Kathir News
Begin typing your search above and press return to search.

திமுக அரசின் சட்ட ஒழுங்கு குறைப்பாட்டை விமர்சித்த காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் : திமுகவினர் காங்கிரஸ் கட்சியை மதிப்பதே இல்லை என ஆதங்கம்

திமுக அரசின் சட்ட ஒழுங்கு குறைப்பாட்டை விமர்சித்த காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் :  திமுகவினர் காங்கிரஸ் கட்சியை மதிப்பதே இல்லை என ஆதங்கம்
X

SushmithaBy : Sushmitha

  |  21 July 2024 1:39 AM GMT

ஜெயகுமார் கொலை வழக்கு:

கடந்த மே நான்காம் தேதி காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மேலும் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்ட நான்கு நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட கண்காணிப்பாளரிடம், எனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருகின்றனர் அவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று நான்கு பக்கங்கள் கொண்ட புகாரை அளித்துள்ளார். இதனை அடுத்து தனது சொந்த தோட்டத்திலே பாதி எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். இந்த விவகாரம் பெறும் பரபரப்பை ஏற்படுத்த, ஜெயக்குமார் தனசிங் மாவட்ட எஸ்பிக்கு எழுதிய கடிதம் வெளியாகி பெருமளவில் சர்ச்சையானது. மேலும் இதில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தனிப்படைகள் அமைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியானது.

கொந்தளித்த கார்த்தி சிதம்பரம்:

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் இன்னும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும் தேசிய கட்சி, இந்தியாவை ஆண்ட கட்சி, தமிழகத்தையும் ஒரு காலத்தில் ஆண்ட கட்சி! ஆனால் நம் கட்சி நிர்வாகி ஒருவர் படுகொலைக்கு ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை! இதைப் பற்றி பேசாமல் இதைப் பற்றி விவரிக்காமல் எப்படி நம்மால் இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுகவை கேள்வி கேட்க வேண்டும்!

அதுமட்டுமின்றி தமிழகத்தில் சமீபத்தில் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்டதும், தமிழகத்தில் அதிரடியாக மின் கட்டணங்கள் மற்றும் மின் சேவைகளுக்கான கட்டணங்கள் அனைத்தும் உயர்த்தப்பட்டது குறித்தும் தமிழக ஆளும் அரசை நாம் கேள்வி கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது, தமிழகத்தில் எல்லாம் தற்போது கூலிப்படை கொலைச் சம்பவம் அதிகமாக நடக்கிறது. இவற்றையெல்லாம் நாம் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் என்கவுண்டரை கண்டிப்பாக நாம் கண்டிக்க வேண்டும்! இவர்கள் சட்டத்தை காப்பாற்றுகிறார்கள் என்று நினைக்காதீர்கள், வழக்கை முடிக்க வேண்டும் என்று தான் என்கவுண்டர் செய்கிறார்கள். என்கவுண்டர் குறித்து பேசும் பொழுது மின்சார உயர்வு குறித்தும் நான் பேச வேண்டும், திருமாவளவன் அவர்களுக்கு, கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இருக்கும் உரிமை நமக்கு இல்லையா? நாமும் நம்முடைய கருத்தை ஆழமாக பதிவு செய்தால்தான் மக்கள் நம்மை திரும்பி பார்ப்பார்கள் என்று கூறியுள்ளார்.

சாரா நிலை கிடைக்குமா?

முன்னதாக லோக் சபா தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது அதில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை பேசும் பொழுது, தமிழகத்தில் எத்தனை காலம் பிறரை சார்ந்திருக்க போகிறோம், சுயமாக நாம் வளர வேண்டாமா? பிற கட்சிகளை சாராத நிலை வேண்டும் என்றார், அதற்கு தொண்டர்கள் தான் பதிலளிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இது அரசியல் வட்டாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இது குறித்த கேள்விகள் எழுந்தபொழுது திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது கொள்கை சார்ந்த கூட்டணியே தவிர சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல எஃகு கோட்டை போல் இருக்கும் இக்கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த எவர் முயற்சி செய்தாலும் அது நிச்சயம் நிறைவேறாது என்று பதிலளித்திருந்தார்.

2026 தமிழக பொதுத் தேர்தல்:

செல்வப் பெருந்தகையின் இந்த பேச்சு மூலமே அவர் சமாளிக்கிறார் என்ற வகையில் விமர்சனங்கள் எழுந்தது. இதனை அடுத்து தற்போது நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் தற்போது திமுக அரசை நோக்கி மக்கள் முன்வைக்கின்ற கேள்விகள் முன்வைத்து, நாம் ஏன் திமுகவை கேள்வி கேட்கக் கூடாது என்ற வகையில் பேசி உள்ளார். இது திமுக தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் காலங்களை தவிர மற்ற நேரங்களில் நம்மை கூட்டணி கட்சிகள் மதிப்பதே கிடையாது என்று நேரடியாகவே தனது அதிருப்தியை முன் வைத்துள்ளார். இதன் மூலம் திமுகவை கார்த்திக் சிதம்பரம் எதிர்க்க ஆரம்பித்து விட்டார் என்றும், கூடிய விரைவில் 2026 தமிழக பொது தேர்தலில் இதன் எதிரொலியை காணலாம் என்றும் அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News