Kathir News
Begin typing your search above and press return to search.

புதிய கல்விக் கொள்கை மறுப்பு ஏன்? தமிழக மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறதா தி.மு.க..

புதிய கல்விக் கொள்கை மறுப்பு ஏன்? தமிழக மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறதா தி.மு.க..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 July 2024 4:48 PM GMT

புதிய கல்விக் கொள்கை:

புதிய கல்விக் கொள்கை 2020ல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த புதிய கல்விக் கொள்கைக்கு திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசு தொடங்கும் பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ் திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ் திட்டத்தை ஏற்காததால் பள்ளி ஒருங்கிணைந்த கல்வி திட்டமான எஸ்.எஸ்.ஏ.விற்கு ஆண்டுதோறும் ஒதுக்கும் ரூ.2,000 கோடி தமிழகத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பள்ளிகளை நடத்துவதற்காகவே பி.எம்.ஸ்ரீ ஸ்கூல்ஸ் தொடங்கப்பட்டு வருகின்றன. இதனால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக அரசு மத்திய அரசு எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே பி.எம் ஸ்ரீ பள்ளிகளை தமிழகத்திற்குள் வரவிடாமல் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. தங்களுடைய தனிப்பட்ட சுய லாபத்திற்காக தற்போது எஸ்.எஸ்.ஏ.விற்கு ஆண்டுதோறும் ஒதுக்கும் ரூ.2,000 கோடி தமிழகத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.


பிரதம மந்திரியின் வளரும் இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டம்:

உலக தரத்திற்கு இந்திய கல்வியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் தான் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை மாநில அரசாங்கங்கள் உணர வேண்டும். கல்வி என்பது அனைவரின் தனிப்பட்ட தேவையும் உரிமையும் ஆகும். அத்தகைய தனிப்பட்ட தேவைகள் நமது இலக்குகளை அடைவதற்கும், சமூக ரீதியான சமுதாயத்தை உருவாக்குவதற்கும், நமக்கு கல்வி தேவை. அதேபோன்று ஒரு நாட்டின் தேசிய வளர்ச்சியில் கல்வி பெரும் பங்கு வகிக்கிறது. உலகளவில் நமது நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் கல்வியில் மட்டும் நாம் பின்தங்கி இருக்கலாமா? என்று ஆலோசித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை 29 ஜூலை 2020 அன்று கொண்டு வந்தது. புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய அரசு, பிரதம மந்திரியின் வளரும் இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டம் (Pradhan Mantri Schools For Rising India) என்ற திட்டத்தை உருவாக்கியது. கடந்த 2022, செப்டம்பர் மாதம் ஆசிரியர் தினத்தன்று, இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி.


இந்தியா முழுவதும் சுமார் 14,500 பி.எம். ஸ்ரீ பள்ளிகளை கொண்டு வந்து உலக தரம் வாய்ந்த பள்ளிகளாக உயர்த்துவதை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். அது மட்டும் கிடையாது, குறிப்பிட்ட காலத்திற்குள் இத்தகைய பள்ளிகளை மற்ற பள்ளிகளுக்கு முன் மாதிரியாகவும் மற்றும் அருகில் உள்ள பள்ளிகளை வழிநடத்தும் வகையிலும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில், இந்த பள்ளிகள் புதிய கல்விக் கொள்கை 2020-ன் படி செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டும் கிடையாது கூடுதலாக, நவோதயா பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உட்பட மத்திய,மாநில, யூனியன் அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகள் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படும். உயர்தர கல்வி, பாதுகாப்பான சூழல், பரவலான கற்றல் அனுபவங்கள் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மாநில கல்விக் கொள்கை:

மேலும் மத்திய அரசின் இத்தகைய திட்டத்தில் இணையும் பள்ளிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பள்ளிகளாக உருவாக்கப்படும் என்று மத்திய அரசு 2022 இந்தத் திட்டத்தின் அறிமுக விழாவில் கூறியது. ஆனால் இந்த திட்டத்தில் தற்போது வரை மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கையெழுத்து போடவில்லை என்று PIB செய்தி முகமையின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசால் 2020-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாட்டின் தனிச்சிறப்பான அம்சங்களை கணக்கில் கொண்டு மாநில கல்விக் கொள்கை ஒன்றை வகுக்கப் போவதாக தி.மு.க அரசு கூறி வந்தது. அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை உருவாக்கிய குழு தன்னுடைய அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. ஆனால் இதில் முழுமையான விபரங்கள் வெளிச்சத்திற்கு வரவில்லை.

தற்போது தமிழக அரசு கொண்டு வந்த நான் முதல்வன் திட்டம் ஆகட்டும், இல்லம் தேடி கல்வி ஆகட்டும் ஆகிய திட்டங்களின் வாயிலாக திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி தான் வருகிறது. மக்களுக்காக மட்டும் வேறு பெயர்களில் இத்தகைய திட்டத்தை செயல்படுத்துகிறார்களே தவிர மற்றபடி புதிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை தான் அவர்கள் இங்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால், இது அது இல்லை என்று சொல்லி அதிகாரிகள் அமைச்சரையும், அமைச்சரவையையும் நம்ப வைக்கின்றனர். விதவிதமான பெயர்களில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதும், அதனை மறைக்க மாநிலத்திற்காக தனித்துவமான கல்வி கொள்கையை உருவாக்க குழு அமைப்பதும், அதை உயர்மட்ட அதிகாரிகளின் கைகளில் ஒப்படைப்பதும் எல்லாம் கல்வியைத் தனியார்மயப்படுத்தும் தி.மு.க-வின் கார்ப்பரேட் விசுவாசமே. அதே நேரத்தில் மக்களிடம் தனது முகமூடி அம்பலப்பட்டுவிடாமல் இருக்க அவர்கள் செய்யும் ஜோடிப்பு வேலைகள் தான் இது என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News