Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தான் ராணுவம்-அரசாங்கம் இடையே முற்றும் மோதல்? - ஓர் பார்வை!

பாகிஸ்தான் ராணுவம்-அரசாங்கம் இடையே முற்றும் மோதல்? - ஓர் பார்வை!

Saffron MomBy : Saffron Mom

  |  17 April 2021 12:30 PM GMT

பாகிஸ்தானின் 'தேர்ந்தெடுக்கப்பட்ட' பிரதமர் இம்ரான்கான் இந்தியாவை கையாளும் விவகாரத்தில் இதுவரை பல U-டர்ன்கள் எடுத்திருக்கிறார். அபத்தங்களுக்கு அடையாளமாக இருக்கும் அவரின் அரசாங்கத்தில் கூட மிகவும் அபத்தமான நிகழ்வுகள் சமீபத்தில் அரங்கேறின.

பாகிஸ்தான் அமைச்சரவையின் பொருளாதார ஒருங்கிணைப்பு குழு (ECC) இந்தியாவிலிருந்து சர்க்கரை மற்றும் பருத்தியை வாங்கும் முடிவை அறிவித்தது. ஆனால் கூடிய விரைவிலேயே அமைச்சரவை, மற்றொரு கூட்டம் கூட்டி இந்த முடிவை ரத்து செய்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவுடைய உறவுகளை குறித்து விவாதம் செய்யும் ஒரு சிறப்பு கேபினட் துணை கமிட்டி கூடி, ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் நடந்த அரசியலமைப்பு சீர்திருத்தங்களை இந்தியா திரும்பப் பெற்றால் ஒழிய இந்தியாவுடன் எந்த வர்த்தகமும் இருக்காது என அறிவித்தது.

இதில் என்ன சுவாரஸ்யமான விஷயம் என்றால், இம்ரான்கான் தான் வர்த்தக அமைச்சர். அவர் ஒப்புதல் அளித்த ECC முன்மொழிவைத் தான், அவர் தலைமையிலான அமைச்சரவை ரத்து செய்தது என்பது இணையத்தில் பெரிய கேலிக் கூத்தானது. இது நகைப்புக்குரிய விஷயம் என்றாலும், பாகிஸ்தான் அதிகாரங்களின் பின்புலங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்த பல கேள்விகளையும் இது எழுப்பும். பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுடன் 'அமைதி முன்னெடுப்பை' பின்புறத்தில் எடுக்க முயற்சித்தது என ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்த நிகழ்வுகளுக்கு என்ன அர்த்தம்?

அறிக்கைகளின்படி, ECCக்கு இந்த முன்மொழிவு வந்த பொழுது அனைவரும் இதற்கு ஒப்புதல் அளித்தனர். வர்த்தக அமைச்சர் இம்ரான்கானும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதை வரவேற்றவர்களில் திட்ட அமைச்சர் ஆசாத் உமரும் ஒருவர். இவர் இதே முன்மொழிவு, அமைச்சரவைக்கு வந்த பொழுது அதை எதிர்த்துப் பேசினார்.

உள்துறை அமைச்சர், மனித உரிமைகள் அமைச்சர், மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரிடம் இருந்தும் பலத்த எதிர்ப்பு வந்தது. சொல்லப்போனால் வெளியுறவுத் துறை அமைச்சரும், பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகமே இந்த விவகாரங்களில் இருந்து தள்ளி வைக்கப்பட்டதாக, அமைச்சரவைக் கூட்டத்தில் அவர்கள் இதற்கு மிகுந்த எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த பின்புலத்தில் வைத்துப் பார்க்கும் பொழுது இந்த ஒட்டுமொத்த விவகாரமே சரியான தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாததால் நடந்த சிறிய குழப்பம் என்று கூறிவிட முடியும். இடது கை என்ன செய்கிறது என்றே தெரியாமல் வலது கை உள்ளது என்றும் கூறமுடியும். வர்த்தக அமைச்சராக இருந்த இம்ரான்கான் இந்தியாவிடமிருந்து சக்கரையும் பருத்தியும் வாங்குவதற்கான ஒப்புதல் அளித்த பொழுது தன் மனதிலே இல்லை என்றுகூட கூற முடியும். அவர் கூடிய விரைவில் தான் செய்த தவறை உணர்ந்து திரும்பப் பெற்றார் என்றும் கூற முடியும். ஆனால் இதில் ஒரே பிரச்சனை இந்த மாதிரியான விளக்கங்களை எல்லாம் ஒப்புக் கொள்ள யாரும் தயாராக இல்லை

பாகிஸ்தானுக்குள் பத்திரிக்கைகள் இந்த பிரச்சனைகளை குறைத்து மதிப்பிட்டு இது ஒன்றுமில்லை என்று கூற முயன்றனர். இம்ரான் கானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இதை நியாயப்படுத்த கூட முயன்றார். ஆனால் உண்மையில் என்ன பிரச்சினை என்றால் இந்தியாவுடனான உறவுகள் என வரும்பொழுது பாகிஸ்தானில் வழக்கமானது என்று எதுவும் இல்லை.

