'ஒன்றியம்'னா இனிக்குது! தமிழகம்'னா கசக்குதா?' - ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றவைத்த நெருப்பு!
'இந்தியாவிலேயே தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழல் இருக்கிறது, தமிழ்நாடு என்பதை விட தமிழகமென்பது சரியாக இருக்கும்' என ஆளுநர் ஆர்.என்.ரவி கொளுத்திப்
By : Mohan Raj
'இந்தியாவிலேயே தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழல் இருக்கிறது, தமிழ்நாடு என்பதை விட தமிழகமென்பது சரியாக இருக்கும்' என ஆளுநர் ஆர்.என்.ரவி கொளுத்திப் போட்ட விவகாரம் தான் தற்பொழுது தமிழக அரசியலில் தீப்பிடித்து எரிகிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவி அதிகாரியாக இருந்து ஆளுநராக உயர்ந்தவர் குறிப்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்களின் சிஷ்யர். இவரை பொறுத்தவரை நிர்வாகம் என்பதையும் தாண்டி நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் ஒற்றுமை, தேசவிரோத செயல்கள், நக்சல் ஊடுருவல், பிரிவினைவாதிகளின் நடமாட்டம் ஆகியவற்றை கண்காணிப்பதே முதல்கடமையாக இருக்கும் என்பது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று!
முதலில் ஆர்.என்.ரவி தமிழகத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டதில் இருந்தே இதன் பின்னணியில் மிகப் பெரிய திட்டம் இருக்கிறது என எதிர்கட்சிகள் கூறி வந்தாலும் இவர் வந்து தன் வேலையை சரியாக செய்து வருகிறார். தமிழகத்திற்கு எது தேவை? தமிழகத்தில் இன்றைய அரசியல் சூழல் எவ்வாறு உள்ளது? மக்களுக்கான சிந்தனை என்ன? இன்றைய தமிழக இளைஞருக்கு எது தேவை? என்பதை சரியாக பேசி வருகிறார்.
குறிப்பாக ஆன்மீகம் பற்றியும், சனாதன தர்மம் பற்றியும் இவர் பேசி வரும் கருத்துக்கள் தமிழ்நாட்டின் சில அரசியல்வாதிகளின் தூக்கத்தை கெடுத்து விட்டது என்றால் அது மிகையாகாது.
அந்த வகையில் தற்பொழுது காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய தமிழ்நாட்டில் இருந்து சென்ற தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 'இந்தியாவிலேயே தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழல் இருக்கிறது, தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்பதே சரியாக இருக்கும்' பேசினார்.
இந்த விவகாரம் தான் தமிழக அரசியலில் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறி குளிர்ந்தவர்கள் எல்லாம், ஒன்றியம்! ஒன்றியம்!! ஒன்றியம்!!! என பேசி அதனை பெருமையாக நினைத்தவர்கள் எல்லாம் தமிழ்நாடு என்பதை தமிழகம் எனக் கூறியவுடன் அடியில் வெடி வைத்தது போன்று கதறுகின்றனர்.
குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆளுநரை விமர்சித்து தனது ட்விட்டர் பதிவில், 'தமிழகமா? தமிழ்நாடா? இது குதர்க்க வாதம், ஆர்.என்.ரவி என்பதைவிட ஆர்.எஸ்.எஸ்.ரவி என்பதே சரியாக இருக்கும். எனவும் ஜனநாயகத்துக்கான ஆளுநர் என்பதை விட சனாதனதுக்கான ஆள் இவர் என்பதே சரியாக இருக்கும்' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியோ, 'இதுவரை பேசுகிறார் என நினைத்தோம், ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி உளறுகிறார் என இப்போது புரிகிறது' என வழக்கம்போல் பிதற்றியுள்ளார்.
மேலும் கம்யூனிஸ்ட் எம்.பி.ஆன வெங்கடேசன் அவர்களோ, 'எங்கள் தலைவர்களால் கொன்று வீசப்பட்ட கருத்தை இன்று மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி தூக்கிக் கொண்டு வருகிறார்' எனவும் கூறியுள்ளார்.
போதாக்குறைக்கு திமுகவின் நாளேடான முரசொலியோ, 'பிரிவினையை வளர்த்தது யார்? ஜாதி என்ற கருத்தியலை பிறப்பின் அடிப்படையில் உருவாக்கி உற்பத்தி சக்திகளான பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தியது யார் என்பதை தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தான் விளக்க வேண்டும்' என தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் வருகையின் போதே அவரை வைத்துக்கொண்டு ஒன்றியம்! ஒன்றியம்!! ஒன்றியம்!!! என பேசி இந்திய நாட்டை ஒன்றியம் எனக் கூறி இழிவுபடுத்தியவர்கள் தற்பொழுது ஆளுநர் தமிழ்நாடு அல்ல தமிழகம் என கூறியவுடன் குதிக்கின்றனர். 'இந்தியா ஒன்றியம் என்றால் தமிழ்நாடு தமிழகம்தான்' என்ற ஆளுநரின் கருத்து அனைவருக்கும் நெற்றிப்போட்டில் அடித்தது போல் உள்ளது அப்பட்டமாக தெரிகிறது.