Kathir News
Begin typing your search above and press return to search.

அணுஆயுதங்களை கைவிடுமா வட கொரியா? திட்டம் தீட்டும் தென்கொரியா!

அணுஆயுதங்களை கைவிடுமா வட கொரியா? திட்டம் தீட்டும் தென்கொரியா!

Saffron MomBy : Saffron Mom

  |  28 July 2021 12:45 AM GMT

தென் கொரியா மீது கம்யூனிச வடகொரியா 1950இல் படையெடுத்த பிறகு, வளர்ந்துவரும் வடகொரியாவின் ராணுவ பலத்தை தங்களுடைய மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதி அதை தடுக்கவேண்டும், குறைக்க வேண்டும் என்றே தென்கொரிய அரசாங்கங்கள் முனைந்து வந்துள்ளன. தற்போதைய தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் னும் அப்படிதான் நினைக்கிறார். 2017 இல் ஆட்சி பொறுப்பிற்கு வந்ததிலிருந்து வடகொரியாவின் அணு ஆயுத பலத்தை இல்லாமல் செய்யவேண்டும் என்பது தென் கொரியாவின் முக்கியமான வெளிநாட்டுக் கொள்கைகளின் சாராம்சமாகும்.

தனக்கு முன்பிருந்த ஆட்சியாளர்களைப் போலவே, மூனும் வடகொரியாவின் அணு ஆயுத திட்டத்தை தென்கொரியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதி, அதை முடிவுக்குக் கொண்டுவர தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறார். இதற்காக வடகொரியாவிடம் தொடர்ச்சியாக தொடர்புகள் வைத்துக் கொண்டும், அணு ஆயுத திட்டத்தை கைவிடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகளை வடகொரியாவை உணர வைக்க நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.

ஆனால் தென் கொரிய அதிபர் மூனின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது. ஆனால் வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்கள் அப்படியேதான் இருக்கிறது. தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தென் கொரியாவுடன் இணைந்து இந்த விவகாரத்தில் பணியாற்ற உறுதி அளித்துள்ளதார்.

ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் ஒன்றிணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க தென் கொரியாவிற்கு இது சரியான தருணமாகும். 1993இல் சர்வதேச அணு ஆயுத ஆற்றல் கழகம், வடகொரியா அணு ஆயுதங்களை உருவாக்கி வருகிறது என்று சந்தேகித்தது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டர் வடகொரிய அதிபர் கிம் 2 யங்கை வடகொரியாவின் தலைநகரில் சந்தித்து இருவரும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அப்போதைய தென் கொரிய அதிபர் கிம் ஜாங் நாம் இதை வன்மையாக கண்டித்ததோடு மட்டுமல்லாமல், அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் ஒரு நாட்டோடு கை கொடுக்க முடியாது என்று தெரிவித்தார். வட கொரியா, அணு ஆயுதங்களை கைவிட்ட பிறகே இரண்டு கொரியாவும் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கெல்லாம் மாறாக தற்போதைய அதிபர், மூன் ஜே தென்கொரிய அதிபர் ஆன பிறகு வட கொரியாவுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ள மிகவும் முயற்சி செய்தார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை நேரடியாக சந்தித்து 3 மாநாடுகளை நடத்தினார். 2018 இல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியாவை மிரட்டிய பொழுது, பதிலடியாக வடகொரியா அணு ஆயுத சோதனைகளை அதிகரித்தது. ஆனால் தென் கொரிய அதிபர் வெற்றிகரமாக அமெரிக்க நிர்வாகத்தை வலியுறுத்தி மறுபடியும் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைத்தார்.

வடகொரியா அணு ஆயுதங்களை அவ்வளவு சீக்கிரம் கைவிடுவதாக இல்லை. தங்களுடைய அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளது. இத்தனை காலங்களில் சில உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால் வட கொரியா எப்பொழுதும் இத்தகைய ஒப்பந்தங்களை பின்பற்றி நடந்ததில்லை. 1980களின் ஆரம்பத்திலேயே அணுஆயுத வசதிகளை கட்ட ஆரம்பித்து, 1994இல் ஒன்றிரண்டு அணு ஆயுதங்களை உற்பத்தி செய்தது. 2006இல் தரைக்கு அடியில் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டது. 2013, 16, 17களில் தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனைகளை செய்து வருகிறது.

தற்பொழுது வட கொரியாவிடம் குறுகிய, மீடியம் மற்றும் பெரிய ரேஞ்ச் மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாவும் அணுஆயுத ஏவுகணைகள் இருக்கின்றன. எனவே ஜப்பானை, தென்கொரியாவை விட தங்களுக்கு வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும் என்று வடகொரியா நம்புவதால் தற்போதைக்கு இத்தகைய சோதனைகளை கைவிட தயாராக இல்லை.

ஆனால் அமெரிக்காவிலும் ஜப்பானிலும் இருக்கும் தற்போதைய ஆட்சியாளர்கள் தென் கொரிய அதிபரின் சிந்தனையுடன் ஒத்துப்போவதால் இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா இருநாடுகளின் பாதுகாப்பிற்கும் வடகொரியாவின் அணு ஆயுதங்கள் ஒரு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

வட கொரியா மீது பொருளாதார தடைகளை விதிக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஒரு முக்கிய அங்கமாக ரஷ்யா, சீனா இருந்து வருகிறது. ஆனால் இத்தகைய தீர்மானங்களை இரஷ்யா ஒருபோதும் பின்பற்றியதில்லை. வழக்கம் போல வடகொரியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகிறது

வடகொரியா அணு ஆயுதங்களை இழப்பது அல்லது கொரிய நாடுகள் ஒன்றிணைவது தங்களுக்கு பெரிய பிரச்சினைகளை உருவாக்கும் என்று சீனா நினைக்கிறது. அது மட்டுமில்லாமல் 1961ல் வட கொரியாவும் சீனாவும் பரஸ்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி இரு நாடுகளில் ஏதாவது ஒரு நாடு தாக்குதலுக்கு உள்ளானால், மற்றொரு நாடு உடனடியாக ராணுவ மற்றும் மற்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று ஒப்பந்தத்தில் உள்ளது. இந்த இரு நாடுகளும் உலகின் வேறெந்த நாடுகளோடும் இத்தகைய ஒப்பந்தங்களை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா, வட கொரியாவின் முன்னணி வர்த்தக கூட்டாளியாக உள்ளது. 2019ல் இரு நாடுகளின் வர்த்தக மதிப்பு மட்டுமே 2.7 பில்லியன் டாலர்கள் ஆகும். எனவே தற்போதைக்கு வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடுவது சாத்தியமல்ல. ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தென்கொரிய அதிபர் முன்னெடுத்தாக வேண்டும். ஏனெனில் அவருடைய ஆட்சிக் காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News