'என்ன ஒரே டால்டா வாடை அடிக்குது, நெய் இனிப்பு'ன்னு சொல்லி டால்டா ஊத்தி விக்குறாங்களே' - அம்பலமாகும் ஆவின் இனிப்பு தயாரிப்பு தில்லாலங்கடிகள்
இந்த ஆண்டு ஆவின் பொருட்கள் தரம் குறைவாக இருப்பதால் நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
By : Mohan Raj
இந்த ஆண்டு ஆவின் பொருட்கள் தரம் குறைவாக இருப்பதால் நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டால்டா கலந்து ஆவின் இனிப்புகள் தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் சுவை குறைவால் நுகர்வோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆவின் வாயிலாக பால் மற்றும் 200 வகையான மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களும் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அவை தற்போது மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் என அனைத்து இடங்களில் கிடைக்கின்றன. ஆவின் இனிப்பு வகைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு காரணம் ஆவின் இனிப்பு வகைகள் நன்றாக தயாரிக்கப்படுவதுடன், உண்பதற்கு ருசியாகவும் இருக்கும்.
தீபாவளி பண்டிகை நேரத்தில் ஆவின் சார்பில் சிறப்பு வகை இனிப்புகள் தயாரித்து வெளியிடப்படும். நெய் சொட்ட சொட்ட வாசம் மற்றும் சுவை அதிகம் இருக்கும் ஆவின் இனிப்புகளை வாங்கி ருசிக்கவும், உறவினர்கள், நண்பர்களுக்கு பரிசாக வழங்கவும், பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக வழங்க பலரும் கிலோ கணக்கில் பலரும் போட்டி போட்டுக் கொண்டு வாங்குபவர். ஆயுத பூஜையில் இருந்து தீபாவளி பண்டிகை வரை இந்த விற்பனை களைகட்டும்.
இந்நிலையில் ஆயுதபூஜைக்காக காஜூ கத்லி, காஜல் ரோல், பிஸ்தா ரோல், நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா, கருப்பட்டி அல்வா போன்ற இனிப்புகள் விற்பனைக்கு வந்தன. ஆனால் இவற்றில் நெய்யின் நறுமணம் மற்றும் சுவை பெரிதாக இல்லாத காரணத்தினால் ஆவின் இனிப்புகள் வாங்கிய பலரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பல இனிப்புகளில் டால்டா வாடை அதிகம் இருப்பதாக பலரும் புகார் அளித்தனர். ஆவின் பால் கொள்முதல் பாதிக்கப்பட்டதால் நெய் மற்றும் வெண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது, எனவே நெய்க்கு பதிலாக வனஸ்பதி எனப்படும் டால்டாவை அதிகமாக பயன்படுத்தி ஆவின் இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஆவின் துறையை நிர்வகிக்க இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர், ஆனால் இவர்கள் கண்டு கொள்ளாமல் நேரடியாக கீழ்மட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வந்ததும், இந்த ஆவின் துறையின் முக்கிய புள்ளியும் அவரது மகனும் ஆவின் இனிப்பு பொருட்களை தரத்தை வெகுவாக குறைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதே நிலை நீடித்தால் தீபாவளி ஆவின் இனிப்புகள் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும்.
ஆயுத பூஜை முதல் விற்பனையாகி வரும் ஆவி இனிப்புகள் தர பரிசோதனைக்கு அனுப்பினால் அந்த டால்டா கலந்துள்ளது என்ற முடிவுகள் உறுதியாக வாய்ப்புள்ளது, மேலும் ஆவின் நிறுவனம் மோசமாக இனிப்பு தயாரித்ததாக அம்பலமாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் டால்டா கடந்த இனிப்பு வகைகளை சாப்பிடுவதால் இதய பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆவின் இனிப்புகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் தர ஆய்வுக்கு உட்படுத்திய அதில் டால்டா கலக்கவில்லை என்பதை பொதுமக்களுக்கு ஆவின் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆவின் தீபாவளி சிறப்புகளை இணைப்புகள் நேரடி விற்பனை நிலையம் மட்டுமின்றி தனியார் பாலகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆயுத பூஜையின் போது உற்பத்தி செய்த இனிப்புகள் விற்பனை ஆகாததால் அவற்றை நேரடியாக எடுத்துச்சென்று கட்டாயப்படுத்தி விற்பனை செய்ய ஆவின் தனியார் பாலகங்களுக்கு அதிகாரிகள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் ஒவ்வொரு பாலகங்களுக்கும் பத்தாயிரம் ரூபாய் முதல் 15,000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் முக்கிய புள்ளிக்கு 10 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அரசு அமைதி காப்பது ஆவின் மீதான நம்பகத்தன்மையை கேள்வி எழுப்புகிறது என நுகர்வோர் கருத்து தெரிவிக்கின்றனர்.