Kathir News
Begin typing your search above and press return to search.

'தடுப்பூசி தேசியவாதம்': கொரானாவிற்கு எதிரான உலகளாவிய போராட்டத்திற்கு சவால்?

தடுப்பூசி தேசியவாதம்: கொரானாவிற்கு எதிரான உலகளாவிய போராட்டத்திற்கு சவால்?

Saffron MomBy : Saffron Mom

  |  28 April 2021 1:31 AM GMT

எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி கொரானா தொற்று நோய் பரவல் தான் 21 ஆம் நூற்றாண்டில் உலகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சுகாதாரப் பேரழிவு எனக் கூறலாம். பொருளாதாரங்களை சாய்த்து, மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து, குடும்பங்களை வீழ்த்தி, மக்களின் சுதந்திரத்தை உலகின் பல பகுதிகளில் பறித்தது.

உலகளாவிய கொரானா எதிர்ப்புப் போராட்டத்தில் 'தடுப்பூசி தேசியவாதம்' எந்தளவு தடையாக இருக்கும் என்பது குறித்து பேராசிரியர் ஷாமிகா ரவி எழுதி வெளி வந்த ORF கட்டுரையின் தமிழ் சாராம்சம் இக்கட்டுரை.

உலகில் எல்லா நாடுகளும் ஒரே மாதிரியாக பாதிக்கப்படவில்லை. பணக்கார நாடுகளான அமெரிக்காவும், பல ஐரோப்பிய நாடுகளும் அதிகப்படியான தொற்றுக்களை சந்தித்தனர். அதிகப்படியான உயிரிழப்புகளையும் எதிர்கொண்டனர். இதனால் தடுப்பூசியை உருவாக்க வளர்ந்த நாடுகள் பெரிதும் முனைப்புடன் செயல்பட்டனர்.

இப்படி நாட்டையும் வாழ்வையும் அழிக்கும் முதல் உலகளாவிய தொற்றுநோய் பரவல் இது அல்ல. சொல்லப்போனால், மருத்துவ அறிவியல் சமீபகாலத்தைப் போல வளராத இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பரவிய ஸ்பானிஷ் ப்ளூ, இன்னும் கொடூரமான உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது.

முக்கியமாக, முதல் உலகப்போரின்போது ஏற்பட்டதனால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் பத்திரிக்கை சுதந்திரம் முடக்கப்பட்டது. ஸ்பெயின் நாடு இப்போரில் நடுநிலை வகித்தது, எனவே அந்நாட்டு பத்திரிகைகள் தொற்று மற்றும் உயிரிழப்புகள் குறித்து சுதந்திரமாக செய்திகளை வெளியிட்டன. இதனால்தான் இந்த தொற்றுக்கு ஸ்பானிஷ் புளு என்ற பெயர் ஏற்பட்டது.

கொரானா வைரஸ் அப்படிப்பட்ட எந்தத் தடைக்கும் உள்ளாகவில்லை. இதனால் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே உலக தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது. அரசாங்கங்களும் தடைகளையும், ஊரடங்கையும் விதித்தனர். ஆனால் இந்த தொற்றுநோய்க்கு உறுதியான ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என்றால் அது தடுப்பூசி மூலமாக மட்டுமே முடியும்.

பொதுவாக தடுப்பூசிகள் thayarikkaபல ஆண்டுகள் எடுத்து பல மருத்துவப் பரிசோதனைகளுக்கு உள்ளாகும். அதன்பிறகே பொதுமக்களுக்கு வெளியிடப்படும். ஆனால் இம்முறை கொரானா வைரஸ் தடுப்பூசி ஒரு வருடத்திற்குள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. உலக சுகாதார மையம் முதல் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு டிசம்பர் 31 2020 அன்று அனுமதியளித்தது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தயாரித்த கோவாக்ஸின் 2021 பிப்ரவரி மாதம் ஒப்புதல் பெற்றது. தற்போது வரை 82 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளின் கீழ் உள்ளன. அதற்கு முந்தைய நிலையில் 182 தடுப்பூசிகள் உள்ளன. இது உலக பொதுநலத்தில் ஒரு முக்கியமான சாதனை.