பாகிஸ்தானுக்கு மிகவும் அதிகம் தேவைப்படும் இத்தகைய பொருட்களை இந்தியாவிடமிருந்து வாங்கினால் ஏற்படும் ராஜதந்திர ரீதியிலான மற்றும் அரசியல் ரீதியான விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ECC இந்த முடிவை எடுத்ததாக நாம் கருதலாம்.

பாகிஸ்தான் ராணுவம் தான் அரசாங்கத்தை மிரட்டி இந்த உத்தரவை பின்வாங்க வைத்தது என்பது போல் தெரியவில்லை. ஏனெனில் இந்தியாவுடனான சமாதான முன்னெடுப்புகளை மேற்கொள்வதே பாகிஸ்தான் ராணுவம் தானே தவிர பாகிஸ்தான் அரசாங்கம் இல்லை. சொல்லப்போனால் இஸ்லாமாபாத் பாதுகாப்பு மாநாட்டில் ஜெனரல் பஜ்வா அளித்த பேச்சுக்களை பார்க்கும்பொழுது, பாகிஸ்தான் ராணுவம் அல்லது ஜெனரல் பஜ்வாவின் ஆட்கள் இந்தியாவுடன் ஓரளவு வர்த்தகம் செய்ய ஒப்புக் கொள்ளவோ அல்லது ஆதரிக்கவோ செய்திருப்பார்கள் என்பது சாத்தியம்.

பாகிஸ்தான் ராணுவத்தின் அப்படிப்பட்ட எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் இந்தியாவுடன் வர்த்தகங்களை திறப்பதற்கு ஒரு முன்முயற்சி நடக்கும் என்பதே கற்பனை செய்ய முடியாத ஒன்று. ஜெனரல் பஜ்வா அல்லது அவரது குழுவினர் இதற்கு உண்மையிலேயே ஒப்புதல் அளித்து இருந்ததையும் மீறி ராணுவத்தினர் அமைச்சரவை கூட்டத்தில் இம்முயற்சியை எதிர்த்து பேச முடிந்ததற்கு இரண்டு காரணங்கள்.

ஒன்று ராணுவத்தில் இருக்கும் மற்றொரு வலிமை வாய்ந்த பிரிவிற்கு இந்தியாவுடன் வர்த்தகம் செய்வது பிடிக்கவில்லை. இரண்டாவது, இம்ரான் கான் மற்றும் ஜெனரல் பஜ்வா, எதிர்க்கட்சிகளிடமிருந்து மட்டுமல்லாமல், தங்களுடைய கூட்டாளிகளிடம் இருந்தும் மீடியாக்களிடம் இருந்தும் கூட கடும் எதிர்ப்பை சந்தித்திருப்பார்கள். அதாவது இம்ரான்கானின் இந்தியாவுக்கு எதிரான மோசமான பேச்சுக்களும் வெறுப்பும் இப்பொழுது அவருக்கே பிரச்சினையாக வந்து முடிந்திருக்கிறது.

அமைச்சரவை, வர்த்தக நடவடிக்கையை எதிர்த்து இருப்பது ஜெனரல் பஜ்வாவிற்கு ஒரு பெரிய எதிர்ப்பாகும். ஜெனரல் பஜ்வா, இம்ரான் கான் இருவரும் இந்தியாவுடனான உறவுகளில் ஒரே முடிவில் இருந்திருந்தால் அவர்கள் இருவருமே அதை பின் வாங்கிக்கொள்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவு.

சொல்லப்போனால் இதற்குப் பிறகு தேர்தல் நடந்தால் பாதிக்கப்பட போவது இம்ரான் கான் தானே தவிர, ஜெனரல் பஜ்வா கிடையாது. ECC அறிவிப்பு மற்றும் கேபினட் மீட்டிங்கு இடையிலான 24 மணி நேரங்களில் அனைத்து எதிர்ப்புகளும் இம்ரான்கான் மீதே செலுத்தப்பட்டது. பஜ்வா மீது அல்ல. ஏற்கனவே பாப்புலாரிட்டி சரிந்து வரும் வேளையில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவது இம்ரான் கானுக்கு அரசியல் ரீதியாக மோசமாக முடியும்.

