#TheKashmirFiles : மூடி மறைக்கப்பட்ட இனப்படுகொலையின் கோர பக்கங்கள்!
அரசியல் மற்றும் மத ரீதியாக எண்ணில் அடங்கா இன்னல்களை சந்தித்த இந்த திரைப்படம் ஒரு வழியாக திரைக்கு வந்து தற்போது வெற்றிநடை போட்டு வருகிறது
By : பொய்யாமொழிக் கபிலன்
எந்தெந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எந்தெந்த செய்திகள் மூடி மறைக்கப்பட வேண்டும் என்பதை இங்கு சிலர் முடிவு செய்கின்றனர். அதன் படி சில செய்திகள் மட்டும் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டு அந்த நிகழ்வு பற்றிய ஒரு பிம்பத்தை, அதுவும் அவர்கள் விரும்பும் பிம்பத்தை மக்களின் மனதில் ஆழமாக பதிய வைக்க அவர்களால் முடிகிறது. அவர்கள் விரும்பாத நிகழ்வுகளை செய்தியாக கூட மக்களிடத்தில் சென்று விட கூடாது என்பதிலும் அவர்கள் முக்கிய கவனம் செலுத்துகின்றனர். எந்த மாணவியின் தற்கொலை பற்றி சுவாரிஸ்யமாக விவாதிக்க வேண்டும், எந்த மாணவியின் தற்கொலை மூடி மறைக்கப்பட வேண்டும், எந்த பாலியல் அச்சுறுத்தல்கள் பற்றி பேச வேண்டும், எந்த பாலியல் அச்சுறுத்தல்களை மூடி மறைக்க வேண்டும், எந்த இனப்படுகொலை குறித்து மக்களை மூளைச்சலவை செய்ய வேண்டும், எந்த இனப்படுகொலையை மூடி மறைக்க வேண்டும், எந்த கலப்பு திருமணத்தை கொண்டாட வேண்டும், எந்த கலப்பு திருமணம் மூடி மறைக்கப்பட வேண்டும் என்பதை இவர்கள் தான் முடிவு செய்கிறார்கள்.
யார் இவர்கள் என்ற கேள்வி தற்பொழுது எழலாம். தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில், ராதிகா மேனன் என்ற பேராசிரியர் கிருஷ்ணா பண்டித் என்ற மாணவரிடம் கூறுவார், "They may run the Government, but we run the system". அதாவது, "அவர்கள் வேண்டுமானால் அரசாங்கத்தை நடத்தலாம், ஆனால் சிஸ்டத்தை நடத்துவது நாங்கள் தான்". இந்த வசனத்தின் ஆழம் நமக்கு புரிந்தால் அவர்கள் யார் என்பதை நம்மால் எளிதாக அடையாளம் காண முடியும். அவர்களின் செய்தி, பாடப் புத்தகம் மற்றும் வரலாற்று கதைகளின் தாக்கத்தால் நம்முடைய சிந்தனை திறனும் பாதிக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், தி காஷ்மீர் ஃபைல்ஸ் உங்களுக்கான திரைப்படம்.
உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், இது வரை யாரும் சொல்லாத ரத்த சரித்திரத்தை நமக்கு பாடமாக தருகிறது. சரியாக 32 வருடங்களுக்கு முன்பு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதற்றம் ஏற்படுகிறது. "Convert, Flee or Die"(மதம் மாறு, ஓடிவிடு அல்லது செத்துமடி) என்ற கோஷத்தையும் ஆயுதத்தையும் கையிலெடுத்த தீவிரவாதிகள் அங்கு மக்கள்தொகையில் சிறுபான்மையாக இருப்பவர்களை துப்பாக்கி முனையில் கொன்று குவித்தனர்.