தடுப்பூசிகளை கண்டுபிடித்த பிறகு ஒரு உலகளாவிய மனிதாபிமான நிலை மாறி, வழக்கமான அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனையாக மாறியது. பணக்கார மற்றும் ஏழை நாடுகள் தடுப்பூசியை எப்படி பெறப் போகின்றன என்பதில் உள்ள சமத்துவமின்மை குறித்தும் ஆனது. பலநாடுகளில், அந்நாடுகளுக்கு உள்ளேயே மக்களிடையேயும் தடுப்பூசி கிடைப்பதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்தியது.

உலகளாவிய அளவில் சராசரியாக 100 மக்களுக்கு 6.5 பேருக்கு தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால் இதில் நாடுகள், கண்டங்களில் பெரும்பாலான வித்தியாசங்கள் உள்ளன.

உதாரணமாக இஸ்ரேல் 100 மக்களுக்கு 115 டோஸ்களை செலுத்தியுள்ளது. அமெரிக்கா 100க்கு 35 டோஸ்களும், ஐரோப்பிய ஒன்றியம் 100க்கு 15 டோஸ்களையும் செலுத்தியுள்ளது. ஆனால் ஆசிய நாடுகள் 100 பேருக்கு 4.5 டோஸ்கள் மட்டுமே செலுத்தியுள்ளன. இதுவும் இந்தியா மற்றும் சீனாவின் குறிப்பிடத்தகுந்த உற்பத்தி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் தான்.

பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளுக்கு இது குறித்த எந்த தரவும் தற்போது இல்லை. பணக்கார நாடுகள் தங்களுடைய பொருளாதார மற்றும் அரசியல் வலிமையைப் பயன்படுத்தி எவ்வளவு அதிகமாக தடுப்பூசிகளை பெற முடியுமோ அவ்வளவையும் பெற்றுக்கொண்டன.

பெரும்பாலான ஏழை நாடுகள் இத்தகைய தடுப்பூசிகளுக்காக, ஐக்கிய நாடுகள் சபையில் தடுப்பூசி கூட்டணி மற்றும் உலக சுகாதார மையத்தின் உருவாக்கப்பட்ட அமைப்புகளை சார்ந்திருக்கின்றன.

எல்லாருக்கும் எளிதில் கிடைக்க வேண்டும் என்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும் வளரும் நாடுகளில் 27 சதவிகித மக்கள் மட்டுமே தடுப்பூசிகள் பெறுவார்கள் என்று GAVIN தெரிவித்துள்ளது. அவசரகால உதவி அளித்து தடுப்பூசிகள் பெரும்பான்மையான மக்களுக்கு கிடைக்கச் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

உலகளாவிய தொற்றாக கொரானா வைரஸ் அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து, உலகளாவிய ரீதியில் தடுப்பூசி கிடைப்பதற்காக உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் அரசாங்கங்கள் தற்காலிகமாக அறிவுசார் சொத்து உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டும் ஆகிய பல பரிந்துரைகளை நிபுணர்கள் வழங்கியுள்ளனர். ஒற்றுமை மற்றும் உலகளாவிய ஒத்துழைப்புக்கு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் பணக்கார நாடுகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

பல பார்வையாளர்கள், இப்படி வளர்ந்து வரும் சூழ்நிலைகளை 1990களில் வளர்ந்த எச்ஐவி/எய்ட்ஸ் உடன் ஒப்புதல்படுத்திப் பேசி உள்ளார்கள். உலக சுகாதார மையம், கொரானா வைரஸ் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை உலகளாவிய தொற்றுகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்ததாக அறிவித்தாலும், இத்தகைய டோஸ்களை பயன்படுத்திய 75 சதவிகிதத்தினர் பணக்கார நாடுகளில் தான் இருக்கிறார்கள்.

2021ல் பணக்கார நாடுகள் தடுப்பூசி செலுத்தி முடித்திருந்தாலும், ஏழை நாடுகளுக்கு அத்தகைய வாய்ப்பு கிடைத்திருக்காது. இதன் காரணமாக நோய் நோய் எதிர்ப்பு சக்தி பணக்கார நாடுகளுக்கு கிடைத்திருந்தாலும் ஏழை நாடுகள் மறுபடியும் தொற்று, பொருளாதார பாதிப்பு ஆகியவற்றை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

தடுப்பூசி தேசியவாதம் என்பது, தடுப்பூசிகளை முன்கூட்டியே ஆர்டர் செய்து, அரசாங்கங்கள் மருந்து உற்பத்தியாளர்களிடம் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதாகும். இதனால் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பது தடுக்கப்படுகிறது.

உற்பத்தியாளர்களிடம் அரசாங்கங்கள் அவர்கள் தடுப்பூசிகளுக்கான உலகளாவிய சந்தை பங்குகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் மறைமுகமாக அல்லது வெளிப்படையான ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் போது தடுப்பூசி தேசியவாதம் உருவாகிறது .

உதாரணமாக சமீபத்தில் சீனா, பயணிகளுக்காக புதிய விசா கொள்கையை அறிவித்தது .அதாவது வரும் பயணிகள், சினோவாக் சீனக் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். இது பரவலான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். ஏனெனில் சீனா தயாரித்த எந்த தடுப்பூசியும் இதுவரை WHO அங்கீகரிக்கவில்லை.

பணக்கார நாடுகள், தடுப்பூசிகள் பரிசோதனைகளில் இருந்தபோதே 2 மில்லியனுக்கும் மேலான டோஸ்களை வாங்கியதாகக் கூறப்படுகிறது. பலநாடுகள் 'ஒரு குடிமகனுக்கு' பல டோஸ்களை முன்கூட்டியே ஆர்டர் செய்துள்ளனர்.

அரசாங்கங்கள் தற்பொழுது தடுப்பூசிகளின் திறன் குறித்தும், பக்க விளைவுகள் குறித்தும் அதிக தகவல்களை கொண்டு இருப்பதால் தற்பொழுது தங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ற தடுப்பூசி திட்டங்களை போடமுடியும்.

தடுப்பூசிகளை பெரும்பாலும் பதுக்கி வைத்து அவற்றை பகிராமல் இருப்பது மிகவும் சுயநலமாக விஷயமாகும். உதாரணமாக அமெரிக்கா ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பல மில்லியன் டோஸ்களை பதுக்கி வைத்துள்ளது.

ஆனால் அதைப் பயன்படுத்தவும் அங்கீகரிக்கவில்லை. பல நாடுகள் உதாரணமாக மெக்ஸிகோ போன்ற அங்கீகரித்த நாடுகள் அதைக் கேட்டுக் கொண்டுள்ளன. ஆனால் கனடாவிற்கும் மெக்சிகோவிற்கும் 4 மில்லியன் டோஸ்களை அனுப்புவோம் என்று அமெரிக்க அறிவித்திருந்தாலும், அவசரகால ஒப்புதல் இல்லாமல் பதுக்கி வைத்துள்ளனர்.

இப்படி தடுப்பூசிகளை அமெரிக்கா பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது, பல லத்தீன் அமெரிக்க நாடுகளை ரஷ்யாவுடன் சீனாவுடனும் ஒப்பந்தம் செய்ய வழிவகுக்கிறது.

இதுகுறித்து உலக சுகாதார மையம் கவலை தெரிவித்துள்ளது. ஏன், மருந்து நிறுவனங்கள் கூட இந்த தடுப்பூசி தேசியவாதத்திற்கு கவலை தெரிவித்துள்ளனர். சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவால, இந்த தடுப்பூசி தேசியவாதம், ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு 2 பில்லியன் டோஸ்களை அனுப்பும் உலக சுகாதார மையத்தின் முயற்சிகளை தடுக்கும் என்று தெரிவித்தார்.

