ஆப்கானிஸ்தான் - இந்தியா, பாகிஸ்தானின் புதிய மோதல் களம்?
By : Saffron Mom
செப்டம்பர் 2001-ல் அமெரிக்க இரட்டை கோபுர தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, ஒசாமா பின்லேடனை மற்றும் அல்கொய்தாவை அழிக்கும் நோக்கில் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் ஊடுருவி தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இருபது வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுகின்றன. அமெரிக்கா வெளியேறியவுடன் ஆப்கன் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான அதிகாரப் போராட்டம் தீவிரமடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் தற்போது இருக்கும் ஓரளவு நிலையான அரசு நீடிக்குமா? பல்லாண்டு காலமாக பலவிதமான போரினால் சீரழிந்து இருக்கும் ஆப்கானிஸ்தானின் நிலை என்னாகும் என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையீடு அளவுக்கு அதிகமாகவே உள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு இருக்கக்கூடாது என்று பாகிஸ்தான் விரும்புகிறது. ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா மனிதாபிமான முறையில் செய்யும் உதவிகளும், உள் கட்டமைப்பு ஒத்துழைப்புகளும் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை பல்வேறு விதங்களில் பாகிஸ்தான் உடைத்தது. தற்போது அமெரிக்கா அவமானகரமான தோல்வியடைந்து, பாகிஸ்தான் மற்றும் தலிபான்களின் கருணையின் கீழ் ஆப்கானிஸ்தானை விட்டுச் செல்கிறது.
ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் பங்களிப்பை ஓரம் கட்டுவதற்கு பாகிஸ்தான் ஒரு வாய்ப்பைக் கூட நழுவ விடுவதில்லை. ஆப்கானிஸ்தான் மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா மீது சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியா அல்லாத ஆப்கானிஸ்தான் வேண்டுமென்று பாகிஸ்தான் விரும்புவது வெளிப்படையான ரகசியம். ஆப்கானிஸ்தானில் நிலையற்ற தன்மை நீடிப்பது பாகிஸ்தானுக்கு பலவிதங்களில் அனுகூலத்தை அளித்துள்ளது. ஆப்கன் அரசுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட தாலிபான்களுக்கு ஆயுதங்கள், பயிற்சிகளை வழங்குகிறது பாகிஸ்தான் அரசின் உளவுத்துறை அமைப்பான ISI.
அமெரிக்கா வெளியேறும் நிலையில், பாகிஸ்தானிடம் நட்பு பாராட்டும் தலிபான்கள் கையில் ஆப்கானிஸ்தான் இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. இதில் இந்தியாவின் குறிக்கோள் என்ன? அமெரிக்கா வெளியேறிய பிறகு, இந்தியாவிற்கு எதிரான திட்டங்களுக்கு ஆப்கானிஸ்தான் மண் பயன்படுத்தப்படக் கூடாது என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது.
குறிப்பாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த தீவிரவாத குழுக்களுக்கு ஒரு புகலிடமாக ஆப்கானிஸ்தான் அமைந்துவிடக் கூடாது என்று இந்தியா கருதுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைகள் ஓரளவு தான் சாத்தியம். தலிபான்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற நிலையிலிருந்து இந்தியா இறங்கி வந்துள்ளது.
இந்தியாவிற்கு இவ்விவகாரத்தில் ஒரு தெளிவான லட்சியமும், பாதையும் இருக்கிறதா என்பது கேள்விக்குறி தான். அரசியல், பொருளாதார, இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியிலான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி ஆப்கானிஸ்தானை பொருத்தவரை ஒரு நெடுங்கால திட்டத்தை இந்தியா தீட்ட வேண்டும்.
பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து தற்பொழுது ஆப்கானிஸ்தானில் இரண்டு போர்கள் நடைபெற்று வருகிறது. ஒன்று ஆப்கானிஸ்தானின் உள்ளே நடக்கிறது, கடந்த 40 ஆண்டு காலமாக வெளிநாட்டு சக்திகள் ஆப்கானிஸ்தானை ஊடுருவி நடக்கும் போர்கள். மற்றொன்று பாகிஸ்தானின் மண்ணிலிருந்து ஆப்கன் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் சதித்திட்டங்கள்.
தனித்துவமான, இந்தியாவுடனான நிலையான உறவுகள் கொண்ட ஆப்கானிஸ்தான் தனக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று பாகிஸ்தான் கருதுகிறது. இந்தியாவின் நேர்மறையான பங்களிப்பு இந்தப் பிராந்தியத்தின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும். ஆனால் பாகிஸ்தான் எளிதில் விட்டுக்கொடுக்கப் போவதில்லை.
ஆப்கானிஸ்தானில் உள்ள தனித்துவமான அரசியல் குரல்களை நசுக்கவே பாகிஸ்தான் விரும்பும். அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஒருங்கிணைப்பு, சீனாவின் வளர்ந்து வரும் அதிகாரங்கள் ஆகியவற்றை இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆப்கானிஸ்தானினிற்கு ராணுவ உதவிகளை இந்தியா தற்போதை விட அதிகமாக வழங்க முடியாது என்றாலும் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா செயல்படலாம். பாகிஸ்தானின் உதவியுடன் ஆப்கானிஸ்தானில் 40 ஆண்டுகளாக போர்கள் நடந்து வருகிறது.
இந்தியாவின் இருப்பு இல்லாத ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானின் மற்றொரு மாகாணமாகும். சீனாவினால் அதனுடைய வளங்கள் சுரண்டப்படும். அதில் பல ஜிகாதி அமைப்புகள் வளரும். பிராந்தியத்தில் மறுபடியும் வன்முறை வெடிக்கும். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவை ஓரங்கட்ட பாகிஸ்தான் எடுக்கும் முயற்சிகள் தங்கள் நலனுக்கு எதிரானவை என்று ஆப்கானிஸ்தானியர்கள் உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை.