Kathir News
Begin typing your search above and press return to search.

ஏழைகளின் பசியாற்றிய அம்மா உணவகம் : திமுக ஆட்சியில் படுமோசமானது எப்படி?

ஏழைகளின் பசியாற்றிய அம்மா உணவகம் : திமுக ஆட்சியில் படுமோசமானது எப்படி?
X

SushmithaBy : Sushmitha

  |  19 July 2024 5:49 PM GMT

ஏழைகளின் வரப்பிரசாதம்:

தமிழ்நாட்டில் கடந்த 2013 ஆம் ஆண்டு பொறுப்பில் இருந்த அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டது அம்மா உணவகம். இந்த உணவகம் ஏழைகளின் வரப் பிரசாதமாகவே பார்க்கப்பட்டது. ஏனென்றால் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள் மூலமாக ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்திற்கு பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. முதலில் 2013 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி சென்னை சாந்தோம்மில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் இந்த உணவகம் தொடங்கப்பட்டது. மேலும் அதே நாளில் 15 இடங்களிலும் இந்த உணவகங்கள் தொடங்கப்பட்டது. இந்த உணவுகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்க்கும், தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும் விற்கப்பட்டு வந்தது. அதுவும் குறிப்பாக இங்கு விற்கப்பட்ட உணவுப் பொருள்கள் அனைத்துமே தரமானதாகவும், வீட்டில் சமைப்பது போன்ற முறையில் குறைந்த விலையில் கிடைத்ததாலும் பலர் இந்த உணவகத்தை தேடி வந்தனர். இதனால் பல மாவட்டங்களில் பல பகுதிகளில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டது.


முன்னோடி திட்டம்:

தனது தேர்தல் வாக்குறுதிகளில் கூட குறிப்பிடாத ஒன்றை செயல்படுத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அம்மா உணவகம் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாகவும் திகழ்ந்தது. ஏனென்றால் இந்த திட்டத்தை அடிப்படையாக வைத்து தற்போது ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், உத்திரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மலிவு விலையில் உணவு வழங்கும் திட்டம் செயல்படுகிறது. இந்த உணவகத்தில் விற்கப்பட்ட உணவுகள் மிகவும் குறைந்த விலையில் விற்கப்பட்டதால் ஒரு நேரத்திற்கான உணவை கூட ஏழை எளிய மக்களால் 15 ரூபாயில் முடிக்க முடிந்தது. அதுமட்டுமின்றி அரசு போட்டி தேர்வுகளுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் கூட அம்மா உணவகங்களில் உண்டு தனது பயிற்சியை தொடர்ந்துள்ளனர். அதே சமயத்தில் வேலைக்காக ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களின் உணவுச் செலவையும் அம்மா உணவகம் தீர்த்து வைத்தது. ஏன் நாம் நம் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருந்த கொரோனா காலகட்டத்திலும் கூட அம்மா உணவகம் செயல்பட்டு லட்சக்கணக்கான மக்களுக்கு உணவளித்தது. இதனால் சென்னையில் ஒரு நாள் மட்டும் அம்மா உணவகத்தில் உண்பவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தொட்டது.


லாப/நஷ்ட கணக்கு பார்த்த திமுக:

இப்படி ஏழைகளின் அன்ன பாத்திரம் ஆக விளங்கிய அம்மா உணவகத்தை திமுக தனது ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு மூட ஆரம்பித்தது. அதாவது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்த திட்டத்தை தொடங்கியதற்கு முக்கிய காரணம் மலிவு விலையில் தரமான உணவு மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான்! ஆனால் இதில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது என்பதை சுட்டிக்காட்டி திமுக ஆட்சி காலத்தில் அம்மா உணவகங்களை மூட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதே சமயத்தில், ஒரு அம்மா உணவகத்தில் பத்து முதல் 12 பேர் பணியாற்றி வந்தவர்களின் எண்ணிக்கையையும் பாதியாக குறைத்து அவர்களின் மாத சம்பளம் 9 ஆயிரம் ரூபாயிலிருந்து 6000 ஆக மாற்றியது. அதுவும் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிட்டு உங்களுக்கு இவ்வளவு ஊதியம் தான் ஒதுக்கப்பட்டுள்ளது இதை வைத்து உங்களுக்கான ஊதியத்தை நீங்களே பிரித்துக் கொள்ளுங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் உணவகத்திற்கு வழங்கப்படுகின்ற அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் அளவு குறைக்கப்பட்டதால் மக்களுக்கு முன்பு வழங்கப்பட்ட தரத்தில் உணவு வழங்க முடியாத நிலைக்கும் அம்மா உணவக ஊழியர்கள் தள்ளப்பட்டனர். அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட ஏழு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் மாறி நான்கு சிலிண்டர்கள் தான் வழங்கப்பட்டு வந்துள்ளது. இப்படி தொடர்ச்சியாக திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து அம்மா உணவகத்தை மூடும் வகையிலான மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட, தொடர்ச்சியாக அம்மா உணவகத்தில் வந்து உண்பவர்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது. இதனை காரணமாக வைத்து நுகர்வோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று கூறி சில அம்மா உணவகங்களையும் மூட ஆரம்பித்தது திமுக!


மேயர் பிரியா அறிக்கை:

இதனை தொடர்ந்து கடந்த வருடம் ஜனவரி 31ஆம் தேதி அன்று நடைபெற்ற கவுன்சில் கூட்டத்திலும் சென்னை மேயர் பிரியா இந்த ஆண்டில் அம்மா உணவகங்களின் வருமானம் 15.35 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலத்தை பார்க்கும் பொழுது ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்படும் மதிப்பீட்டை விட குறைவான வருமானமே அம்மா உணவகத்திலிருந்து கிடைக்கிறது . எடுத்துக்காட்டாக, 2021-22 நிதியாண்டில் மதிப்பிடப்பட்ட வருமானம் 24.55 கோடி ரூபாய், ஆனால் அடுத்த ஆண்டு இது ரூபாய் 12.4 கோடியாக மாற்றப்பட்டது, கிட்டத்தட்ட 50% குறைவு. அதனால் அம்மா உணவகத்தை மூடுவதை சிறந்தது என்று பேசினார்.

கலைஞர் உணவகம்:

முன்னதாக 2021 ஆம் ஆண்டு பொது தேர்தலை சந்திப்பதற்கு முன்பாக திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் பொழுது 500 வாக்குறுதிகளை அளித்தார். அதில் ஏழைகளுக்கு உணவு வழங்க 500 கலைஞர் உணவகங்கள் ஏற்படுத்தப்படும் என்ற ஒரு வாக்குறுதியும் இடம் பெற்றிருந்தது. ஆனால் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான ஒரு செங்கலை கூட திமுக இதுவரை எடுத்து வைக்கவில்லை, அதற்கு மாறாக ஏற்கனவே இருந்த அம்மா உணவகத்தை மூடும் நடவடிக்கைகளில் தான் தற்போது மாளிகையே கட்டியுள்ளது!

திடீர் அக்கறை எதற்கு?

ஆனால் திடீரென்று அம்மா உணவகங்கள் மீது அக்கறை காட்டுவது போன்ற நடவடிக்கைகளை தற்போது திமுக செய்து வருகிறது. மேலும் ரூபாய் 21 கோடி செலவில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கு, அம்மா உணவகங்களை திடீரென ஆய்வு செய்து சீரமைக்க நிதியை ஒதுக்கிவிட்டு சீரமைத்த பின்பு அம்மா உணவகம் என்ற பெயரை தூக்கி விட்டு கலைஞர் உணவகம் என திமுக வைத்தாலும் வைக்கும் என அரசியல் வட்டாரங்களில் ஒரு பேச்சு எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News