Kathir News
Begin typing your search above and press return to search.

மண் குதிரைகள் சூழ ஆற்றில் இறங்கும் மு.க.ஸ்டாலின் - கரை திரும்புவாரா?

மண் குதிரைகள் சூழ ஆற்றில் இறங்கும் மு.க.ஸ்டாலின் - கரை திரும்புவாரா?

மண் குதிரைகள் சூழ ஆற்றில் இறங்கும் மு.க.ஸ்டாலின் - கரை திரும்புவாரா?

Mohan RajBy : Mohan Raj

  |  3 Jan 2021 6:35 PM GMT

"ஒரு கட்சி, ஆட்சி அமைக்க 117 இடங்கள்தான் தேவை. 117 இடங்களை மட்டுமே பெறுவதற்காக நாம் தேர்தலைச் சந்திக்கவில்லை. 117 இடங்களுக்காக நாம் கட்சி நடத்தவில்லை. அது பெருமை அல்ல. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற 1971-ஆம் ஆண்டுத் தேர்தலில், கருணாநிதி தலைமையேற்று நடத்திய அந்தத் தேர்தலில் 184 இடங்களில் வெற்றி பெற்று ஒரு பெரும் சரித்திர சாதனையை நாம் படைத்தோம். அந்த வெற்றியை நாம் அடைய வேண்டும்.1996-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் அடைந்த வெற்றியை அடைய வேண்டும். 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாம் அடைந்த வெற்றியை அடைய வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதி நீங்கலாக அனைத்துத் தொகுதிகளிலும் வென்றோம் அல்லவா... அந்த வெற்றியைப் பெற வேண்டும். அதுதான் உண்மையான வெற்றி. அதுதான் முழுமையான வெற்றி" தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறிய வார்த்தைகள் இவை.

தி.மு.க-வின் நிலைப்பாடு இவ்வாறு இருக்க அதன் கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க மற்றும் வி.சி.க போன்ற கட்சிகளின் நிலைப்பாடோ வேறு மாதிரி இருக்கின்றன. அதாவது 200 தொகுதி தி.மு.க நிற்கும் பட்சத்தில் தமக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் தங்களது சின்னத்தில் மட்டுமே நிற்க ம.தி.மு.க-வும், வி.சி.க-வும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் இதில் அடங்காது, காரணம் இந்திய அளவில் தமிழகத்தில் தான் காங்கிரஸ் ஓரளவிற்கு நிம்மதியான அளவில் இருக்கிறது. தி.மு.க பார்த்து கொடுக்கும் தொகுதிகளே காங்கிரஸுக்கு போதுமானதாக இருக்கும், காரணம் அந்த தொகுதிகளையும் வாங்க முரண்டுபிடித்தால் வேறு கூட்டணிக்கு செல்ல முடியாமலும், தனியாக நிற்க முடியாமலும் கிட்டதட்ட அரசியல் அனாதையாக காங்கிரஸ் மாற வேண்டிய சூழலில் உள்ளது.

இந்த நிலையில் தான் கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று புதுவையில் ம.தி.மு.க தலைவர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தி.மு.க கூட்டணியில் எங்கள் கட்சி வரும் தேர்தலில் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும்’’ என்று தெரிவித்திருக்கிறார். வைகோ மட்டுமல்ல வி.சி.க தலைவர் திருமாவளவனும்" எங்கள் கட்சி தனி சின்னத்தில் மட்டுமே போட்டியிடும் என கூறியிருக்கிறார்.

200 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றால் "மைனாரிட்டி தி.மு.க" என்ற பெயரை மாற்ற ஸ்டாலின் முயன்று வரும் வேளையில் இதுதான் சமயம் என வைகோ-வும், திருமாவளவனும் காய் நகர்த்துகிறார்கள் என கருத்து தெரிவிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். மேலும் திரு.ரஜினிகாந்த அவர்களின் அரசியல் முடிவு தி.மு.க'விற்கு ஆகச்சிறந்த கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருந்தாலும் தேர்தல் என வரும்போது அது வாக்குகளாக தி.மு.க-விற்கு மாறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

காரணம் திரு.ரஜினி அவர்களின் அரசியலை விரும்பியவர்கள் பெரும்பாலும் ஆன்மிக அரசியல் என்ற அடிப்படையை விரும்பியதால் அவர்கள் தி.மு.க'விற்கு செல்லவோ வாக்களிக்கவோ விரும்ப மாட்டார்கள் மாறாக 'இந்துக்களின் வெறுப்பு' என்ற சித்தாந்தத்தில் தி.மு.க இருப்பதால் அது கண்டிப்பாக தி.மு.க-வின் எதிரணிக்கே சாதகமாக முடியும் என்பது வல்லுனர்கள் கருத்து.

மேலும் தேர்தலை முன்னிட்டு தி.மு.க எடுக்கு அஸ்திரங்கள் அனைத்தும் மக்களிடையே சிறு சலசலப்பை கூட ஏற்படுத்தவில்லை என்பதும் மாறாக விளம்பர அரசியலை தி.மு.க செயல்படுத்துகிறது என்ற எண்ணமும்தான் வாக்காளர்களின் பார்வையாக இருக்கிறதே தவிர தி.மு.க'வின் பிரச்சாரங்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. இதை தி.மு.க தரப்பும் உணர்ந்துகொண்டுள்ளது.

இந்த நிலையில் தான் எரிகிற வீட்டில் பிடுங்குகிறதெல்லாம் என்பது போல் வைகோவும், திருமாவளவனும் தங்கள் தொகுதி, தனி சின்னம், கணிசமான வாக்குகளை வாங்கி பலன்பெறலாம் என அரசியல் காய்களை நகர்த்துகின்றனர். இது புரியாமல் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பலமான கூட்டணியுடன் வெற்றி நடை போடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். சுற்றி மண் குதிரைகள் சூழ ஆற்றுக்குள் இறங்கும் தி.மு.க கரை திரும்புவது சந்தேகம்தான்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News