தலிபான்களின் கீழ் உள்ள ஆப்கானிஸ்தானுடன் 'உறவை ஆழமாக்க' தயார்- சீனா அறிவிப்பு !
ஆப்கானிஸ்தானுடன் 'நட்பு மற்றும் கூட்டுறவு' உறவுகளை ஆழமாக்கும் வாய்ப்பை 'வரவேற்கிறோம்' என்று சீன அரசு கூறியது.
By : Saffron Mom
ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து சீனா அமெரிக்காவை கடுமையாக விமர்சித்ததுடன், பிடென் நிர்வாகம் தாக்குதலை நிறுத்துமாறு கோரியுள்ளது. செவ்வாயன்று சீன வெளியுறவு அமைச்சக அறிக்கையின்படி, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்து அமெரிக்காவின் "அவசரமான" இராணுவ விலகல் மற்றும் தலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதன் விளைவாக ஏற்பட்ட குழப்பம் ஆகியவற்றைக் குறித்து குற்றம் சாட்டினார்.
ஆனால் அதே நேரத்தில், மனிதாபிமான நெருக்கடியை தவிர்ப்பதற்காகவும், ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதத்தின் விளை நிலமாக மாறுவதைத் தடுக்கவும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா தயாராக உள்ளது என்று தெரிவித்தது.
மறுபுறம், ஆகஸ்ட் 16 திங்களன்று, ஆப்கானிஸ்தானுடன் 'நட்பு மற்றும் கூட்டுறவு' உறவுகளை ஆழமாக்கும் வாய்ப்பை 'வரவேற்கிறோம்' என்று சீன அரசு கூறியது. தலிபான்கள் காபூலைக் கைப்பற்றி ஜனாதிபதி மாளிகையையும் பாராளுமன்றத்தையும் எதிர்ப்பின்றி ஆக்கிரமித்த உடனேயே இந்த அறிக்கை வந்தது.
AFP அறிக்கையின்படி சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங், "தலிபான்கள் சீனாவுடன் நல்ல உறவை வளர்ப்பதற்கான தங்கள் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர், மேலும் ஆப்கானிஸ்தானின் சீரமைப்பு மற்றும் வளர்ச்சியில் சீனாவின் பங்களிப்பை அவர்கள் எதிர்நோக்குகிறார்கள்." என்று கூறினார்.
அதிகாரத்தின் 'சுமூகமான மாற்றத்தை உறுதி செய்ய' தலிபான்களிடம் சீன அரசாங்கம் கேட்டதாகவும், 'வெளிப்படையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இஸ்லாமிய அரசாங்கத்தை' அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் வாக்குறுதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஆப்கானிஸ்தான் மற்றும் வெளிநாட்டு குடிமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுமாறும் தலிபான்களை சீன அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுடனான சீனாவின் எல்லை வடகிழக்கு வாகான் மாவட்டத்தில் உள்ள படாக்ஷான் மாகாணத்தில் தொடங்குகிறது. ஜனாதிபதி அஷ்ரப் கானியின் கீழ் ஆப்கானிஸ்தான் ஜனநாயக ஆட்சியில் சீனாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அமெரிக்க படையினர் திரும்பப் பெறத் தொடங்கியவுடன், தலிபான்கள் சின்ஹியாங் பிராந்தியத்துடன் இணைந்துள்ள வடகிழக்கு படாக்ஷான் மாகாணத்தை தாக்கிக் கைப்பற்றினர்.
இதனால் அதன் எல்லையில் சீனா தனது மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டது. சின்ஜியாங்கில் சீனா கலாச்சார இனப்படுகொலையை செய்தது என்பது உலகிற்கு தெரியும். உய்க்குர் முஸ்லிம்களின் பெயர்கள், உணவுப் பழக்கங்கள், மதம், உடை, நடத்தைகள் மாற்றப்பட்டன. தொழிற்பயிற்சி மற்றும் வதை முகாம்கள் இன்றுவரை கடுமையான மனித உரிமை மீறல்களுடன் நடைபெற்று வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் உய்குர் போராளிகள் பலர் சிரியாவிற்கு சென்றனர், கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அறிக்கைப் படி, ETIM இன் சுமார் 500 உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானில், பெரும்பாலும் பதக்ஷான் மாகாணத்தின் ரெஜிஸ்தான் மற்றும் வார்டுஜ் மாவட்டங்களில் இருப்பதாக கணித்துள்ளனர். டிரம்ப் நிர்வாகம் கடந்த ஆண்டு ETIM அமைப்பை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கியது சீனாவிற்கு பெரும்கோபத்தை உண்டாக்கியது.
2014 ல் தொடங்கி, தலிபான் பிரதிநிதிகள் தவறாமல் சீனாவுக்கு வருகை தரத் தொடங்கினர். சின்ஜியாங்கின் தலைநகரான உரும்கியில் காபூலுக்கும் தலிபான்களுக்கும் இடையே சீனா இரகசியப் பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்தது.
Cover Image Courtesy: Japan Times