ஜெனரல் மீது பழியைப் போடுவது இம்ரான் கானுக்கு அவ்வளவு சர்ச்சைக்குரிய விஷயம் அல்ல. ஏனெனில் தான் மிகப்பெரிய தேசியவாதி என்றும் இஸ்லாமியவாதி என்றும் காஷ்மீர் காரணத்திற்காக தான் பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து நின்றதாகவும் தன்னைக் காட்டிக் கொள்வார். காஷ்மீர் முஸ்லிம்களை இந்தியாவுடனான வர்த்தக லாபங்களுக்காக விட்டுவிட வில்லை என்றும், பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு பொம்மை தான் அல்ல என்றும் காட்டிக் கொள்வார். இதற்குப் பிறகும் இம்ரான் கானின் அரசாங்கத்தை கலைக்க, அவரை துரத்த முயற்சி நடந்தால் காஷ்மீர் முஸ்லிம்களுக்காக தான் குரல் கொடுத்ததற்தாக என்று அவர் கூறிக் கொள்வார்.

எப்பொழுதெல்லாம் எதிர்க்கட்சிகளுடன் ஒரு அனுசரணையுடன் ஒத்துழைக்க பாகிஸ்தான் ராணுவம் முயற்சிக்கிறதோ அப்போதெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்வது, அவதூறாக பேசுவது என ஆட்டத்தை கலைத்து வருகிறார் இம்ரான்கான்.

அதைப்போலவே தற்பொழுது இந்தியாவுடன் பாகிஸ்தான் ராணுவம் ஏதாவது சமாதான முன்னெடுப்பு செய்தால் அதை தவிர்க்கவும் இம்ரான்கான் முற்படலாம். சர்வதேச அளவில் இந்த வர்த்தக படுதோல்வி பாகிஸ்தான் மீது எந்த விதத்திலும் நல்ல பெயரை ஏற்படுத்தி தரவில்லை.

இந்தியா எப்பொழுதுமே சிவிலியன் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கும். ஆனால் ஒன்றுமே நடக்காது. இந்த முறை பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுடன் பேச முயற்சித்தது, அப்பொழுதும் ஒன்றும் நடக்கவில்லை. இதற்கு முன்னால் ராணுவம் பிரச்சனைகளை ஏற்படுத்தியது. தற்பொழுது சிவிலியன் அரசாங்கம் நடத்துகிறது.

இந்தியா மற்றொரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பாகிஸ்தான் ராணுவம், எங்களுடைய முயற்சிகளை பாகிஸ்தான் அரசாங்கம் தடுத்து விட்டது எனவே நீங்கள் ஏதாவது இன்னும் பாசிட்டிவாக செய்தால் நாங்கள் அதை அரசாங்கத்திடம் கூறி சரிசெய்து செய்வோம் என்று கூற முயற்சிக்கலாம். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா இறங்கி வர வேண்டும் என நட்பு பத்திரிக்கையாளர்கள் ஏற்கனவே இந்தியாவில் கூற ஆரம்பித்து இருக்கிறார்கள். இது பாகிஸ்தானின் தந்திரம்.

அவர்கள் ஒரு பிரச்சனையை உருவாக்கி அல்லது உபயோகப்படுத்தி, தடைகளை அவர்களே உருவாக்கி அதை தீர்ப்பதற்கு இந்தியாவின் உதவியை கேட்பார்கள். பாகிஸ்தானுடன் வர்த்தகம் செய்வது பாகிஸ்தானுக்குத்தான் நல்ல விஷயமே அன்றி இந்தியாவிற்கு தேவை கிடையாது. ஆனால் அவர்களுக்கு பலனளிக்கும் ஒரு விஷயத்தை செய்வதற்காக இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மாறுதலை செய்யும்படி கேட்பது பாகிஸ்தான் பல்லாண்டுகளாக பயன்படுத்தும் யுக்தி.

மோடி அரசாங்கமும் இதே வலையில் விழப் போகிறதா அல்லது எந்தவித சமரசத்துக்கும் ஒப்புக் கொள்ள மாட்டோம் என நிற்கப் போகிறதா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Inputs: ORF

Next Story
கதிர் தொகுப்பு
Trending News