நாளை ஓணம் பண்டிகை மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் ஓணம் திருநாள்.
மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து அசுரகுல சக்கரவர்த்தியான மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கி வதம் செய்து பிறகு வருடத்திற்கு ஒருநாள் மக்களை சந்திக்க அனுமதி வழங்கிய திருநாளாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
By : Karthiga
கேரள மக்கள் எந்த விதமான பாகுபாடும் பார்க்காமல் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது ஓணம் பண்டிகை .ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்பட்டாலும் வாமனராக வந்த மகாவிஷ்ணு மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு அவரது ஆணவத்தை அடக்கிய நிகழ்வுகளின் ஒரு பகுதியாகவே இந்த ஓணம் பண்டிகை பார்க்கப்படுகிறது .
கேரளாவை ஆட்சி செய்த மகாபலி மன்னன் அந்த மக்களின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். அசுர குலத்தில் பிறந்திருந்தாலும் பிரகலாதனின் வழிவந்த மகாபலி சக்கரவர்த்திக்கு மகா விஷ்ணுவின் மீது பக்தியும் உண்டு ,அதே நேரம் அசுர குலத்துக்கே உரிய தேவர்களை அழிக்கவேண்டும் என்ற கோபமும் உண்டு ஒருமுறை மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்த மகாபலி முன்வந்தால் அந்த யாகத்தில் கலந்து கொள்பவர்களுக்கு கேட்கும் தானங்களை வழங்கவும் அவன் முடிவு செய்தான். இந்த யாகம் நிறைவு பெற்றால் இந்திரனின் பதவிக்கு ஆபத்து வரும் என்பதால் அதனை தடுத்து நிறுத்த தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். இதையடுத்து அவர் வாமனர் எனும் குள்ள உருவம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தி நடத்திய யாகத்திற்கு சென்றார் .
அவரிடம் மகாபலி மன்னன் என்ன தானம் வேண்டும் என்று கேட்க அதற்கு வாமனர், "எனக்கு மூன்று அடி மண் கொடுத்தால் போதும்" என்று கூறினார். வாமனரின் குள்ளமான உருவத்தை கண்டு தங்களுக்கு மூன்று அடி மண் போதுமா என்று நகைப்புடன் கேட்டான் மகாபலி சக்கரவர்த்தி. பின்னர் நீர் வார்த்து மூன்றடி நிலத்தை வழங்க முன் வந்தான் .அப்போது குள்ளமாக இருந்த வாமனர் தன்னுடைய உருவத்தை பெரிதாக்கி பூமிக்கும் வானுக்கும் ஆக உயர்ந்து நின்றார் .பின்னர் தன்னுடைய ஒரு அடியால் பூமியையும் இரண்டாவது அடியால் வானத்தையும் அளந்தார். இப்போது மூன்றாவது அடி வைக்க இடமில்லை. மகாபலியை மூன்றாவது அடியை எங்கே வைப்பது? என்று மகாவிஷ்ணு கேட்க என்னுடைய தலையில் வையுங்கள் என்றான் மகாபலி சக்கரவர்த்தி .அதன்படியே தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்த மகாவிஷ்ணு அவனை பாதாள உலகிற்கு தள்ளினார். மகாவிஷ்ணுவிடம் இறைவா நான் ஆண்டுக்கு ஒருமுறை என்னுடைய மக்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும். என்று கேட்டார் மகாபலியின் கோரிக்கையை ஏற்றார் வாமனர். திருவோண நாள் அன்று மகாபலி மன்னனை வரவேற்கும் பொருட்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஐதீகம்.
இந்த திருவோணத் திருநாள் ஆனது கேரளாவின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் தொடங்கும் அன்று முதல் திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் இந்த விழா கொண்டாடப்படும். திருவோண நாள் கேரளத்தின் சிங்கம் மாதத்தில் அதாவது தமிழில் ஆவணி மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் அன்று முதல் திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படும் .ஒவ்வொரு நாளும் வீடுகளுக்கு முன்பு பெண்கள் அத்தப்பூ கோலமிடுவார்கள். அறுசுவை உணவு பரிமாறப்படும். ஆண்களும் பெண்களும் ஆட்டம் பாட்டம் என்று இந்த விழா களைகட்டும். விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் படகுப்போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது.