மக்களுக்கான எம்.எல்.ஏ'வாக வலம் வரும் வானதி சீனிவாசன் - தென்னை சாகுபடி விவசாயிகளின் துயர் துடைத்தார்
கொப்பரை தேங்காய் விலையை உயர்த்த உயர்த்தவும், கொள்முதலை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கவும் விவசாயிகளுக்காக பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்
By : Mohan Raj
கொப்பரை தேங்காய் விலையை உயர்த்த உயர்த்தவும், கொள்முதலை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கவும் விவசாயிகளுக்காக பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மத்திய அமைச்சர்களை சந்தித்து வேண்டுகோள் விடுத்து நடவடிக்கை எடுத்தது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
கோவை தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் கட்சிப் பணிகளையும், களப்பணிகளையும் சம அளவில் செய்து வருவதால் மக்களின் பாராட்டை பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் தற்பொழுது தென்னை மர தேங்காய் சாகுபடி விவசாயிகளுக்காக மத்திய அரசை சந்தித்து அவர்களின் விளை பொருளுக்கு சரியான விலை அளிக்கவும், அவர்களிடம் கொள்முதலின் கால அவகாசத்தை நீடிக்கவும் கடிதம் அளித்தது மட்டுமின்றி அதற்கான உரிய நடவடிக்கையை எடுக்க வழி செய்துள்ளார்.
இந்த கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடர்பாக நேற்று மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் அவர்களை வானதி சீனிவாசன் அவர்கள் சந்தித்தார்.
சந்திப்பின்போது விவசாயிகளின் முதல் கோரிக்கையாக கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை ரூபாய்.150 ஆக உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதே சமயம் மூன்று மாதங்களாக கொப்பரை தேங்காய் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் இதனால் விவசாயிகள் செலவினங்களை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.
மேலும் 6 மாதங்களுக்கு அரசு கொப்பரை தேங்காய் கொள்முதலை தொடர வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்தில் தற்போது ஏக்கருக்கு 1500 கிலோ சாகுபடி செய்யப்படுவதால் கொப்பரை கொள்முதல் ஏக்கருக்கு 216 கிலோவில் 800 கிலோவாக உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கையை முன் வைத்தார்.
மேலும் கொள்முதல் அளவு அதிகரிப்பது விவசாயிகளின் விவசாய செலவை குறைக்க உதவும் இது விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் அது நமது பிரதமரின் குறிக்கோள் எனவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.
இந்த கோரிக்கையை ஏற்று வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் அவர்கள் கொப்பரை கொள்முதலை மீண்டும் இரண்டு மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்ய உத்தரவிடுவதாக உடனடியாக அறிவித்தார். மேலும் கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச ஆதரவிலையை உயர்த்த பரிசீலிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு மற்றொரு விவசாயிகள் நலன் சார்ந்த சந்திப்பாக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் தென்னை நார் ஏற்றுமதி மற்றும் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களையும் சந்தித்துள்ளார்.
பியூஸ் கோயல் அவர்களை சந்தித்த போது எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் விடுத்த வேண்டுகோளானது, 'தமிழ்நாட்டின் தென்னை விவசாயிகள் தென்னை நாரை ஒரு டன் ஒன்றுக்கு 260 டாலருக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். அதன் விலை 160 டாலராக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் சிரமப்படுகின்றனர், இது அவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது.
மேலும் அவர்கள் ஏற்றுமதி செய்யும் தென்னை நாருக்கு இந்திய ரூபாயில் பணம் செலுத்தப்படுவதாகவும், அந்த பணமும் அவர்களுக்கு தாமதமாக கிடைப்பதாகவும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலின் கவனத்திற்கு அக்கடிதம் மூலமாக எடுத்துச் சென்றார்.
வானதி சீனிவாசன் அவர்களின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தென்னை நார் ஏற்றுமதி மற்றும் விலை உயர்வுக்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக மத்திய அரசின் சார்பில் குழு ஒன்றை அனுப்பி வைத்து உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது வானதி சீனிவாசனுடன் அ.தி.மு.க'வின் எம்.எல்.ஏ'களான அமுல் கந்தசாமி மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர்கள் உடனிருந்தனர்.
ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் கட்சி வேலைகள் செய்வதிலும், டெண்டர் விடுவதிலும், மொய் விருந்து நடத்துவதிலும் குறிக்கோளாக இருக்கும் நிலையில் விவசாயிகளுக்காக களம் இறங்கி அவர்களின் விளைபொருளுக்கான சரியான விலை மற்றும் ஏற்றுமதி செய்ய இலகுவான சூழல் அமைய வேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மத்திய அமைச்சர்களை சந்தித்து வேண்டுகோள் விடுத்து அதை வெற்றிகரமாக முடித்துள்ளது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.