Kathir News
Begin typing your search above and press return to search.

"குருவி தலையில் பனங்காய்" என்பது போல் உதயநிதியிடம் தி.மு.கவை ஒப்படைத்துவிட்டு திக்கற்று நிற்கும் தி.மு.க.!

"குருவி தலையில் பனங்காய்" என்பது போல் உதயநிதியிடம் தி.மு.கவை ஒப்படைத்துவிட்டு திக்கற்று நிற்கும் தி.மு.க.!

குருவி தலையில் பனங்காய் என்பது போல் உதயநிதியிடம் தி.மு.கவை ஒப்படைத்துவிட்டு திக்கற்று நிற்கும் தி.மு.க.!

Mohan RajBy : Mohan Raj

  |  27 Nov 2020 5:45 PM GMT

திராவிட முன்னேற்ற கழகம் - 1949 செப்டம்பர் 18 ராபின்சன் பூங்காவில் பேரணியாக துவங்கப்பட்டு இன்றுவரை தமிழ அரசியலில் தவிர்க்க முடியாத கட்சி. இரண்டு முதல்வர்கள் தமிழகத்தை இந்த கட்சியில் இருந்தே ஆண்டு வந்துள்ளனர். பின் முதல்வரான எம்.ஜி.ஆர் துவக்கத்தில் களமாடிய கட்சியும் தி.மு.க'தான் இப்படிப்பட்ட வரலாற்றை தனக்குள்ளே அடக்கியுள்ள தி.மு.க இன்றைக்கு பிறந்தநாள் கொண்டாடும் உதயநிதி'யை முன்னிருத்துகிறது. உதயநிதியின் அரசியலுக்கு தி.மு.க என்பது மலை! ஆனால் தி.மு.க'விற்கு உதயநிதி குருவி தலையில் பனங்காய் வைத்த கதைதான்.

அண்ணாதுரையையும், உதயநிதியையும் ஒப்பிடுவது சூரியனையும், தெருவிளக்கையும் ஒப்பிடுவது போன்றாகும் அந்த தவறை தி.மு.க'வினர் செய்தாலும் உண்மையில் தி.மு.க'வை அறிந்தவன் செய்ய மாட்டான். ஆனால் கருணாநிநியையும், உதயநிதியையும் ஒப்பிட்டு ஆக வேண்டும் ஏனெனில் இன்று கருணாநிதி பேரன் என்ற ஒரே காரணத்தினாலேயே உதயநிதி இன்று அறிவாலய முதலாளி போல் வலம் வர முடிகிறது இல்லையேல் அறிவாலய வாசல் வேர்கடலை கூட விற்க முடியாது.

கருணாநிதி 1924'ல் தமிழக கடலோர மாவட்டமான திருக்குவளையில் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர், உதயநிதி போல் பிறக்கும் பொழுதே பணக்கார குடும்பம் அல்ல.

கருணாநிதி தனது 20 ஆவது வயதில் திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் வழியாக மாணவநேசன் என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையை வெளியிட்டு இளைஞர்களைத் திரட்டினார். உதயநிதியோ தனது 20 வது வயதில் லயோலா கல்லூரியில் நண்பர்களுடன் பொழுதை கழித்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

இன்று தி.மு.க'வின் அதிகார பத்திரிக்கையான முரசொலி கருணாநிதியால் 1942'ல் கருணாநிதியின் 18 வயதில் அரசியல் எழுச்சியால் துவங்கப்பட்டது. உதயநிதிக்கு அரசியல் எழுச்சியே 2019 ஜூலை 4'ம் தேதிதான் அதிகாரப்பூர்வமாக துவங்கியது அதாவது 18 வயதில் முரசொலி'யை துவங்கி தன் அரசியல் எழுச்சியை துவக்கியவரின் பேரனின் அரசியல் வாழ்க்கை 42 வயதில்தான் ஆரமித்தது. அதுவும் போராட்டங்களில் ஏதும் ஈடுபடாமல் நேரடியாக இளைஞர் பிரிவின் செயலாளராக பதவியில்.

