Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க ஆட்சி கலைக்கப்படுகிறதா? தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு படுமோசம்.. உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழக ஆளுநர் திடீர் ஆலோசனை..

தி.மு.க ஆட்சி கலைக்கப்படுகிறதா? தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு படுமோசம்.. உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழக ஆளுநர் திடீர் ஆலோசனை..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 July 2024 2:47 AM GMT

டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோரை சந்தித்து தமிழகம் தொடர்பாக பிரச்சனையைப் பற்றி விவாதித்தார். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு 3-வது முறையாக பதவியேற்றுள்ளது. இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக ஜூலை 15-ம் தேதி டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர், நேற்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரைச் சந்தித்து தமிழகம் தொடர்பாக பேசினார்.


இதைத் தொடர்ந்து இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்தும், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை மற்றும் அது தொடர்பான அடுத்த கட்ட நிகழ்வுகள் பற்றியும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 67 பேர் உயிர் இழந்த விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக திமுக ஆட்சியில் தமிழகத்தில் நடக்கும் பல்வேறு விதமான சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து, இந்த ஒரு விவாதித்தில் விரிவான அறிக்கைகள் முன்வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவற்றின் தொகுப்புகளை தற்போது பார்க்கலாம். திமுக ஆட்சியில் கொலை, கொள்ளைகள் மட்டுமல்லாது போதைப்பொருட்களின் நடமாட்டமும் அதிக அளவில் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக போதைப் பழக்கத்திற்கு உள்ளாகி, தங்கள் என்ன செய்கிறோம்? என்பது கூட புரியாமல் ரோட்டில் சாதாரணமாக செல்லும் நபர்களை கூட தாக்குகிறார்கள். கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருட்கள், மெத்தபெட்டமன் போன்ற போதை வஸ்துக்கள் இங்கு அதிகமாக புழங்குவதால் மக்கள் உயிருக்கு பாதுகாப்பாற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் தடுத்து நிறுத்தினால் தான் மக்கள் சாலையில் நிம்மதியாக நடமாட முடியும் என்றெல்லாம் செய்திகள் வெளி வந்தது.

மறுபுறம் கள்ளச்சாராயம் தமிழகத்தில் ஆறாக ஓடுகிறது. சமீபத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 67 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது நடந்த சில தினங்களில் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை அருகே கள்ளச்சாராயம் அருந்தி இருவர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. கடந்த 2023 மே மாதம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டின் மதுராந்தகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.

அரசியல் ரீதியான கொலைகளும் தமிழகத்தில் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தமிழகத்தை உலுக்கியது. அதேபோல் மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்நிலையம் அருகேயுள்ள சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் வீடு அருகே காலை நடைபயிற்சி மேற்கொண்ட செல்லூரை சேர்ந்த நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதியின் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், படுகொலை செய்யப்பட்டார். அவரை பின்தொடர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயதங்களுடன் அவரை விரட்டி விரட்டி படுகொலை செய்தது. மறுபுறம், வயதானவர்களை குறி வைத்து கொலை செய்யும் சம்பவங்களும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த 8ஆம் தேதி மதுரை திருமங்கலம் வாகைக்குளம் மாயன்நகர் பகுதியில் 70 வயது மூதாட்டி காசம்மாள் என்பவர் 65 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்டார். 11 ஆம் தேதி மதுரை மேலூர் கச்சிராயன்பட்டியில் பாப்பு என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்டார். 12 ஆம் தேதி ஒரு தனியார் மருத்துவமனை உணவகத்தில் பணிபுரியும் 70வயது மதிக்கதக்க மூதாட்டியான முத்துலெட்சுமி என்பவர் கொலை செய்யப்பட்டார். தொடர்ச்சியாக அடுத்தடுத்த கொலை சம்பவங்கள் மக்களை மிரள வைத்தது.

இப்படி தமிழகத்தில் நாளுக்கு, நாள் சட்ட ஒழுங்கு மோசமாகி கொண்டே வருகிறது. இதற்கு முடிவுகளை கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் தற்பொழுது ஆளுநர் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சரிடம் இது பற்றி விரிவாக பேசி இருக்கிறார். மேலும் தமிழகத்தில் இது போன்று சட்ட ஒழுங்கு தொடர்பான சம்பவங்கள் நடைபெற்றால், திமுக ஆட்சி கலைப்பு நிச்சயம் நடைபெறும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல்களை வெளியிட்டு இருக்கிறது.


மேலும் அமித்ஷாவுடனான சந்திப்பு குறித்து ஆளுநர் தன்னுடைய எக்ஸ் வலைத்தள பதிவில் கூறும் போது, "மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன், தமிழகத்தில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழல்கள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வமான சந்திப்பை மேற்கொண்டேன். நம் மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் மீது அற்புதமான ஆழ்ந்த பார்வையும், அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News