Kathir News
Begin typing your search above and press return to search.

'சூரரைப் போற்று' பரப்பும் போலி அரசியல்.! கோபிநாத்தை "கருஞ்சட்டை மாறனாக" மாற்றும் மார்க்கெட்டிங்!

'சூரரைப் போற்று' பரப்பும் போலி அரசியல்.! கோபிநாத்தை "கருஞ்சட்டை மாறனாக" மாற்றும் மார்க்கெட்டிங்!

சூரரைப் போற்று பரப்பும் போலி அரசியல்.! கோபிநாத்தை கருஞ்சட்டை மாறனாக மாற்றும் மார்க்கெட்டிங்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  13 Nov 2020 2:29 PM GMT

திரையுலகத்திற்கு ஓர் சக்தி உண்டு அது தன் திரைப்படங்கள் வாயிலாக பல நூறு புத்தகங்கள் கூறும் கருத்துக்களை மக்கள் மனதில் சுலபமாக சில காட்சிகளில் பதிய வைக்க முடியும். அதுவும் திரைபடங்கள் வாயிலாக மக்களுக்கு அரசியல் பயிற்றுவிப்பதும், தான் விரும்பும் ஓர் சித்தாந்தத்தை மக்கள் விரும்பும் சித்தாந்தமாக மக்களை நம்ப வைக்கவும் இயலும்.

இதை ஆதாரமாக வைத்துதான் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து துவங்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகம் ஏற்றம் கண்டது திரையுலகம் இல்லையெனில் ராபின்சன் பூங்காவில் துவங்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகம் சில வருடங்களில் காணாமல் சென்றிருக்கும். திரைப்படங்கள் வாயிலாக தி.மு.க தான் விரும்பும் கருத்துக்களை வசனங்கள் மற்றும் காட்சி அமைப்புகள் மூலமாக மக்களிடத்தில் விதைத்தது. பலன் தி.மு.க மக்களுக்கு கல்வி கண் திறந்த காமராஜரையே தோற்கடிக்கும் ஆற்றல் பெற்றது.

அந்தளவிற்கு சக்தி வாய்ந்தது திரைப்படங்கள். அப்படிப்பட்ட திரைப்படங்களில் உண்மை கதையை தழுவி எடுக்கிறேன் என்ற பெயரில், உழைப்பவரின் வாழ்க்கை சரித்திரத்தை காவியமாக படைக்கிறேன் என்ற பெயரில் உழைப்பவரின் கதாபாத்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த கதாபாத்திரத்தை தான் விரும்பும் சித்தாந்தத்தை பேச வைத்து மக்கள் மனதில் தன் சித்தாந்தம் பதிய ஓர் திரைப்படத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.

'சூரரைப் போற்று' சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் தென் இந்தியாவின் முக்கிய தொழில் அதிபரான கோ.ரா.கோபிநாத் எனும் கோரூர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை தழுவி அவர் எழுதிய புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம். படம் எடுப்பதும் அதில் நடிகர்கள் நடிப்பது படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களின் உரிமை ஆனால் உண்மை கதை தழுவல் என தொடக்கத்தில் முகவரியிட்டு அதில் தான் விரும்பும் சித்தாந்தத்தை ஒரு கும்பல் மக்களுக்கு புகுத்த முயற்சி செய்துள்ளது.

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் அய்யங்கார் குடும்பத்தில் பள்ளி ஆசிரியருக்கு மகனாக பிறந்த ஓருவரை, எட்டு வருடங்கள் ராணுவ சேவையில் ஈடுபட்டு பங்களாதேஷ் போரில் ஈட்பட்ட ஒரு ராணுவ வீரனை, 28 வயதிலேயே இயற்கை முறையில் விவசாயம் செய்து பட்டுப்பூச்சி வளப்பு பண்ணையை நிறுவிய ஓர் விவசாயியை, பின் கடினமாக உழைத்து 2003'ம் ஆண்டில் பெரும் நிறுவனங்களுக்கு போட்டியாக தன் வானூர்தி நிறுவனத்தை துவங்கிய ஓர் சாதனை தொழிலதிபரை இப்படி இத்தனை விஷயங்களை அடிப்படையாக கொண்டு திரையில் காண்பிக்காமல் அவரை ஓர் 'பெரியாரியவாதி'யாக காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன?