தமிழகத்தில் கருணாநிதி காலடி படாத இடங்களே இல்லை எனலாம், போராட்டங்கள், கட்சி மாநாடுகள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், தெருமுனைகூட்டங்கள், துண்டு பிரச்சார விநியோகங்கள், உறுப்பினர் சேர்க்கை, நிதி வசூலித்தல், கைது ஆர்ப்பாட்டங்கள், நிவாரண முகாம்கள், கட்சி தொண்டர்கள் வீட்டு கல்யாணம், பிறப்பு, இறப்பு, வீடு குடி புகுதல், காது குத்துதல் என சகல விஷேஷங்கள் என கருணாநிதி தமிழகத்தை பல முறை வலம் வந்துள்ளார்.

ஆனால் பேரன் உதயநிதி சினிமா படப்பிடிப்புகளுக்கு கூட தமிழகத்தை வலம் வந்ததில்லை. கதாநாயகிகளுடன் டூயட் பாடும் காட்சிகள் கூட 'இளவரசருக்கு' அயல்நாட்டு பயணம்தான். இவ்வளவு ஏன் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் உதயநிதியை தனியாக விட்டால் எப்படி சென்னை வருவது என்று கூட தெரியாதவர் இந்த முத்தமிழறிஞரின் பேரன்.

கருணாநிதியின் கைவண்ண படைப்புகள் பல, 75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார், 15 நாவல்களையும், 20 நாடகங்களையும், 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் படைத்துள்ளார்.

இதுபோக உலக வரலாற்றில் கிட்டதட்ட 60 ஆண்டுகாலம் தினமும் ஒருநாள் கூட தவறாது தனது தொண்டனுக்கு கடிதம் எழுதிய ஒரே கட்சி தலைவர் கருணாநிதி மட்டுமே! "அன்பு உடன்பிறப்பே", "அன்பு தம்பிக்கு", "அன்பு தொண்டர்களுக்கு",
"என் உயிரிலும் மேலான" என முரசொலியில் இவர் இறக்கும் காலம் வரை கடிதங்கள் வெளிவந்தன. ஆனால் இப்படிப்பட்ட கருணாநிதியின் பேரனுக்கோ ட்விட்டரில் எழுதும் 280 எழுத்துக்களுக்கு கூட கூலிக்கு ஆள் வைக்க வேண்டிய நிலை. இவர் கையில்தான் இன்று தி.மு.க'வை தர உடன்பிறப்புகள் துடிக்கின்றனர்.

கருணாநிதி அரசியல் செயல், எழுத்தாற்றல் மட்டுமல்ல பேச்சிலும் புலிதான். ஒருமுறை கருணாநிதி சென்னையில் புறப்பட்டு திருவாரூர் வந்து தனது தாயார் நினைவிடத்தில் வணங்கிவிட்டு மன்னார்குடியில் கட்சி பணியை முடித்துவிட்டு சென்னை செல்ல திட்டம்.

பரபரப்பாக இயங்கியவாறே சென்றுகொண்டிருந்த கருணாநிதியை மறித்து "எங்கே செல்கிறீர்கள்?, என்ன திட்டம்?" என படபடவென கேள்விகளால் துளைத்த பத்திரிக்கையாளர்களை சற்றும் சளைக்காமல் புன்னகையுடன் எதிர்கொண்டு "அன்னை, மன்னை, சென்னை" என தனது பயண விவரத்தை மூன்றே வார்த்தைகளால் தன் முழு பயணத்தையும் சுருங்க சொன்னார் கருணாநிதி. ஆனால் அவரின் பேரனோ கடந்த வாரம் ஓர் கூட்டத்தில் 2001'ல் ஆட்சியை பிடிப்பார் என உளறி கொட்டினார். கருணாநிதி உயிருடன் இருந்தால் கண்டிப்பாக உடன்பிறப்புகளை அடி வெளுத்து விட்டிருப்பார். "இதுக்கு ஏன்டா கைதட்டி என் மானத்தை வாங்குகிறீர்கள்" என.

இப்படி கருணாநிதி'யின் பெயரை வைத்து கட்சியின் தலைமையை கைபற்றிய உதயநிதி இன்று கருணாநிதி'யின் செயல்பாடுகளில் 10 சதவீதத்தையாவது பின்பற்றியிருந்தால் கருணாநிதிக்கு பெருமையாக இருந்திருக்கும். ஆனால் பதவிக்கு மட்டும் கருணாநிதி பெயர் பயன்படுத்தி சுகம் காணும் தி.மு.க தலைமையை தட்டி கேட்க உடன்பிறப்புகளுக்கு முதுகெலும்பு வேண்டும் அல்லவா?

Next Story
கதிர் தொகுப்பு
Trending News