Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்நாட்டில் உருவான வாட்ஸ் ஆப் மாற்று - Zohoவின் 'அரட்டை' செயலி!

தமிழ்நாட்டில் உருவான வாட்ஸ் ஆப் மாற்று - Zohoவின் 'அரட்டை' செயலி!

தமிழ்நாட்டில் உருவான வாட்ஸ் ஆப் மாற்று - Zohoவின் அரட்டை செயலி!

Saffron MomBy : Saffron Mom

  |  11 Jan 2021 12:35 PM GMT

வாட்ஸ்அப் ஒரு இன்றியமையாத சாட்டிங் செயலியாக உலகம் முழுவதும் மாறி விட்டது. ஆனால் பேஸ்புக் நிறுவனத்தினால் வாங்கப்பட்டதிலிருந்து அதன் பிரைவசி குறித்த சந்தேகங்களும் சர்ச்சைகளும் அவ்வப்போது எழுந்து வந்தன.

ஃபேஸ்புக், வாடிக்கையாளர்களின் நடத்தையை ஆராய்ந்து அதற்கு ஏற்ற மாதிரி விளம்பரங்கள் கொடுத்து வருவாய் சம்பாதிப்பதை மையமாகக் கொண்டிருந்தது. அவர்களுக்கு இன்னும் அதிக டேட்டா(தரவு), விவரங்கள் வாட்ஸ் அப்பில் இருந்து எடுக்கப்படும் என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில், அது உண்மையில் அப்படித்தான் எடுக்கப்படும் என்று வாட்ஸ் அப்பில் புதிய கொள்கை அறிவிக்கப்பட இருக்கிறது.

வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் இக்கொள்கை நடைமுறைக்கு வருகிறது. இதை ஒப்புக்கொள்ளாத அனைவரும் இந்த செயலியை உபயோகிக்க முடியாது என்று அறியப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கணக்குகள் ட்விட்டர், ஃபேஸ்புக், ஸ்னாப்ஷாட், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ஒரே சமயத்தில் நிரந்தரமாக முடக்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதங்களுக்கு உள்ளாகி வருகிறது. அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள், தற்போது அமெரிக்க அதிபர் மீதே இந்த அளவுக்கு அதிகாரம் செலுத்தும் வகையில் இருக்கும் பட்சத்தில் இந்தியாவின் சொந்த சமூகவலைதளங்கள், செயலிகள் ஆகியவை வருங்கால நலனுக்காக உருவாக்கப்பட வேண்டும் என்ற குரலும் எழுந்து வந்தது.

இந்நிலையில் சென்னையை அடித்தளமாகக் கொண்ட ZOHO தொழில்நுட்ப நிறுவனம் வாட்ஸ் அப்பிறகு மாற்றாக ஒரு சாட்டிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அரட்டை என்று தமிழில் பெயரிடப்பட்ட அதனுடைய லோகோவில் 'அ' என்ற எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.

கூகிள் மற்றும் ஆப்பிள் ப்ளேஸ்டோர்களில் வெளியான சில நாட்களிலேயே சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை பெற்றுள்ள இந்த செயலி அவர்களுடைய சொந்த ஊழியர்களின் மத்தியில் சில வாரங்களுக்கு முன்னால் அறிமுகப்படுத்தப்பட்டது.

முறையாக இந்த ஆப் இன்னும் சில வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என Zohoவின் CEO ஸ்ரீதர் வெம்பு ட்விட்டரில் அறிவித்துள்ளார். தென்காசியில் தற்போது வசிக்கும் தமிழராவார்.

உலகளாவிய சாட்டிங் செயலிகளுக்கு ஒரு மாற்றாக ஒரு இந்தியாவில் உருவாக்கப்படும் செயலியாக இது அறிமுகப்படுத்தப்படும் என்று அறியப்படுகிறது.

இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா விற்கு பேட்டி அளித்த zoho வின் மார்க்கெட்டிங் துணை தலைவர் பிரவால் சிங் கூறுகையில், "ஒரு நிறுவனமாக நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் பிரைவசியை மதிக்கிறோம். மூன்றாவது கட்சிகளுடன் எந்தவிதமான தரவுகளையும் நாங்கள் பகிர்ந்து கொள்ளவில்லை. விளம்பரம் கொடுத்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் எண்ணமும் இல்லை. இந்த தரவுகள் இந்தியாவிலேயே சேமிக்கப்படும்" என்றும் தெரிவித்தார். இந்த செயலி முற்றிலும் இலவசம் என்றும் தெரிவித்தார்.

பிரைவசி கொள்கையின்படி இந்த செயலி வாடிக்கையாளரின் பெயர் தொலைபேசி எண், நாடு, புகைப்படம் (optional) ஆகியவற்றை கேட்கும். இந்த தரவுகள் வாடிக்கையாளரின் தனிப்பட்ட ஒப்புதல் இல்லாமல் வெளிப்படுத்தப்பட அல்லது பகிர்ந்து கொள்ளப்பட மாட்டாது.

மெஸேஜிங் செயலிக்கு உண்டான அத்தனை உபயோகமான அம்சங்களும் இதில் இருக்கும். ஒரு ஒரு குரூப் சாட்டில் ஆயிரம் நபர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம்.

வீடியோ கால்களில் 6 பேர் வரை சேர்த்துக் கொள்ளப்படலாம் என்றும் அறியப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு தான் செய்யப்பட்டிருக்கும் இந்த செயலி இன்னும் பல புதிய அம்சங்களை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு தொழில் சாப்ட்வேர் நிறுவனமான Zoho, வாடிக்கையாளர்களை மையமாக கொண்டு வெளியிட்டுள்ள செயலிகளில் அரட்டையும் ஒன்றாகும். 'அரட்டை' வெற்றி பெற கதிர் செய்திகளின் வாழ்த்துக்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News