கொரனா வைரஸ் எங்கிருந்து தான் வந்தது? நீடிக்கும் குழப்பங்களும், சர்ச்சைகளும்!
By : Saffron Mom
Covid-19 அல்லது கொரனா வைரஸ் என பொதுவாக அழைக்கப்படும் SARS-CoV-2 வைரஸ் உண்மையிலேயே எங்கிருந்து வந்தது?அது சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஒரு ஆய்வகத்தில் இருந்து 'தற்செயலாக' கசிந்ததா? அல்லது ஏதோ ஒரு விலங்கிடம் இருந்து மனிதர்களுக்கு 'உயிரியல் ரீதியாக' பரவியதா என்பது யாருக்கும் தெரியாது.
ஆனால் கடந்த வருடத்தில், அது ஒரு ஆய்வகத்தில் இருந்து தான் 'கசிந்தது' சிலரிடம் மட்டுமே ஒரு ஓரமாக (fringe) இருந்த கருத்து தற்பொழுது பலருக்கும் சாத்தியமானதாக தோன்றத் தொடங்கிவிட்டது.
கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கொரானா வைரஸ் தொற்று எங்கிருந்து ஆரம்பித்தது? அதன் மூலம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அவருடைய அறிக்கையில், அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனங்கள் இது குறித்து போதுமான ஆதாரங்களை கொண்டிருக்கவில்லை என்றும் இது ஒரு ஆய்வகத்தில் இருந்து கசிந்த 'விபத்தாக' இருக்கலாம் என்று கூட கருத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அடுத்த 90 நாட்களுக்குள் ஒரு உறுதியான முடிவை பெற, இதுகுறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
உண்மையில் கொரானா வைரஸ் ஆய்வகத்தில் இருந்து தான் கசிந்தது என்று உறுதி செய்யப்பட்டால், சீனாவிற்கும் உலக நாடுகளுடனான அதன் தொடர்புகளுக்கும் அது மிகப் பெரும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும். மிகப்பெரிய பேரழிவை சீனாவிற்கு கொண்டு வந்து சேர்க்கும்.
ஆனால் அது நடப்பது மிகவும் அரிதான ஒன்றுதான். ஏனெனில் இத்தகைய விபத்து ஏற்பட்டது என்று சீனா எப்போதும் ஒப்புக் கொள்ள போவதில்லை. அதனுடைய கூட்டுறவு இல்லாமல் இதனை சரி பார்ப்பது இயலாத ஒன்று.
மார்ச் 30-இல் சீனாவும் உலக சுகாதார அமைப்பும் (WHO) இணைந்து நடத்திய விசாரணையின் முடிவுகளில், ஆய்வகத்தில் இருந்து கொரானா வைரஸ் கசிந்தது என்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவியதற்கு தான் வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிவித்தனர். ஆனால் இது எப்படி நடந்தது என்று குறித்து அவ்வளவாக விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
குறிப்பாக WHO தலைவர் டெட்ராஸை பொறுத்தவரை, மூல தரவுகளை பெறுவதற்கு உலக சுகாதார அமைப்பின் குழு பல்வேறு தடங்கல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 'இந்த மதிப்பீடு போதுமான அளவு விரிவானது என்று நான் நம்பவில்லை. மேலும் வலுவான முடிவுகளை அடைய தரவுகள் மற்றும் ஆய்வுகள் தேவை' என்றார். சீனாவிடம் மிகவும் மென்மையாக நடந்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கடந்த மார்ச் முதல் தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் வேளையில், அவருடைய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியதில் ஆச்சரியமில்லை.
அதே நாளன்று அமெரிக்காவும், ஜப்பான், இங்கிலாந்து, கனடா, டென்மார்க் ,நார்வே ஆகிய நாடுகளை உள்ளடக்கிய 13 நாடுகள் இணைந்து ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் உலக சுகாதார மையமும் சீனாவும் இணைந்து நடத்திய ஆய்வை விமர்சனம் செய்தும் செய்திருந்தன. முழுமையான தரவு மற்றும் மாதிரிகள் குறைவாக இருந்ததாகவும், இந்த அறிக்கையை வெளிப்படையாகவும் சுதந்தரமாகவும் எடை போட தேவைகள் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தனர்.