அங்கிருந்து தப்பி சென்று நாட்டின் தலைநகரில் வாழ்ந்து வரும் கிருஷ்ணா பண்டித் மற்றும் அவருடைய தாத்தா புஷ்கர் பண்டித் ஆகியோரை சுற்றி வலம் வருகிறது இந்த திரைப்படம். காஷ்மீரில் இருந்து வெளியேறும் போது, கிருஷ்ணா பண்டித் ஒரு கை குழந்தை. அப்போது என்ன நேர்ந்தது என்ற நினைவே அவருக்கு சற்றும் இல்லை. தங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒரு விபத்தில் உயிரிழக்க நேரிட்டதாக கிருஷ்ணாவின் தாத்தா கிருஷ்ணாவிடம் சொல்லி இருக்கிறார். கிருஷ்ணாவிற்கு தெரிந்தது அவ்வளவு தான்.
தலைநகரில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகத்தில் படிக்கும் கிருஷ்ணா ஒரு முறை "தனி காஷ்மீர்" கோஷமிடுகின்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது "காஷ்மீர் ஒரு போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்ததே இல்லை", என்று உரக்க சொல்கிறார் பேராசிரியர் ராதிகா மேனன். இந்திய ராணுவத்தினர் காஷ்மீர் மக்களை துன்புறுத்தி வருகின்றனர். அதனால் காஷ்மீரை விடுவிக்க வேண்டும் என்று பேசுகிறார். அப்போது, கிருஷ்ணா பண்டித் எழுந்து நின்று, "காஷ்மீரில் இருந்த பண்டிதர்கள் கொன்று குவிக்கப்பட்டனர், அதனால் பண்டிதர்கள் காஷ்மீரை விட்டு வெளியேறிவிட்டனர்", என்று பேசுகிறார். "அது உண்மை இல்லை. காஷ்மீர் பண்டிதர்கள் அவர்களாகவே விருப்பப்பட்டு வெளியேறினர்", என்று பேராசிரியர் ராதிகா மேனன் கூறுகிறார். உடனே கூட்டத்தில் இருப்பவர்கள், இது உண்மை இல்லை, இதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி கிருஷ்ணா பண்டித் பேசுவதை தடுத்து நிறுத்துகின்றனர். பிறகு கிருஷ்ணா பண்டித், பேராசிரியரிடம் தனியாக சென்று உரையாடுகிறார், பிறகு இருவரும் நெருக்கம் ஆகின்றனர்.
இந்நிலையில், கிருஷ்ணா பண்டித்தின் தாத்தா புஷ்கர் பண்டித், Article 370-ஐ நீக்க வேண்டும் என்று தனது தள்ளாத வயதில் தனி ஒருவராக தலைநகரில் போராடி வருகிறார். ஒரு சமயத்தில் இருவருக்கும் இடையே காஷ்மீர் குறித்து ஏற்படும் வாக்குவாதம் மெய் சிலிர்க்க வைக்கிறது. கிருஷ்ணா பண்டித் பல்கலைக்கழக தேர்தலில் போட்டியிடுகிறார். அப்போது ஒரு நாள், பேராசிரியர் ராதிகா மேனன் கிருஷ்ணா பண்டித்திடம் உரையாடி கிருஷ்ணாவை தனி காஷ்மீர் கோஷம் எழுப்ப வைக்கிறார். இவ்வாறு செய்தால் தான் தேர்தலில் ஜெயிக்க முடியும் என்ற எண்ணத்தையும் ஆழமாக விதைக்கிறார். கிருஷ்ணாவின் தாத்தாவோ, "அரசியலின் முடிவு அழிவு மட்டும் தான்" என்று கிருஷ்ணாவிடம் கூறுகிறார். குழப்பத்தின் மையத்தில் இருக்கும் கிருஷ்ணாவின் நிலை பரிதாபம் தான்.
