திலும், இந்த வருடத்திலும் தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. ஏனென்றால் நீட் தேர்வை தங்களுக்கு விருப்பமான மொழியில் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்று சலுகை இருப்பதாலும், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்காகவே கூடுதலாக 7.5% இட ஒதுக்கிடும் இருப்பதாலும் நீட் தேர்வு எங்களது பிள்ளைகளுக்கு ஏற்றதாக உள்ளது என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

விஜய்யின் நிகழ்ச்சியிலேயே நீட்டை ஆதரித்த பெற்றோர்:

அதாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடுபவர்கள், நீட்டை ஒரு பிரச்சனையாகவே, அரசியல் ஆதாயத்திற்காகவே பயன்படுத்துகிறார்கள் என்று சில பெற்றோர்கள் வாதிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, "உலகம் மிகப் பெரியது என்று விஜய் கூறியது உண்மைதான், அதில் நீட் மட்டும் தான் என்பது வாழ்க்கை கிடையாது, அதைப் படித்து தான் முன்னேற வேண்டும் என்பது இல்லை. எத்தனையோ துறை இருக்கிறது, அந்த துறைகளில் யார் தன்னுடைய 100% முயற்சிகளை கொடுக்கிறார்களோ, அவர்கள் முன்னுக்கு வருவார்கள். அதனால் நீட் தேர்வு என்பதை தொடர்ந்து கூறி பயத்தை ஏற்படுத்துவது போன்ற ஒரு மாயையை காட்ட வேண்டாம் என்று எனக்கு தோன்றுகிறது. ஏனென்றால் அதைத் தாண்டி பல விஷயங்கள் இருக்கிறது. என்னுடைய கணவர் ஒரு மருத்துவராக இருக்கிறார். அதனால் நாங்கள் இந்த கருத்தை கூறுகிறோம். மேலும் விஜய் நீட் குறித்து பேசிய கருத்தில் எனக்கு உடன்பாடே இல்லை! எனக்கு நீட் வேண்டும்! எல்லா பிள்ளைகளுமே தற்போது நீட் தேர்விற்கு உடன்பட்டு படிக்க ஆரம்பித்து, தேர்ச்சி பெற ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அவர்களின் முயற்சிகளை குறைப்பது போன்று நாம் ஏன் இப்படி கூற வேண்டும். அரசு பள்ளியில் படிப்பவர்களும், கிராமத்தில் உள்ள மாணவர்கள் கூட நீட்டில் தேர்ச்சி பெற்று முன்னேற ஆரம்பித்து விட்டார்கள். சிறு பிள்ளைகள் எப்பொழுதுமே ஒரு மாற்றத்திற்கு எளிதாக தங்களை மாற்றிக் கொள்வார்கள், அதை விட்டுவிட்டு அவர்களிடம் ஒரு விஷயத்தை திணிக்கக் கூடாது, ஏனென்றால் இப்போது இருக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டிற்குள் மட்டும் இருக்கப்போவதில்லை! பல இடங்களுக்கு செல்லத்தான் போகிறார்கள். அதனால் அவர்கள் பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இது நிச்சயமாக விஜய்யின் அரசியல் நகர்வுதான்!" என்று விஜய்யின் விருது விழாவிலே கலந்து கொண்டு பரிசு பெற்ற ஒரு மகளின் பெற்றோர் அந்த நிகழ்ச்சியிலேயே இதனை கூறியுள்ளார்.

மகளின் நீட் முயற்சிக்கு பெருமிதம் கொள்ளும் பெற்றோர்:

முன்னதாக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வின் பொழுது, தேர்வு மையங்களில் காத்துக்கொண்டிருந்த பெற்றோர்களிடம் நீட் தேர்வு குறித்து கேள்விகளை முன்வைத்த பொழுது, இது எங்கள் மகளின் இரண்டாவது முயற்சி. மதிப்பெண்கள் குறைந்ததால் முதல் முயற்சியில் வெற்றி பெறவில்லை. ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் படித்து தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறாள். அரசுப் பள்ளியில் படித்தது என் மகளுக்கு இது இரண்டாவது முயற்சி. என்னைப் பொறுத்த வரையில், நாங்கள் ஏழைகள் என்பதால், லட்சங்கள் கொடுத்து சேர முடியாததால், நீட் தேர்வு நடத்துவது நல்லது. நீட் பொதுவானது, தேர்ச்சி பெற்றால் சீட் கிடைக்கும், இல்லையெனில் கிடைக்காது. நீட் இல்லை என்றால், பத்து லட்சமே இல்லாத நாங்கள் என்ன செய்வது? நாங்கள் விவசாயிகள். மாறாக, எங்கள் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்வோம். தமிழ் மீடியத்தில் படித்தாலும், அவள் படித்த மொழியிலேயே தேர்வு எழுத முடிவதால், என் மகள் இரண்டாவது முயற்சியில் இறங்கியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தன் மகளின் விடாமுயற்சியை பெருமிதமாக கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News