Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் கட்சியிடம் பேசி காவேரி நீரை பெற்று தர முடியவில்லை : இண்டி கூட்டணியில் திறனற்ற திமுக அங்கம் வகித்து என்ன புண்ணியம்?

காங்கிரஸ் கட்சியிடம் பேசி காவேரி நீரை பெற்று தர முடியவில்லை : இண்டி கூட்டணியில் திறனற்ற திமுக அங்கம் வகித்து என்ன புண்ணியம்?
X

SushmithaBy : Sushmitha

  |  16 July 2024 4:19 PM GMT

காவிரி நதிநீர் பிரச்சனையின் ஆரம்ப புள்ளி:

டெல்டா மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகின்ற காவிரி நீர் பிரச்சனை சுமார் 200 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 1807 ஆம் ஆண்டு அன்றைய மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே காவிரி நதிநீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையில் 1892 ஆம் ஆண்டு முதன்முதலாக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி மைசூர் அரசு காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக அணை ஒன்றை கட்டினால் அது குறித்த முழு விவரங்களையும் சென்னை மாகாணத்திற்கு அனுப்பி தமிழகத்தின் ஒப்புதலை பெற்ற பிறகே கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் காவிரி நதிநீர் பிரச்சனை கிட்டத்தட்ட பல வருடங்கள் நீடிக்க 1990 இல் காவிரி நடுவர் மன்றமும் அமைக்கப்பட்டது.

ஆனால் கர்நாடகாவில் பருவ காலத்திற்கு ஏற்றபடி மழை பெய்தால் இந்த பிரச்சனை ஏற்படுவதில்லை, மழைக்குறையும் பொழுது இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி நதிநீருக்கான மோதல் முற்றிவிடும். இது இன்றளவும் நடந்து வருகிறது. அதாவது 2022 க்கு முன்பு கர்நாடகாவில் வழக்கத்தை விட அதிகமான மழை பெய்தது, மகாராஷ்டிராவிலும் அதிக மழை பெய்த காரணத்தினால் அங்கும் தண்ணீர் பாய்ந்து ஓடியது. இதை அடுத்து நிர்ணயித்த அளவைவிட அதிகமான தண்ணீர் தமிழகத்திற்கும் பாய்ந்து சென்றது. ஆனால் தமிழகத்திலும் மழை அதிகரித்திருந்ததால் இங்குள்ள அணைகள் நிரம்பியது. அதனால் காவிரி நீர் குறித்த பிரச்சனைகள் இரு மாநிலங்களுக்கும் இடையே இல்லாமல் இருந்தது.

வஞ்சிக்கும் கர்நாடகா அரசு:

ஆனால் 2023 ஆம் ஆண்டு இரு மாநிலங்களுக்கும் இடையேயான சூழ்நிலை மொத்தமாக மாறியது. தென்மேற்கு பருவ மழை கைவிட்டதால் கர்நாடகா அணை நிரம்ப வில்லை. மேலும் காவிரி நீர் பாசன பகுதிகளிலும் நீர்மட்டம் குறைந்து இருந்தது. அதேபோன்றுதான் தமிழகத்திலும் பெரும் அளவிலான மழை காணப்படாததால் பெருமளவிலான விவசாயிகள் காவிரி நதிநீரை பெரிதும் நம்பி இருந்தனர். அதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி நதி நீர் பிரச்சனை மீண்டும் வெடிக்க பல போராட்டங்களை செய்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விடும்படி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு அளித்தது. இதை அடுத்து தமிழகத்திற்கு தினமும் பத்தாயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விட்டது.

இதற்கிடையிலே கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று அடம் பிடித்து வருகிறது. அதுமட்டுமின்றி கடந்த முறை கர்நாடகாவிற்கு போதுமான நீர் இல்லாததால் தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக அரசு கூறியது. ஆனால் தற்பொழுது கர்நாடகாவில் போதுமான மழை பொழிந்தும், தேவையான நீர் இருந்துமே இந்த வருடத்திற்காக நீரை திறந்து விட முடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அதாவது காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர்:

இதனை அடுத்து இதுகுறித்து விவாதிப்பதற்காக தமிழக சட்டசபை அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பருவமழை சாதகமாக இருக்கும் போதிலும் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடாத கர்நாடக அரசின் செயலை ஏற்க முடியாது, கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விடாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

முன்னதாக, தமிழக தலைவர்கள் அனைத்து கட்சி கூட்டம் நடத்துவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. தமிழக அரசு மேகதாது அணை கட்ட அனுமதிக்க வேண்டும் மேகதாது அணை கட்டினால் கர்நாடக மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களும் சமமாக பயனடையும். அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு மேகதாது அணைக்கு தமிழகம் பச்சைக்கொடி காட்ட வேண்டும் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கூட்டணிக்காக மக்களை கைவிட்ட திமுக:

கர்நாடகாவின் துணை முதல்வர் அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு தமிழக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று நேரடியாகவே தனது கோரிக்கையை முன்வைக்கிறார். அதேபோன்று கர்நாடக அரசின் இந்த செயலை ஏற்க முடியாது என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றுகிறார். ஆனால் உண்மையில் இவர்கள் இருவருமே ஒரே கூட்டணியை சேர்ந்த கட்சியினர், அதுமட்டுமின்றி தமிழக முதல்வரும் கர்நாடக அரசின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் என அனைவருமே நெருக்கம் கொண்டவர்கள். அதுமட்டுமின்றி கடந்த வருடம் நடைபெற்ற கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து, கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் நேரடியாகவே சென்று கலந்து கொண்டார். அதுமட்டுமின்றி தனது I.N.D.I.A கூட்டணியின் வெற்றியை அன்று கர்நாடகாவிலே கொண்டாடினார்!


அப்படி கொண்டாட்டத்தில் இருக்கும் பொழுது தமிழக மக்களின் வேதனைகளும், கோரிக்கைகளும் முதல்வர் அவர்களின் ஞாபகத்தில் இருக்காதா? அல்லது கூட்டணியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று மக்களுக்கான ஒரு கோரிக்கையை முன்வைக்க மறந்துவிட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தன் உடன் பிறவா சகோதரர்கள் போன்று தன் நட்புறவை பாராட்டிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் தமிழக விவசாயிகளுக்காக இந்த ஒரே ஒரு கோரிக்கையை கர்நாடக அரசிடம் ஏன் கேட்டு பெற மறுக்கிறார்? அவர் நினைத்திருந்தால் இந்த பிரச்சனையை கடந்த வருடமே முடித்திருக்க முடியும். ஆனால் அதை செய்யாமல் தன் கூட்டணியை மட்டுமே முதன்மையாக பார்த்து வந்த முதல்வர் தற்போது அரசியலுக்காக இந்த தீர்மானத்தை நிறைவேற்றி மக்களை திசை திருப்புகிறார் என அரசியல் வட்டாரம் முழுவதும் பரவலாக பேசப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News