பணக்கார நாடுகள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றாலும், பலவித பிறழ்வுகள், புதிய மாறுபாடுகள் காரணமாக மற்ற நாடுகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது, பணக்கார நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

உலக சுகாதார மையம் மறுபடியும் மறுபடியும் தடுப்பூசி பெறுவதில் இருக்கும் தடைகள் புதிய மாறுபாடுகளை வரவிடாமல் தடுக்கும் போராட்டத்திற்கு தடை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளது. அமெரிக்க நிர்வாகம் சில மூலப் பொருட்களை ஏற்றுமதி செய்வதை தடை விதித்ததால், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்புகளில் காலதாமதத்தை ஏற்படுத்தும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசிகள் உலகளாவிய ரீதியில் செல்வாக்கை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ரஷ்யா மற்றும் சீனா, கிழக்கு ஐரோப்பா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் தாங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை இறக்கியுள்ளன.

உலக சுகாதார மையத்தில் இருந்து இந்த தடுப்பூசிகள் எந்தவித அங்கீகாரத்தையும் பெறவில்லை என்றாலும், இருநாடுகளும் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் ஊடக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

மிகவும் விரைவாக தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது என்பதால் சில நாடுகள் தங்களுடைய சொந்த நாடுகளில் பரிசோதனைகளை நடத்த ஆரம்பித்தன. உதாரணமாக துருக்கியில் நடத்தப்பட்ட சோதனைகள் சீனாவின் சினோவாக் தடுப்பூசிக்கு 83 சதவிகித திறனை காட்டினாலும், பிரேசிலில் நடத்திய பரிசோதனைகள் 54 சதவிகித திறனைக் காட்டி உள்ளன. ஆனால் இவை சினோவாக்கின் 90 சதவிகிதம் திறன் என்ற கூற்றை விட மிகவும் குறைந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இங்கிலாந்துக்கும் பதற்றங்கள் நிலவி வருகின்றன. தடுப்பூசி விலைகளிலும் வித்தியாசம் இருக்கிறது.

தடுப்பூசிகளினால் உலகளாவிய ரீதியில் பதற்றங்கள் அதிகரித்து வந்தாலும், இந்தியா இதில் ஒரு முக்கிய பங்காக உருவெடுத்துள்ளது. உலகளாவிய சமூகத்திற்கு கொரானா வைரஸ் தடுப்பூசி உற்பத்தி செய்யும் மற்றும் வழங்கும் ஒரு பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

அண்டை நாடுகள் உட்பட 71 நாடுகளுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா கிட்டத்தட்ட 60 மில்லியன் டோஸ்களை வழங்கியுள்ளது. 2021ல் நாடு முழுவதும் மூன்று முப்பது கோடி மக்களுக்கு தடுப்பூசி போட இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியா தற்போது இரண்டு தடுப்பூசிகளை பெருமளவில் உற்பத்தி செய்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் உள்நாட்டிலேயே உருவாக்கிய கோவாக்ஸின் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா இங்கு கோவிஷீல்டு என அறியப்படுகிறது. உலகளாவிய ரீதியில் அதிகம் செலுத்தப்படும் தடுப்பூசிகள் இதில் ஒன்றாகும்.

இந்தியா, மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் அதிகப்படியான மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்துவது பற்றிய தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்கான பல முயற்சிகளில் ஈடுபடுகிறது. பங்களாதேஷ், பிரேசில், மியான்மர், ஓமன் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் தொடர் பயிற்சி முகாம்களை அரசாங்கம் நடத்தி வருகிறது.

உலகெங்கிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாடுகளிலுள்ள அரசாங்கங்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மூலம் உண்மையான அறிவும் மற்றும் தொழில்நுட்பத்தில் சரியான நேரத்தில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றாலும், தடுப்பூசிகள் எல்லோருக்கும் கிடைப்பதற்கான புதிய தடைகளும் இதனாலேயே உருவாகின்றன.

தடுப்பூசி உற்பத்தித்திறனை விரிவுபடுத்தி எல்லோருக்கும் எளிதில் கிடைக்கச் செய்வது தற்போது உள்ள மிகப்பெரிய சவாலாகும். இதில் இந்தியாவின் மாதிரியை பணக்கார நாடுகள் பின்பற்றி நாடுகளுக்கு உதவி செய்ய முன்வருமா என்பது பெரிய கேள்விக்குறி தான்.

Courtesy: ORF

Next Story
கதிர் தொகுப்பு
Trending News