ஐரோப்பிய ஒன்றியம் (EU) இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அறிக்கை 'உதவிகரமான முதல்படி' என்றும், உலக சுகாதார மையம் தொடர்ந்து தகுந்த நேரத்தில் அனைத்து மனித, விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் தரவுகளை பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
சீனாவிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றால் இந்த ஆலோசனைகளை அவர்கள் பின்பற்றியிருக்க வேண்டும். ஆனால் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜிங் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுடன் உரையாடுகையில், அமெரிக்கா வெளிப்படையான ஆய்வுகள் வேண்டும் என்று கூறினால், முதலில் அவர்களுடைய உயிரியல் ஆய்வகங்களை அனைவருக்கும் திறந்து விடவேண்டும் என்றும், பல அறிக்கைகள் ஆய்வுகள் கொரானா வைரஸ் 2019 இரண்டாம் பாதியில் உலகின் பல இடங்களில் தென்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
அதாவது, சீனாவிடம் இருந்து தான் தோன்றியது என்பதை தாண்டி, உலகில் பரவிய கொரனா வைரஸுக்கு தாங்களும் பாதிக்கப்பட்டவர்கள் (victims) தான் என்று சீனா காட்டிக் கொள்கிறது.
கொரனா வைரஸ் எங்கிருந்து வேண்டுமானாலும் வந்திருக்கலாம் என்ற கருத்தை சீனா தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். அக்டோபர் 2019 இல் வுஹானில் நடைபெற்ற ஏழாவது உலக ராணுவ விளையாட்டுகளில் கலந்து கொண்ட அமெரிக்க விளையாட்டு வீரர்களிடமிருந்தே வந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
சொல்லப்போனால் சீனாவும் உலக சுகாதார மையமும் இணைந்து தயாரித்த ஆய்வறிக்கையில் இந்த கேள்விகளும் ஆராயப்பட்டு இருந்தன. ஆனால் கொரானா வைரஸை போன்ற எதுவும் இந்த விளையாட்டுக்களின் பொழுது செயல்பட்ட கிளினிக்குகளில் தென்படவில்லை என்று முடிவுக்கு வந்துள்ளனர்.
டிரம்ப் நிர்வாகம் இந்த விவகாரத்தை சீனாவை தாக்குவதற்கு பயன்படுத்தியது. தற்பொழுது பிடென் அரசாங்கம் இந்த கையில் எடுத்திருப்பது அதே அரசியல் காரணங்களுக்காக கூட இருக்கலாம்.
ஆனால் பிடன் பதவியேற்பதற்கு முந்தைய நாளன்று, டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுத்துறை செயலாளர் பாம்பியோ வகைப்படுத்தப்பட்ட புலனாய்வு அறிக்கைகளை சமர்ப்பித்தார். அதில் 2019 இலையுதிர் காலத்தின் பொழுது வுஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியில் ஏற்பட்ட நோய்கள், இதே ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்ட ஆய்வுகளின் தன்மை, (ஆபத்தான வைரஸ்களை உருவாக்குவதற்கு குறித்த ஆய்வும் உள்ளடக்கம்) நான்காவது, சீன ராணுவத்திற்கான ரகசியமான ஆராய்ச்சிகளும் இந்த ஆய்வகத்தில் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
2020-இல் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் வெளியேறி இருக்கலாம் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை என்று கூறப்பட்டாலும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வந்ததற்கும் அவ்வளவாக ஆதாரங்கள் இல்லை.
வுகான் மாகாணத்தில் அமைந்திருக்கும் இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் கொரானா வைரஸ் குறித்த ஆய்வுகளுக்கு, அமெரிக்கா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் அமைப்பு நிதி வழங்குகிறது என்பதும் சர்ச்சைக்குரிய ஒன்றாக இருக்கிறது.
சீனா இது குறித்து எந்த ஒத்துழைப்பையும் வழங்கப்பட போவதில்லை. எதேச்சையாக வைரஸ் வெளியேறி இருந்தால் சீனா மறுபடியும் அதுபோல நடக்காமல் இருக்க தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து இருப்பார்கள் என்று நம்புவதுதான் ஒரே வழி.
இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்கு வருங்காலத்தில் தடை விதிப்பதும் நல்ல முடிவாக இருக்கும். சீனா ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தங்களை கொடுக்கலாம். எதிர்பாராதவிதமாக சீனாவுக்கு எதிராக ஆதாரங்கள் கண்டறியப்பட்டால் விளைவுகள் மிகப் பெரியதாக இருக்கும்.