இவ்வளவிற்கும் கோபிநாத் ஓர் "பெரியாரியவாதி" அல்ல, ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்து, கஷ்டத்தில் படித்து, ராணுவ வீரராக பணியாற்றி, விவசாயியாக உழைத்து, பின் வானூர்தி நிறுவன தொழிலதிபராக உயர்ந்த ஓர் சமுதாயத்தின் முக்கிய நபரின் மீது ஏன் ஒரு கும்பல் 'பெரியாரியவாதி' என்கிற லேபிளை ஒட்ட முயற்சிக்கிறது?

படத்தின் துவக்கத்தில் இரயில் பயணத்தில் ஓர் பிராமணர் கருவாட்டு கூடை வைத்திருக்கும் பெண் பக்கத்தில் உட்கார அருவருப்பு காட்டுவதாக காட்சிபடுத்துவதில் தொடங்குகிறது ஓர் கும்பலின் குறிப்பிட்ட சமுதாயத்தை தவறாக சித்தரிக்க நினைக்கும் வெறுப்பு மனநிலையின் வெளிப்பாடு.

பின் 'கருஞ்சட்டை'யுடன் 'மண்ணுருண்டை மேல' என்ற பாடலுடன் பிணத்தின் முன் ஆடும் சூர்யா உதயமாகிறார். நிஜ வாழ்வில் கூட இத்தனை முறை கோபிநாத் 'கருச்சட்டை' அணிந்திருக்க மாட்டார்.

ஆனால் படம் முழுவதும் கதாநாயகன் சூர்யா 'கருஞ்சட்டை' தவிர வேறு சட்டை அணிவதில்லை! ஏன் கதாநாயகியுடன் காதல் பாடல்களிலும், தனது ராணுவ உயர் அதிகாரியை பார்க்க செல்லும் போதும், விமான சேவை தொடர்பாக அதிகாரிகளிடம் பேசும் போதும், தன் கல்யாண வைபோகத்தின் சமயத்திலும் இந்த கதாநாயகனுக்கு கருஞ்சட்டைதான் பிரதானம்!

கதாநாயகன் தனது திருமணத்தை சுயமரியாதை திருமணமாக நடத்துவதாக இருக்கட்டும், திருமண மேடையில் பின் ஈ.வே.ராமசாமியின் படம் இருப்பதாகட்டும், திருமணம் முடிந்த கையோடு பறையாட்டம் ஆடுவதாகட்டும் "பெரியாரிய" லேபிள்கள் இடம் கிடைக்கும் போதெல்லாம் ஒட்டப்பட்டுள்ளன.

ராணுவ உயரதிகாரி நாயுடு என்ற பெயரில் வலம் வருவதும் அவரை கொடுமைக்காரராக காண்பிப்பதும், பின் ஓர் காட்சியில்
சாதிய ஏற்றத்தாழ்வுகளை உடைக்க விரும்புகிறேன் என கதாநாயகன் உணர்ச்சியில் பொங்குவதாகட்டும் அனைத்தும் 'கருப்பு' வண்ண அரசியல் பேசும் இயக்குனர் பெயர் சுதா கொங்கரா! ஜாதி ஒழிப்பை பெரியாரிய கும்பல் எப்படி தன் 'மார்கெட்டிங் யுக்தி'யாக பயன்படுத்தி கொண்டனர் என்பதற்கு சான்று.

தன் உழைப்பையும், ஐடியாவையும் நம்பி முன்னேறிய ஓர் மனிதனின் வாழ்கையை படமாக்குகிறேன் என்ற பெயரில் அவருக்கு கருஞ்சட்டை மாட்டிவிட்டு அவரை 'பெரியாரிய' பிராண்ட் ஆக காண்பிக்க முயற்சிப்பதில் தெரிகிறது இத்தனை ஆண்டுகாலம் பெரியாரியம் என்ன செய்தது என, வெறும் "மார்க்கெட்டிங்" மட்டுமே செய்தது "பெரியாரியம்".

பெரியாரியம் பேசுவதால் மட்டும் ஒருவன் உயர முடியாது கடின உழைப்பும், உன்னத எண்ணமும் இருக்க வேண்டும் என கூற வேண்டிய படத்தை பெரியாரிய லேபிள் ஒட்டி விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர். "பெரியாரிசம்" காலவதி ஆனது தெரியாமல்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News