Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் கலைக்கப்பட்ட நேபாள பாராளுமன்றம் - பின்னணி என்ன?

மீண்டும் கலைக்கப்பட்ட நேபாள பாராளுமன்றம் - பின்னணி என்ன?
X

Saffron MomBy : Saffron Mom

  |  2 Jun 2021 3:46 AM GMT

கடந்த வாரத்தில் மே 21-ஆம் தேதி, நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பந்தாரி அந்நாட்டு பிரதமர் சர்மா ஓலியின் பரிந்துரையின் பேரில் பாராளுமன்றத்தை இரண்டாவது முறையாக கலைத்தார். ஆட்சி நிறைவடைய இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கும் நேரத்தில் வரும் நவம்பர் 12 மற்றும் 19-ஆம் தேதி இடைத்தேர்தல்கள் நடத்தப்பட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

இந்த முடிவு நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 66A கீழ் எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஷர்மா ஒலி தன்னுடைய பெரும்பான்மை பலத்தை பாராளுமன்றத்தில் நிரூபிக்க தவறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் ஓலி தான் பாராளுமன்றத்தைக் கலைக்கப் பரிந்துரை செய்துள்ளார்.

தன்னுடைய கட்சிக்குள்ளேயே உள்ள பிரிவுகளும், எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தை எளிதாக நடத்த ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதை காரணமாக ஓலி தெரிவித்திருக்கிறார்.

டிசம்பர் 20, 2020-ல் முதல்முறையாக நேபாள பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஆனால் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை திரும்பக் கொண்டு வந்தது. அப்போதும் பிரதமர் ஓலியின் பரிந்துரையின் பேரிலேயே ஆட்சி கலைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் மே 21-ஆம் தேதி பிரதமர் ஓலி தனக்கு 153 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்தார். அவருடைய கட்சியை சேர்ந்த 127 எம்பிக்களும், ஜனதா சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த 32 எம்பிக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக தெரிவித்திருந்தார்.

மற்றொருபுறம் நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பஹதூர் தியூபா தனக்கு 149 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாக கூறி ஒரு லிஸ்ட் உடன் வந்தார். அதில் அவருடைய கட்சியை சேர்ந்த 61 MP க்களும், மாவோயிஸ்ட் சென்டர் என்ற கட்சியை சேர்ந்த 48 MP -க்களும், 13 ஜனதா சமாஜ்வாதி கட்சியின் உபேந்திர யாதவ் பிரிவினை சேர்ந்தவர்களும் அடக்கம்.

271 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 136 ஓட்டுகள் தான் பெரும்பான்மையை நிரூபிக்க தேவை. ஆனால் ஓலி தனக்கு ஆதரவளிப்பதாகக் கூறும் எம்பிக்களின் எண்ணிக்கையும், நேபாள காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று கூறும் எம்பிக்களின் எண்ணிக்கையும் கூட்டினால் 302 வருகிறது. இது ஒட்டுமொத்த பாராளுமன்ற எம்பி களின் எண்ணிக்கையையே தாண்டி விட்டது. இதையெல்லாம் காரணமாக காட்டி நேபாள அதிபர் பித்யாதேவி பந்தாரி பாராளுமன்றத்தை கலைத்து, தேர்தல்களை அறிவித்திருக்கிறார்.

இது குறித்து இந்தியா கருத்து தெரிவிக்கையில், இதை நேபாளத்தின் உள்நாட்டு விவகாரம் என்று தெளிவுபடுத்தியுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேபாளத்தின் உள்நாட்டு சட்டங்கள் மற்றும் ஜனநாயக வழிகளின் படி நடக்கும் நேபாளத்தின் உள்நாட்டு பிரச்சினைகள் இவை என தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக நேபாள காங்கிரஸ் மாணவர் பிரிவு அங்கங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற எதிர்க்கட்சிகளின் போராட்டங்களும் காத்மண்டு உள்ளிட்ட மற்ற பகுதிகளில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

நேபாள காங்கிரசின் தலைவரை, பிரதமர் ஆக்காமல் பாராளுமன்றத்தை கலைத்ததற்குஎதிராக 146 எம்பிகள் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். பிரதமர் ஓலிக்கு ஆதரவாகவும் சில மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இம்முறை உச்ச நீதிமன்றம், பாராளுமன்றத்தை கலைத்ததற்கு என்ன தீர்ப்பு வழங்கும் என்பதை அறிய அனைவரும் ஆர்வமுடன் உள்ளனர்.

2017 இன் தேர்தல்களின் பொழுது 225 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவை கொண்டிருந்தார் பிரதமர் ஓலி. மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தாவின் ஆதரவும் அவருக்கு இருந்தது.

அவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட ஒரு ஒப்புதலின்படி முதல் இரண்டரை வருடங்களில் ஓலி பிரதமராகவும், 2வது இரண்டரை வருடங்களில் பிரசந்தா பிரதமராகவும் இருக்கும்படி பேசிக் கொள்ளப்பட்டது. இதனடிப்படையில்தான் இரண்டு தலைவர்களும் தங்களுடைய கட்சியையே இணைத்தனர். CPNL மற்றும் நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரு கட்சிகளுமே 2018-ல் ஒன்றிணைக்கப்பட்டு புதிதாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. அதற்கு அடுத்ததாக பிரதமர் ஓலிக்கும் பிரசந்தாவுக்கும் இடையிலான போட்டி உத்வேகம் அடைந்து பிரசந்தா பிரதமராக அனுமதிக்கப்படவில்லை.

இந்த வருடம் மார்ச் 7-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் இரண்டு கட்சிகளையும் உடைத்தது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்களும் கூட்டணியும் முறிந்தது.

நேபாள காங்கிரஸ் தலைவர் சேர் பகதூர் தியூபா, பல எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்களின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க உரிமை கோரியது பிரதமர் ஓலிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஜனதா சம்ஜவாதி கட்சியில் பல பிரிவுகள் உண்டாகி ஒரு சிலர் பிரதமர் ஓலிக்கும், பலர் நேபாள காங்கிரசிற்கும் ஆதரவளிப்பது ஒரு முக்கியமான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இதனால் அந்தக் கட்சியும் உடையும் தருவாயில் உள்ளது. நேபாளத்தில் கொரானா வைரஸ் பரவலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரத்தில் இப்படி அதிகாரத்திற்காகவும் பதவிகளுக்காகவும் பிரச்சனைகள் நடந்து வருகின்றன.

தற்போது நடக்கவிருக்கும் தேர்தலுக்காக அரசியல் பேரணிகளும் மற்ற பல நிகழ்வுகளும் நடக்கும் பட்சத்தில் கொரானா வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது

நேபாள உச்ச நீதிமன்றத்தின் முடிவை அனைவரும் எதிர்நோக்கி காத்துள்ளனர். மறுபடியும் பாராளுமன்றம் புதுப்பிக்கப்படுமா அல்லது அந்நாடு புதிய பிரதமரை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News