இந்நிலையில், கிருஷ்ணாவின் தாத்தா உயிரிழக்கிறார். தாத்தாவின் கடைசி ஆசைப்படி, அவரின் அஸ்தியை கரைக்க காஷ்மீர் செல்கிறார் கிருஷ்ணா. அப்போது தாத்தாவின் நண்பர்களை சந்திக்கிறார் கிருஷ்ணா. அதே போல், பேராசிரியரின் நண்பர்களான தனி காஷ்மீர் கோரும் முக்கிய தீவிரவாதிகளையும் சந்திக்கிறார் கிருஷ்ணா. இந்த சந்திப்புகளுக்கு பின்னர் கிருஷ்ணா மீண்டும் தலைநகர் வந்து தனது பல்கலைக்கழக அரசியல் கூட்டத்தில் பேசுகிறார். அப்போது காஷ்மீர் குறித்த அவரின் பார்வை என்ன என்பது தான் இந்த திரைப்படம்.
இதற்கு நடுவில், தனது குடும்பத்தினரை படுகொலை செய்தது இந்திய ராணுவமா இல்லை தீவிரவாதிகளா? ஏன் தனது தாத்தா இந்த உண்மைகளை தன்னிடம் இருந்து மூடி மறைத்தார்? என்பன போன்ற கேள்விகளுக்கு கிருஷ்ணாவிற்கு பதில் கிடைக்கிறது. காஷ்மீர் பண்டிதர்கள் ஒரு போதும் ஆயுதம் ஏந்தவில்லையே, பிறகு ஏன் எங்களுக்கு இப்படி நடக்க வேண்டும்? என்ற அனுப்பம் கேரின் எதார்த்தமான கேள்விக்கு விடையேதும் இல்லை. Convert, Flee or Die என்ற கோஷத்திற்கு அச்சத்தை மாற்று, அச்சத்தை ஓடவை அல்லது அச்சத்தை கொன்று விடு என்பது தான் பொருள் என்று அனுப்பம் கேர் தனது பேரனுக்கு போதிக்கும் காட்சியில் அமைதியை விரும்பக்கூடிய ஒருவர், தனது அடுத்த தலைமுறையை எப்படி வளர்க்க வேண்டும் என நினைப்பார் என்பதை ஆழமாக உணர்த்துகிறது.
காஷ்மீரில் நடந்த கோர சம்பவங்களை அதே உக்கிரத்துடன் கோரமாக காட்சியாக்கிய இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரியின் தைரியம் மற்றும் துணிச்சலை பாராட்ட வார்த்தைகள் இல்லை. காஷ்மீர் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நட்சத்திரம் அனுப்பம் கேர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனது வாழ்நாளில் இவ்வளவு அற்புதமாக வேறு ஏதேனும் கதாபாத்திரத்தில் அவரால் நடித்திருக்க முடியுமா என்பது தெரியவில்லை.
படக்குழுவினர் இந்த திரைப்படத்தில் தங்களின் முழு அர்ப்பணிப்பை கொடுத்திருப்பது படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கிய காரணம். தொழில்நுட்ப ரீதியாக அங்கங்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் இந்த படத்தின் நோக்கம் எந்த இடத்திலும் சற்றும் சிதறவில்லை. அரசியல் மற்றும் மத ரீதியாக எண்ணில் அடங்கா இன்னல்களை சந்தித்த இந்த திரைப்படம் ஒரு வழியாக திரைக்கு வந்து தற்போது வெற்றிநடை போட்டு வருகிறது.
திரைப்படத்தை பார்த்து விட்டு வெளியே வரும் தருணத்தில், இந்த இனப்படுகொலை நடந்த போது, இது குறித்து ஒன்றும் செய்ய முடியாமல் சக இந்தியனாக நமது வாழ்க்கையை சுதந்திரமாக நாம் அனுபவித்து கொண்டு இருந்தோமே என்ற எண்ணம் நம்மை வாட்டி எடுக்கும். இந்த அநீதிகள் குறித்து நாம் அறிந்துகொள்ள 32 ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்பதே சுதந்திர இந்தியாவின் கோர பக்கங்கள்.