Kathir News
Begin typing your search above and press return to search.

மலேசிய தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இருந்து பெரியாரை நீக்கிய மலேசியா வாழ் தமிழர்கள்!

ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்த பெரியார் பற்றிய குறிப்பு நீக்கப்படும் என்று‌ இணை கல்வி அமைச்சர் உறுதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது

மலேசிய தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இருந்து பெரியாரை நீக்கிய மலேசியா வாழ் தமிழர்கள்!

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  26 Feb 2021 11:03 AM GMT

மலேசிய தமிழர்கள் அங்குள்ள தமிழ் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் ஆறாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் பெரியார் குறித்து ஒரு பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் என்ற வகையில் பெரியார் ஈ.வெ.ராமசாமியைப் பற்றிய குறிப்பு சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தமிழ் மற்றும் இந்து கலாச்சாரங்களையும் கடவுள்களையும் இழிவாக பேசிய பெரியாரை பற்றி தமிழ் புத்தகத்தில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்றும் பெரியாரியவாதிகள் கல்வி துறையில் முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு மறைமுகமாக கடவுள் மறுப்பு கொள்கையை பள்ளி குழந்தைகளிடையே திணிப்பதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் தமிழ் புத்தாண்டு சித்திரை 1 அன்று அல்ல என்றும் தை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்றும் திமுகவின் கருத்துக்களைப் புகுத்தும் வண்ணம் கையேடு ஒன்றை பள்ளிகளில் விநியோகித்ததாக தெரிகிறது. இதற்கும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பொங்கல் இந்து பண்டிகை என்றும் அதேபோல் சித்திரை 1 மட்டுமே தமிழ் புத்தாண்டாக தமிழர்களால் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது என்றும் வழிவழியாக பின்பற்றப்படும் வழக்கங்களை மாற்றும் முயற்சிகளை மேற்கொள்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து மலேசிய இந்து சங்கத்திடம் பெற்றோர்கள் தகவல் அளித்ததன் அடிப்படையில் மலேசிய இந்து சங்கம் அந்நாட்டின் கல்வித்துறைக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து சங்கத்தின் உறுப்பினர்களை கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.

கல்வித்துறை இணை அமைச்சருடன் நடந்த கூட்டத்திற்கு பின் பெரியார் குறித்த பகுதி நீக்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததாகவும் இந்திய தமிழ் தலைவர்களுக்கு பதிலாக மலேசியாவில் தமிழர்களின் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட தலைவர்களைப் பற்றி பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் மலேசிய இந்து சங்கம் கூறியுள்ளது.

தை 1 தமிழ் புத்தாண்டு என்று குறிப்பிட்ட விநியோகிக்கப்பட்ட கையேடு குறித்தும் அமைச்சரிடம் பேசியதாகவும் அது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளதாகவும் இந்து சங்கம் கூறியுள்ளது. தமிழ் கலாசாரத்துக்கு எதிராக கடவுள் மறுப்பு கொள்கையை புகுத்தும் முயற்சியை எதிர்த்த மலேசிய இந்து சங்கத்தின் இந்த செயலுக்கு மலேசியா வாழ் தமிழர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

மலேசிய இந்து சங்கத்தின் இந்த முயற்சிக்கு நாம் தமிழர் கட்சியின் மலேசிய பிரிவு உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழ் அமைப்பு என்ற போர்வையில் கடவுள் மறுப்புக் கொள்கையையும் திராவிட இயக்கக் கொள்கைகளையும் திணிக்கும் வகையில் செயல்படும் NGOக்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் குறித்து மலேசிய இந்து சங்கம் தகவல்களை வெளியிட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News