தி.மு.க துணை பொதுச்செயலாளர் பதவி கனிமொழிக்கு கிடைக்குமா அல்லது வழக்கம்போல் ஒதுக்கப்படுவாரா?
தி.மு.க'வின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி தேர்வு செய்யப்படுவாரா என்பது குறித்து தி.மு.க'வினர் எதிர்பார்த்து வருகின்றனர்.
By : Mohan Raj
தி.மு.க'வின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி தேர்வு செய்யப்படுவாரா என்பது குறித்து தி.மு.க'வினர் எதிர்பார்த்து வருகின்றனர்.
தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராக வேண்டும் என கோரிக்கை தி.மு.க கட்சியினர் மத்தியில் வலுப்பெற்று வருகிறது. தி.மு.க துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை கட்சி மீதுள்ள அதிருப்தி காரணமாக ராஜினாமா செய்தார். இதனையடுத்து துணைப் பொதுச் செயலாளர் பதவியை தி.மு.க மகளிர் அணி செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை கட்சியில் எழுந்துள்ளது.
துணைப் பொதுச் செயலாளராக இ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் உள்ளனர். கட்சி விதிகளின்படி பெண் ஒருவர் துணை பொதுச்செயலாளராக இருக்க வேண்டும். அந்த இடம் தற்போது காலியாக இருப்பதால் கனிமொழி துணை பொதுச் செயலாளராக வேண்டும் என முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தி.மு.க தலைமைக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திமுக மாநிலங்களவை உறுப்பினராக 2007 மற்றும் 2013'ல் தேர்வு செய்யப்பட்டார் கனிமொழி 2019 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் தூத்துகுடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி தற்பொழுது தி.மு.க மகளிர் அணி செயலாளர் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.